ரமழான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் இரவு நேரங்களில் கூடுதலாக விழித்திருந்து வணக்க வழிபாடுகள் செய்வது அதிக நன்மைக்குரியதாக இஸ்லாம் கூறுகிறது. அதன்படி, காயல்பட்டினத்திலுள்ள பல பள்ளிவாசல்களில் அந்நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழமை.
நிகழாண்டு ரமழான் கடைசி பத்து நாட்களை முன்னிட்டு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் வழமை போல நள்ளிரவில் கியாமுல் லைல் எனும் சிறப்புத் தொழுகை நடத்தப்படுகிறது.
குருவித்துறைப் பள்ளியில், சுமார் 31 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டில் கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இனி வரும் ஆண்டுகளிலும் தொய்வின்றித் தொடர்ந்து நடத்திட அதன் நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
04.06.2018. அன்று ரமழான் 19இல் துவங்கி, 13.06.2018. அன்று ரமழான் 28ஆம் நாள் வரை, அன்றாடம் 01.00 மணிக்குத் துவங்கி, 03.00 மணி வரை இச்சிறப்புத் தொழுகை நடத்தப்படுகிறது. குருவித்துறைப் பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த – திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள 60 ஹாஃபிழ்கள், ஒரு நாளைக்கு 6 பேர் வீதம் இத்தொழுகையில் இமாம்களாக இருந்து வழிநடத்தி வருகின்றனர். மொத்தம் 30 பகுதிகளைக் கொண்ட திருக்குர்ஆனிலிருந்து - நாளொன்றுக்கு 3 பகுதிகள் (ஜுஸ்உகள்) வீதம் இத்தொழுகையில் ஓதப்பட்டு, நிறைவு நாளன்று முழு குர்ஆனும் ஓதி முடித்து தமாம் செய்யப்படவுள்ளது.
அன்றாடம் தொழுகை நிறைவுற்றதும் அதில் பங்கேற்றோருக்கு சிறுகடி, குடிப்பு பரிமாறப்படுகிறது.
முன்னதாக, குருவித்துறைப் பள்ளியில் இச்சிறப்புத் தொழுகையை வழிநடத்தும் ஹாஃபிழ்களுக்கு, தொழுகை நிகழ்முறை குறித்து விளக்குவதற்கான சிறப்புக் கூட்டம், 03.06.2018. அன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில், கியாமுல் லைல் ஒருங்கிணைப்புக் குழுவினரான மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை ஜுமானீ பாக்கவீ, பிரபு முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஃபிழ் கே.எம்.இஃப்திகாருத்தீன் ஷெய்க் அப்துல்லாஹ் ஆகியோர் – விதிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
ஏற்பாடுகளை, பள்ளி நிர்வாகிகளான என்.எஸ்.நூஹ் ஹமீத், எஸ்.ஏ.முஹம்மத் ஸாலிஹ், கே.எம்.செய்யித் அஹ்மத், கியாமுல் லைல் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோருள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர். |