நிகழும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
குருவித்துறைப் பள்ளியில், ரமழான் 20ஆம் நாளன்று (04.06.2018. திங்கட்கிழமை) தராவீஹ் தொழுகை நிறைவுற்றதும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னையிலுள்ள திருக்குர்ஆன் ஆராய்ச்சி மைய நிறுவனர், முன்னாள் சுப்பிரமணியன் ராஜன் – இந்நாள் முனைவர் எஸ்.உமர் முக்தார், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அறிவியல் பார்வையில் இஸ்லாம் எனும் தலைப்பில் 40 நிமிடங்கள் உரையாற்றினார்.
இதில், குருவித்துறைப் பள்ளி மஹல்லா ஜமாஅத்தினர், நகரின் இதர பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில், அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பரப்புரைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாகவும், விரும்புவோர் – எந்தச் செலவினமுமின்றியே தன்னைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தனதுரையில் கூறியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சிக்கு, ஐக்கிய சமாதானப் பேரவை சார்பில் அதன் நிறுவனர் தலைவர் மவ்லவீ டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஏற்பாடுகளைச் செய்து, அறிமுகவுரையும் ஆற்றினார்.
|