குருவித்துறைப் பள்ளியில் – புதுப்பிக்கப்பட்ட மத்ரஸா கட்டிடம் திறப்பு விழா கண்டது. அதன்போது, நிகழும் ரமழான் மாதத்தில் சிறப்புத் தொழுகைகளை வழிநடத்திய ஹாஃபிழ்களுக்கு சங்கை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. திரளானோர் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம்:-
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி வளாகத்தின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது துர்ரிய்யத்துல் ஹாமிதிய்யா மத்ரஸா. அதே வளாகத்தில் அடங்கியிருக்கும் மஹான் ஹாமித் லெப்பை வலிய்யுல்லாஹ் அவர்களால் இம்மத்ரஸா துவக்கப்பட்டு, பல்லாண்டு காலமாக நடத்தப்பட்டு வந்தது. இடையிடையே தொய்வுகள் ஏற்படுவதும், மீண்டும் தொடர்ந்து நடத்துவதுமாக இருந்தது.
இவ்வாறிருக்க, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மத்ரஸா வளாகம் முற்றிலுமாகச் சேதமுற்று, மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகி, நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு அவதியைத் தந்துகொண்டிருந்தது.
இதைக் கருத்திற்கொண்ட பள்ளி நிர்வாகம், இதற்காக மஹல்லா ஜமாஅத்தினரின் பங்களிப்பைப் பெற்று, அக்கட்டிடம் இடித்தகற்றப்பட்டு, புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட “மத்ரஸா துர்ரிய்யத்துல் ஹாமிதிய்யா” கட்டிடம், இன்று 00:00 மணிக்குத் திறந்து வைக்கப்பட்டது. பள்ளியின் துணைத் தலைவர் என்.எஸ்.நூஹ் ஹமீத் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆ பிரார்த்தனை செய்தார். ஹாஃபிழ் ஏ.இப்றாஹீம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
பள்ளியின் செயலாளர் கே.எம்.செய்யித் அஹ்மத் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். புதிய கட்டிடம் கட்டப்படுவதற்குத் தேவையான ஒத்துழைப்புகள் பலரிடமிருந்தும் பெறப்பட்ட விபரத்தை அவர் தனதுரையில் உள்ளடக்கி விளக்கிப் பேசினார்.
மத்ரஸாவின் அவசியம், அதில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து, அல்ஜாமிஉல் கபீர் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் – முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ உரையாற்றினார்.
மத்ரஸா துர்ரிய்யத்துல் ஹாமிதிய்யாவின் நிறுவனரான மஹான் அல்லாமா ஹாமித் லெப்பை வலிய்யுல்லாஹ் அவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை விளக்கி, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ உரையாற்றினார்.
பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ, துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.ஜாஃபர் ஸாதிக், நிகழாண்டு ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுகையைப் பொறுப்பேற்று வழிநடத்திய மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ ஆகியோரின் சேவைகளைப் பாராட்டி, பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், ஜமாஅத்தார் சார்பிலும் சங்கை செய்யப்பட்டது.
பள்ளிவாசலைத் தன்னார்வத்துடன் பராமரிப்போர், நிகழாண்டு கியாமுல் லைல் தொழுகைக்கான ஏற்பாடுகளைக் கவனித்த ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
நிகழாண்டு ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுகையை இணைந்து நடத்திய ஹாஃபிழ்களுக்கு ஹாங்காங் கம்பல்பக்ஷ் ட்ரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் ஊக்கப் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
கடைசி பத்து நாட்களில் கியாமுல் லைல் சிறப்புத் தொழுகையை வழிநடத்திய ஹாஃபிழ்களுக்கும் இதன்போது பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், அல்ஃபத்தார் ஹஜ் உம்றா சர்வீஸ், எச்.ஆர்.பில்டர்ஸ் & டோட்டல் ஹார்டுவேர்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களின் சார்பிலும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
மேற்படி தொழுகைகளை வழிநடத்திய ஹாஃபிழ்களை வாழ்த்தி, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ உரையாற்றினார்.
கழாண்டு ரமழான் மாதத்தின் அனைத்து நாட்களிலும் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள் அனைத்திலும், தம் வயதையும் விஞ்சிய ஆர்வத்துடன் முழுமையாகக் கலந்துகொண்ட இளம் சிறுவர்களைப் பாராட்டி, பள்ளியின் சார்பில் பரிசளிக்கப்பட்டது.
பள்ளி நிர்வாகத்தால் நிகழாண்டு நியமிக்கப்பட்ட இஃப்தார் கமிட்டியினருக்குத் துணையாக தன்னார்வத்துடன் களப்பணியாற்றியமைக்காகவும், கியாமுல் லைல் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோருக்கான சிற்றுண்டி ஏற்பாடுகளை முன்னின்று கவனித்துக்கொண்டமைக்காகவும் – நோனா இல்யாஸ், எம்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், அவரது மகன் அப்துல் வாஹித் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சங்கை செய்யப்பட்டது.
மவ்லவீ ஹாஃபிழ் ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அனைத்து நிகழ்ச்சிகளையும், ‘அக்கு ஹீலர்’ ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் நெறிப்படுத்தினார்.
02.30 மணியளவில் தமாம் விருந்து நடத்தப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் மஹல்லா ஜமாஅத்தினரும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
படங்களுள் உதவி:
A.M.நூர் முஹம்மத் ஜக்கரிய்யா
|