அரசு கேபிள் டீவியின் இலவச செட் டாப் பாக்ஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் காயல்பட்டினத்தில் நடத்தப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் உறுதியளித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகரில் கேபிள் டிவி இணைப்புகளை - பொது மக்கள் - உள்ளூர் கேபிள் நிறுவனங்கள் மூலம் பெறுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு கேபிள் நிறுவனத்தை (TACTV) துவங்கியதில் இருந்து, உள்ளூர் கேபிள் நிறுவனங்கள் அனைத்தும், அரசு கேபிள் நிறுவனம் மூலமே - சிக்னல் பெற்று - பொது மக்களுக்கு வழங்குகின்றன.
இவ்வாறு பொது மக்களுக்கு வழங்கப்படும் இணைப்புகளுக்கு, மாதம் 70 ரூபாய் நிர்ணயம் செய்து, முறையான ரசீது வழங்கவேண்டும் என்றும், பெறப்பட்ட தொகையில் 50 ரூபாயை, உள்ளூர் கேபிள் நிறுவனம் வைத்துக்கொண்டு, மீதி 20 ரூபாய் - அரசுக்கு வழங்கப்படவேண்டும்.
இருப்பினும், பல ஆண்டுகளாக, நிர்ணயிக்கப்பட்ட 70 ரூபாய்க்கு அதிகமாகவே - பொது மக்களிடம் இருந்து, உள்ளூர் கேபிள் நிறுவனங்களால் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து, தமிழக அரசு நியமித்துள்ள அரசு கேபிள் டிவி தாசில்தாரிடம் பலமுறை புகார்கள் தெரிவிக்கப்பட்ட பின்பும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகார்கள் தெரிவிப்பவர்களை மிரட்டுவதும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வழங்க மறுப்பவர்கள் இணைப்பை துண்டிப்பதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.
இதற்கிடையே, கேபிள் இணைப்புகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படவேண்டும் என்ற மத்திய அரசு விதிமுறைப்படி, டிஜிட்டல் சிக்னல் வழங்க, அரசு கேபிள் நிறுவனம் - மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்திருந்தது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த விண்ணப்பம், சில மாதங்களுக்கு முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு - டிஜிட்டல் சிக்னல் வழங்கும் உரிமத்தையும், தற்போது அரசு கேபிள் நிறுவனம் பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து - தற்போது, அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு, தமிழக அரசு, மாநிலம் முழுவதும் இலவச SET TOP BOX வழங்கிவருகிறது. இதற்கு ஒருமுறை கட்டணமாக, 200 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
இருப்பினும், இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இன்னும் சென்றடையவில்லை.
பொது மக்களிடம் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, தனியார் நிறுவனம் ஒன்றின் SET TOP BOX யை - சில உள்ளூர் கேபிள் நிறுவனங்கள் - விற்பனை செய்துவருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு 1500 ரூபாய் பெற்று வழங்கப்பட்ட இந்த தனியார் நிறுவன SET TOP BOX, தற்போது 500 ரூபாய் பெறப்பட்டு வழங்கப்படுகிறது.
இது சம்பந்தமாக - காயல்பட்டினத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்திட, மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம், நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை வைத்திருந்தது. அதற்கு பதில் வழங்கிய, தூத்துக்குடி மாவட்ட கேபிள் டிவி தாசில்தார், ஊடகங்கள் வாயிலாக போதுமான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதாக பதில் வழங்கியிருந்தார்.
கேபிள் டிவி தாசில்தாரின் பதில் திருப்தி அளிக்காத காரணத்தால், அக்டோபர் 9 அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டு, பிரச்சனை குறித்து - விரிவாக விளக்கப்பட்டது. விபரங்களை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், விரைவில் - விழிப்புணர்வு முகாமை காயல்பட்டினத்தில் நடத்த ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 14, 2017; 10:00 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|