காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி மையவாடிக்குச் சுற்றுச்சுவர் அமைக்குப் பணியில் – எஞ்சிய பணிகளுக்கு 1.5 லட்சம் ரூபாய் மட்டும் தேவைப்படுவதாகவும், இதற்காக உதவிடுமாறும் பொதுமக்களைப் பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, அப்பள்ளியின் தலைவர் ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான், ‘டேக் அன் வாக்’ என்.டீ.இஸ்ஹாக் லெப்பை ஜுமானீ ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:-
அன்பார்ந்த சகோதர-சகோதரியருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) இறையருளால் இம்மடல் தங்களைப் பூரண உடல் நலமுடனும், தூய இஸ்லாமிய உணர்வுகளுடனும் சந்திக்கட்டுமாக.
நமது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் அறப்பணிகள் அனைத்தும், தங்கள் யாவரின் மேலான ஒத்துழைப்புகளுடன் இறையருளால் இனிதே நடைபெற்று வருகின்றன, அல்ஹம்துலில்லாஹ்.
நமது இப்பள்ளியைச் சுற்றி சுமார் 80 மீனவ ஏழை முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் பொருளாதாரத்தில் மட்டுமின்றி, மார்க்க - உலகக் கல்வியறிவிலும் பின்தங்கியே உள்ளனர். நம் பள்ளிக்கென நிரந்தர வருமானமும் எதுவும் இல்லாததால், அதன் அறப்பணிகளுக்கான பொருளாதாரத் தேவைகளை தங்களைப் போன்ற மேன்மக்களின் ஒத்துழைப்புகளுடனேயே செய்து வருகிறோம்.
இப்பள்ளியின் இமாம் - முஅத்தின் பொறுப்புகளைக் கவனிக்கவும், பள்ளியைச் சுற்றியுள்ள சிறாருக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் பணிகளைச் செய்வதற்குமாக, மாத ஊதிய அடிப்படையில் – வெளியூரைச் சேர்ந்த ஒருவரும், உள்ளூரைச் சேர்ந்த ஒருவரும் இருந்து வருகின்றனர்.
இவை ஒருபுறமிருக்க, நம் பள்ளிக்குச் சொந்தமாக மையவாடி இல்லாதிருந்ததால், குருவித்துறைப் பள்ளி நிர்வாகிகளின் உதவியுடன், அப்பள்ளி மையவாடியிலேயே – மிகுந்த சிரமங்களுக்கிடையில், நெடுந்தொலைவுக்கு ஜனாஸாவைத் தூக்கிச் சென்று அடக்கம் செய்து வந்தோம்.
நம் பள்ளியையொட்டியே மையவாடி அமைந்தால், இக்குறை களையப்படும் என்பதோடு, இப்பகுதி மக்களுக்கு மரணச் சிந்தனையும், இறையச்சமும் அதிகரித்திட அது முக்கிய காரணியாகவும் அமையும் என்று கருதியதன் அடிப்படையில், பள்ளியையொட்டி வடபுறத்தில் உள்ள காலி நிலத்தை விலைக்கு வாங்கி, அந்நிலத்தைச் சமப்படுத்தி மையவாடி அமைக்கப்பட்டுள்ளதோடு – நாய், பன்றிகள் உள்ளே நுழையாதிருக்கவும், ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்கவும் சுற்றுச் சுவர் அமைக்கும் பணியையும் தற்போது இறையருளால் செய்து முடித்துள்ளோம்.
இவ்வகைக்காக ஏற்கனவே கனிசமான தொகை செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சுவர் அமைப்பின் எஞ்சிய பணியைப் பூர்த்தி செய்திட இன்னும் 1.5 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதாக கடந்தாண்டு – காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் மூலம் கோரிக்கை வைத்தும், தேவை இன்னும் பூர்த்தியாகாத நிலையில், எங்களுக்கு அறிமுகமானவர்களிடம் கடன் அடிப்படையில் பணத்தைப் பெற்று பணியைப் பூர்த்தி செய்துள்ளோம்.
எனவே, ஏழை எளிய மக்களைக் கொண்ட இப்பள்ளியை தங்கள் மஹல்லா பள்ளியாகக் கருதி, இவ்வகைக்காக தங்களது மேலான பங்களிப்பை தாராளமாகத் தந்துதவி, நன்மைகளைப் பன்மடங்காக அள்ளித் தரும் இப்புனித ரமழான் மாதத்தில் - ஸதக்கத்துன் ஜாரியா எனும் நிலையான நற்கூலியைப் பெற்றிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நம் யாவரின் ஹலாலான நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி, ஈருலக வெற்றிகளை நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன்.
மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கும்:
‘ஜுவெல் ஜங்ஷன்’ K.அப்துர்ரஹ்மான் (தலைவர்) - கைபேசி எண்: +91 97901 35272
வங்கிக் கணக்கு விபரம்:
ICICI A/c. No.: 61530 150 2714
Kayalpatnam Branch
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |