காயல் நற்பணி மன்றம் – தம்மாம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் எதிர்வரும் ஜுன் 18, 19, 20 தேதிகளில், முதலாவது காயல் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை கிழே:
காயல் வரலாற்றில் முதலாவது கண்காட்சி
ஊர் & வட்டார மக்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் நல்லெண்ணத்தோடு, காயல் நற்பணி மன்றம் – தம்மாம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்புகள் இணைந்து, நமதூரின் வரலாற்றில் முதன்முறையாக புத்தகக் கண்காட்சி ஒன்றை நடத்த உள்ளோம்.
இன்ஷா அல்லாஹ், வருகின்ற 18, 19, 20 ஜுன் 2018 (திங்கள், செவ்வாய், புதன்) தேதிகளில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில், நடைபெற உள்ள இந்த அரிய நிகழ்வில் பங்கேற்க, காயல்பட்டினம் & சுற்றுவட்டார மக்களுக்கு, பள்ளி மாணவ/மாணவியருக்கு அழைப்புவிடுக்கிறோம்.
15-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள்
சிறப்பான முறையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், 15-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கவுள்ளன.
சாகித்ய அகடெமி, பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இயல்வாகை, புதிய தலைமுறை, பூவுலகின் நண்பர்கள் – தமிழ்நாடு & புதுச்சேரி, புலம் பதிப்பகம், தேசாந்திரி பதிப்பகம், காந்தி இலக்கியச் சங்கம், தன்னறம் நூல்வெளி – தும்பி & வானம் பதிப்பகம் ஆகிய பொதுவான பதிப்பகங்களும்;
குட் வேர்ட்ஸ் & இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஆகிய இஸ்லாமிய பதிப்பகங்களும்;
குட்டி ஆகாயம், பஞ்சு மிட்டாய், கற்றல் இனிது, றெக்கை & சிலேட்டு ஆகிய சிறார் இதழ்களும்;
இயற்கை மருத்துவச் சங்கம் (காந்தி அருங்காட்சியம், மதுரை), நூற்பு & துகழ் துணிப்பையகம், சென்ட்ரல் ஃபிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியா (CFSI) & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் ஆகிய இதர அமைப்புகளும் / நிறுவனங்களும் அரங்கமைக்க உள்ளன.
நிகழ்ச்சி நிரல்
புத்தக அரங்குகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும். சிறப்பு பட்டிமன்றம், நூல் விவாதம், நூற்கள் அறிமுகம், மாணவர்களின் தப்ஸ் நிகழ்ச்சி, இறைப்புகழ் பாடல்கள், பெரியவர்களுக்கான விழிப்புணர்வு திரையிடல், குழந்தைகளுக்கான சிறப்புத் திரைப்படங்கள் என புத்தகக் கண்காட்சியோடு சேர்ந்து பல்வேறு துணை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு விருந்தினர்கள்
புத்தகக் கண்காட்சியின் ஒவ்வொரு நாட்களிலும், மாலை 04:30 மணிக்கு சிறப்பு விருந்தினர் நேரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சாகித்ய அகடெமி விருது பெற்ற தமிழின் மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான், கன்னியாகுமரி மாவட்டத்தின் முன்னணி எழுத்தாளர் மீரான் மைதீன், திருநெல்வேலி அரசு அருங்காட்சியத்தின் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் நாறும்பூநாதன் ஆகிய இலக்கிய ஆளுமைகள் நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.
பரிசுக் குலுக்கல்
நிகழ்வு நடைபெறும் மூன்று நாட்களிலும், முதலாவதாக வரும் 100 பார்வையாளர்களில் - குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படுவர்களுக்கு, சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
நிகழ்வின் வெற்றிக் கேடயம்
இந்த எளிய முயற்சியின் வெற்றிக் கேடயம், மிகுதியான மக்கள் இந்த அரிய நிகழ்வில் பங்கேற்பதும் & கூடுதலான நூற்களை கொள்முதல் செய்வதிலுமே ஆகும்.
கண்காட்சி நாட்களில் ஊரில் இருக்கும் ஒவ்வொருவரும் தத்தம் குழந்தைகளுடன் நிகழ்வில் பங்கேற்க வேண்டுகிறோம்.
உங்களுக்கும் உங்களது குழந்தைகளுக்கும் நல்ல நல்ல தலைப்புகளில் சிறப்புவாய்ந்த நூற்களையும், கைத்தறி துணி வகைகளையும், குழந்தைகளுக்கான சிறப்பு திரைப்பட வட்டுக்களையும் (DVD), மிகுதியாக வாங்கிட வேண்டுகிறோம்.
கூடவே, நகரில் இருக்கும் ஏதேனும் ஒரு பள்ளிக்கூடத்திற்கோ / மத்ரஸாவிற்கோ / நூலகத்திற்கோ புத்தகங்களை கொள்முதல் செய்து, அன்பளிப்பாக வழங்கிட ஆவணச் செய்யுங்கள்.
முகநூல் பக்கம்
பதிப்பகங்கள், சிறப்பு விருந்தினர்கள், துணை நிகழ்வுகள் போன்ற நிகழ்ச்சி குறித்த தகவலுக்கு, புத்தகக் கண்காட்சிக்கான முகநூல் பக்கத்தை விரும்பி, பின் தொடருமாறு வேண்டிக்கொள்கிறோம்.
https://facebook.com/kayalbookfair2018
கூடுதல் தகவலுக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினரை கீழுள்ள எண்களில் தொடர்புகொள்ளவும்:
99628 41761 / 89037 20734 / 99020 01223
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|