செளதி அரேபியா-ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 40-வது பொதுக்குழு, மற்றும் 112-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் :-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 40-வது பொதுக்குழு மற்றும் 112-வது செயற்குழு கூட்டம் கடந்த 01.06.2018 ரமலான் பிறை 16 வெள்ளிக்கிழமை மாலை 07:00 மணியளவில் ஜித்தா – ஷரஃபிய்யாவில் அமைந்துள்ள இம்பாலா பேரடைஸ் உணவக உள்ளரங்கில் வைத்து மிக சிறப்புடன் நடந்தேறியது.
இஃப்தார் நோன்பு துறப்பு:
காயலின் சுவைமிகு கறிகஞ்சி, பழங்கள் மற்றும் பொரியல்களுடன் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் புனித ரமலான் நோன்பு திறந்து வல்லோன் இறைவனை போற்றி புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்தபட்டது. அதன் பின் மஃரிப் தொழுகைதனை அதே இடத்தில் கூட்டாக நிறைவேற்றிய பிறகு, காயலின் இஞ்சி கலந்த தேனீர் அருந்திய சுவையுடன் 40-வது பொதுக்குழு கூட்டம் இனிதே ஆரம்பமானது.
இக்கூட்டதிற்கு துபாயில் இருந்து வந்து கலந்துகொண்ட இம்மன்றத்தின் ஆலோசகர் சகோ.எம்.எம். மூஸா சாஹிப், மற்றும் யான்பு சகோ.ஆதம் சுல்தான், சகோ. ஓ.எல்.சம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகிக்க மன்றத் தலைவர் சகோ.குளம்.எம்.ஏ.அஹமது முஹ்யித்தீன் தலைமை ஏற்று நடாத்த, தாயகத்திலிருந்து உம்ரா கடமையை நிறைவேற்ற வந்த சகோ. ஹாபிழ் அப்துல்ரகுமான் அல்தாப் கிராத் ஓதி துவக்க, வந்திருந்த அனைவரையும் சகோ. எம். டபிள்யூ. ஹாமித் ரிபாய் அகமகிழ வரவேற்க கூட்டம் ஆரம்பமானது.
இஸ்லாமிய பாடல்:
தனது இனிய குரலால் நல்ல அழகிய இஸ்லாமிய பாடல் ஒன்றை பாடி வந்திருந்தோரை உற்சாகத்தில் ஆழ்த்தினர் சகோ. எப். யாகூத் அர்ஸ்.
தலைவர் உரை:
இந்த கூட்டத்திற்கு ஜித்தா, மக்கா மற்றும் யான்பு என பல இடங்களில் இருந்தும், வேலை பளுவிற்கு மத்தியில் வந்து ஆர்வத்தோடு நாம் எல்லோரும் இங்கு ஒன்று கூடிவுள்ளோம் இன்று இந்த 40-வது பொதுக்குழுவையும் 112-வது செயற்குழுவையும் ஒன்றாக சிறப்புடன் நடத்திக் கொண்டு இருக்கிறோம் என்றால் எல்லாம் வல்ல அல்லாஹுவின் கருணையுடன், உங்கள் அனைவருடைய சீரிய ஒத்துழைப்பும், சிறந்த பங்களிப்பும் தான் என்பதை மறுக்க முடியாது. அந்த பங்களிப்பின் உதவியை கொண்டுதான், நம் ஊர் ஏழை மக்களுடைய தேவை அறிந்து கல்வி, மற்றும் மருத்துவம் இவைகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முடிகிறது. அது தொடர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இன்று கலந்துள்ளோம். நம் மன்றத்தின் பல நல்ல நோக்கங்கள் இறையருளால் இனிதே நிறைவு பெற்று வருவதும், வழமையான உதவிகள் அல்லாது இன்னும் பல உதவிகளை நம் மன்றம் செய்து வருவதும், நம் மன்ற உறுப்பினர்கள் செலுத்தி வரும் சந்தா மற்றும் நன்கொடைகளை கொண்டுதான் என்பதை இங்கே நினைவு கூற ஆசைப்படுகின்றேன். மேலும் நம் ஊர் இறை இல்ல பணியாளர்களுக்கு உங்களின் தாராள நன்கொடைகளை தந்து அவர்களின் துஆவை பெறுவோமாக என்று கூறி மேலும் உங்களின் தாராள நிதி உதவியால் இந்த மன்றம் இன்னும் தொடர்ந்து தோய்வில்லாமல் நல்ல பணி செய்திட உங்களின் நல் ஆதரவு தேவை என்று கூறி பங்களிப்பு செய்யும் உங்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் ஈருலகிலும் நற்பாக்கியத்தை தருவானாக என்று துஆ செய்து தனதுரையை நிறைவு செய்தார். தலைமை பொறுப்பு வகித்த சகோ.குளம்.எம்.ஏ.அஹமது முஹ்யித்தீன்.
கருத்துரை :
அருமையான இந்த இப்தார் நிகழ்வில் நான் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். கடந்த முறை கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எல்லோரும் இங்கு நம் ஊர் ஏழை எளிய மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கூடி இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. ஊரில் இருந்து வரும் செய்தியை கேள்விப்படும்போது, அம்மக்கள் தன் தேவைக்கு ஊரில் உள்ள தனவந்தர்களை நாடும் முன், காயல் நலமன்றங்களை தான் முதலில் நாடுகிறார்கள் என்பதை அறிய முடிகிறது, அந்த அளவிற்கு மன்றங்களின் மீது நம்பிக்கை அவர்கள் மனதிலே பதிவாகியுள்ளது. ஏன் என்றால் நாம் உடனே உதவ முன் வருகின்றோம் இது எல்லாம் வல்ல அல்லாஹுவின் பெரும் கருணை என்றுதான் சொல்வேன். எப்படி எனில் நாம் மண்டை பிளக்கும் வெய்யிலிலும், உதிரம் உறையும் குளிரிலும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த ஒரு பகுதியை நம் ஊர் ஏழைகளுக்கு கல்விக்கும், மருத்துவத்திற்கும் வழங்கி நாம் சந்தோஷம் கொள்கிறோம் என்றால் எப்பேர் பெற்ற ஈகை குணம் நம்மிடத்திலே உள்ளது. இது இன்று நேற்றல்ல பரம்பரை பரம்பரையாக தொடர்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! இன்னும் வாழையடி வாழையாக தொடர்ந்து வல்ல அல்லாஹுவின் நற்பேற்றை பெறுவோமாக ! என்று கூறி தனதுரையை நிறைவு செய்து அமர்ந்தார். முன்னிலை வகித்த சகோ.ஆதம் சுல்தான் அவர்கள்.
மன்ற செயல்பாடு :
கடந்த செயற்குழு கூட்டத்தின் நிகழ்வினை சுருக்கமாக தந்து, ஷிபா மருத்துவ அமைப்பு மற்றும் இக்ரா கல்வி சங்கம், இவைகளுக்கு நாம் நிதி உதவி செய்து வருவது போல் நம் ஊரில் அமைந்து இருக்கும் துளிர் பாடசாலைக்கு செலவினங்கள் மிக அதிகமாக வருவதை சுற்றிக்காட்டி உலக காயல் நலமன்றங்கள் நிதி உதவி செய்தால் மிக உதவியாக இருக்கும் என்று எதிர் பார்ப்பதாகவும், இம்மன்றம் மூலம் நாம் கடந்த முறை நிதி அளித்தோம் என்பதையும் நினைவு படுத்தி, இது சம்பந்தமான இதர தகவல்களை விபரமாக தெரிய தந்தும், மற்றும் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களில் இறை பணியாற்றும் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு இரு பெருநாட்களின் சிறப்பு ஊக்க உதவியளிக்கும் திட்டத்திற்காக வேண்டி நன்கொடைகளை தந்து உதவும் படியும் மற்றும் ஏனைய விபரங்களையும் அனைவருக்கும் விளக்கமாக தெரியபடுத்தியதுடன் இந்த இமாம் முஅத்தின் அவர்களுக்கு நாம் கடந்த ஆண்டுகளில் உதவிய பொழுது அதனை அவர்களிடம் கையளிக்கப்பட்ட சமயம் அவர்கள் அனைவரும் மன நெகிழ்ச்சியுடன் பெற்று இதற்காக உதவிய, உழைத்த நல்லுள்ளங்களுக்கு நாயன் அல்லாஹ்விடம் நெஞ்சுருக பிரார்த்தித்த நல்ல செய்தியையும் மன்றச்செயலர் சகோ சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் எடுத்துரைத்தார்.
அடுத்து பேச வந்த செயலாளர் சகோ. எம்.ஏ. செய்து இப்ராஹிம் தனதுரையில். இந்த நமது ஜித்தா காயல் நலமன்ற பணிகலெல்லாம் நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை, எல்லாவற்றையும் தொடர்ந்து அவதானித்து கொண்டு இருக்கின்டீர்கள், சிறப்பான இந்த பணிகளை நாம் ஊருக்காக செய்து கொண்டு இருக்கிறோம் என்றால் அது உங்களின் மேலான ஒத்துழைப்பும், பங்களிப்பும் மற்றும் இறைவனின் பெரும் கிருபையும் கொண்டுதான் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு செயற்குழுவிலும் நம் ஊர் ஏழை மக்களுக்காக பல உதவிகளை நாம் இம்மன்றம் மூலம் செய்து வருகிறோம். குறிப்பாக இந்த புனித ரமலானிலே நாம் செய்யும் உதவியால் அவர்கள் மனம் உருகி கேட்கும் துஆ எந்த வித திரைமறைவின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அது மாத்திரமில்லை இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு நாம் வருடம் வருடம் தாய்லாந்து காயல் நல மன்றத்துடன் இணைந்து நோன்பில் நிதி வழங்கி வருகிறோம்.
நாம் கூட நமது வேலைக்கு செல்வதில் தாமதபடுத்தலாம் ஆனால் இமாம், முஅத்தீன்கள் சரியான நேரத்தில் இறை இல்லத்திற்கு சென்று தனது பணிகளை செவ்வனே செய்கின்றார்கள். மேலும் தனக்கு கிடைக்கும் மிக குறைந்த வருவாயை கொண்டு தனது குடும்பத்தின் செலவினங்களை கஷ்டப்பட்டு சமாளிக்கின்றார்கள். வருடத்தில் ஒரு முறைதான் அவர்களுக்கு நாம் இந்த நிதி உதவியை செய்து வருகிறோம் ஆகவே நாம் அவர்களுக்காக தாராள மனதுடன் நிதி உதவி செய்து அவர்களின் கஷ்டத்தில் பங்கு கொண்டு அன்னவரின் துஆக்களை பெற்று நாம் அல்லாஹுவின் திருப்பொருத்தத்தை அடைவோமாக. என்று அவர்களின் குடும்ப நிலைகளை விளக்கியதோடு, உங்களிடம் ஒரு சிறு துண்டு காகிதம் கையளிக்கப்படும் அதில் நீங்கள் தங்கள் பெயர் மற்றும் வழங்கப்படும் தொகைதனையும் எழுதிய பின்னர் பொருளாளரிடம் கொடுத்து கொள்ளவேண்டியது என்று வேண்டிக்கொண்டு அடுத்து துளிர் பாடசாலை எவ்வாறு செயல்படுகிறது, அதன் செலவினங்கள் பற்றியும், அந்த துளிருக்கும் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு தனதுரையை நிறைவு செய்து அமர்ந்தார். இமாம், முஅத்தின் வகைக்கு உறுப்பினர்கள் தந்தவைகளை எல்லாம் கூட்டி கணக்கிட பெருந்தொகை சேர்ந்தது. அல்ஹம்துலில்லாஹ்!
நிதி நிலை:
கடந்த செயற்குழு கூட்டத்தில் மருத்துவம் மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கிடு செய்தது, சந்தா மற்றும் நன்கொடைகளின் தற்போதைய வரவு மற்றும் இருப்பு விபரங்களை கூறியதுடன், மன்றம் ஆரம்பித்து இதுவரையில் இந்த மன்றம் நம் மக்களுக்கு வழங்கிய மொத்த தொகையின் விபரம், மேலும் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு கடந்த வருடங்களில் வழங்கிய தொகை என்று பட்டியலிட்டு விபரமாக மன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறினார். பொருளாளர் சகோ. எம். எஸ். எல். முஹம்மது ஆதம்.
சகோ.அப்துல்ரஹ்மான் மற்றும் சில மன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை சுருக்கமாக கூறி தனதுரையை நிறைவு செய்து அமர்ந்தார்கள்.
அதனை அடுத்து மன்றத்தின் 112-வது செயற்குழு ஆரம்பமாகியது. காலநேரத்தை கணக்கில் கொண்டு மிக சுருக்கமாக நடைபெற்றது. ஷிபா மருத்துவ அறக்கட்டளை மூலம் வந்த மனுக்களை நாம் எவ்வாறு கையாளுகிறோம். பயனாளிகளுக்கு எப்படி நிதி வழங்கப்படுகிறது. என்ற விபரங்களை தலைவர் குளம்.எம்.ஏ.அஹமது முஹ்யித்தீன் மற்றும் செயலாளர் சகோ.எம்.ஏ.செய்து இபுராஹிம் கலந்து கொண்ட உறுபினர்களுக்கு விளக்கத்தை தந்து, மனுக்கள் உறுப்பினர்கள் முன்னிலையில் பர்சீலிக்கப்பட்டு, உறுப்பினர்களின் ஆலோசைப்படி நோய் தன்மை அறிந்து தொகை நிர்ணயம் செய்து நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது.
நன்றி உரை:
இனிய இந்நிகழ்வில் பெருந்திரளாக ஜித்தாவின் பல பகுதியில் இருந்து வந்து கலந்து சிறப்பித்தவர்கள் மற்றும் மக்கா, மதீனா, யான்பு ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்த உறுப்பினர்கள், தம்மாமில் இருந்து வந்த சகோதர்கள், மற்றும் சிறப்பு விருந்தினர், அனுசரணை வழங்கிய மன்றத்தலைவர் சகோ. குளம். எம்.ஏ.அஹமது முஹ்யித்தீன், குறிப்பாக இமாம், முஅத்தின் இவர்களுக்கு தாராள மனதுடன் வாரி வழங்கி ஒத்துழைத்த அன்பு காயல் சொந்தங்கள் ஆகிய யாவருக்கும் சகோ. சோல்ஜர் எஸ்.டி. செய்கு அப்துல்லாஹ் மன்றத்தின் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளை கூறினார். சகோ. அல்ஹாபிழ் அபுதாஹிர் அவர்கள் பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இறையருளால் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
பிரார்த்தனை:
புண்ணியமிகுந்த இந்த ரமலான் மாதத்தில் உயர்ந்த எண்ணத்தோடும் வல்லவனின் அருள்நாடியும் பல பணிகளுக்கு மத்தியில் நாமெல்லாம் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். நம்மை இங்கு ஒன்று கூடி உயர்வான நோக்கத்தில் சந்திக்க வைத்த வல்லோன் அல்லாஹ்வை போற்றி புகழும் இந்நேரத்தில் இச்சிறப்பான சங்கை மிகுந்த மாதத்தில் நம் மன்றத்தின் அனைத்து நற்பணிகளையும், நம்முடைய நல்லமல்களையும் வல்லவன் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவும், பிணியுற்றோர் சுகம் பெறவும், வறியோர்கள் வளம் பெறவும், நோய் நொடியற்ற தூய்மையான ஊராக நம் நகர் அமைந்திடவும், இம்மையிலும் மறுமையிலும் அவனது அருளை பெற்றிடவும், ஏகன் இறையோனிடம் நாம் இருகரம் ஏந்தி துஆ செய்வோம், என்று கூட்டத்தில் கலந்துகொண்டோர் அனைவரின் பிரார்த்தனையாக இருந்தது.
தீர்மானம்:
1 – உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான ஷிபாவின் மூலம் வந்த மனுக்களுக்கு உறுப்பினர்கள் முன்னிலையில் நோயுற்ற 12 பயனாளிகளுக்கு நிதி வழங்க முடிவு செயப்பட்டது.
2 - நம் காயல் நகரில் உள்ள அனைத்து இறை இல்லங்களில் இறை பணியாற்றும் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு தாய்லாந்து காயல் நல மன்ற வழிகாட்டல்படி அளிக்கப்படும் இரு பெருநாட்களின் சிறப்பு ஊக்க உதவியில் நம் மன்றத்தின் பெரும் பங்களிப்பாக மன்ற உறுப்பினர்கள் மனமுவந்து தாராளமாக அளித்த பெரும் நிதியில் இருந்து இவ்வாண்டும் மன்றம் மூலம் வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
3 – நம் ஊரின் அனைத்து பாடசாலையிலும் இவ்வாண்டு கல்வி கற்று தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவிகள் அனைவர்களையும் இம்மன்றம் வெகுவாக பாராட்டி வாழ்த்துகிறது.
4 - நம் மன்றத்தின் 113-ஆவது செயற்க்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஜித்தா ஷரபிய்யா இம்பால கார்டனில் இரவு 7-00
முதல் 9-30 வரை நடைபெறும.
இந்நிகழ்வின் இறுதி வரை கலந்து கொண்ட அனைவருக்கும், காயல் நெய்ச்சோருடன் கோழிக்கறி மற்றும் சம்பலுடன் சகர் நேர உணவிற்காக, பொதியாக விநியோகிக்கப்பட்டது.
சிறப்பான இந்த கூட்டத்தினை மிக அழகாக நெறிபடுத்தி தந்தவர் சகோ.எஸ்.ஹச்.அமீர் சுல்தான்.
சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் முழு அனுசரணையில் நடந்தேறிய, இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை சகோ சட்னி எஸ்.ஏ.கே.முஹம்மது உமர் ஒலி தலைமையில் பொறியாளர் ஜி.எம். முஹம்மது சுலைமான், சகோ.தொல்சாப் டி.எம்.எல். முஹம்மது லெப்பை சகோ. எம்.எஸ்.அபூபக்கர் சித்திக் பொறியாளர் சட்னி. எஸ்.எம். செய்கு அப்துல்காதர் ஆகியோர் நல்லமுறையில் செய்திருந்தார்கள்.
செய்தியாக்கம் & புகைப்படங்கள்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
அரபி எம்.ஐ.முஹம்மது சுஹைப்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
01.06.2018.
|