காயல்பட்டினம் அரசு மருத்துவமனை தொடர்பான - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் கோரிக்கைகள் அரசாணையாக வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அம்மருத்துவமனை 24 மணி நேர சேவையை நோக்கி நகரத் துவங்கியுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை - மருத்துவர் தெருவில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
பல் மருத்துவர் உட்பட ஐந்து மருத்துவர்கள் பணியாற்ற அனுமதி பெற்றிருந்த இம்மருத்துவமனையில் ஒரு மருத்துவரே பணியாற்றி வந்த சூழல் - சில மாதங்களுக்கு முன்னர் வரை இருந்தது.
இது தொடர்பாக - கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடப்பது என்ன? குழுமம் மேற்கொண்டுவந்த தொடர் முயற்சியின் விளைவாக - கடந்த ஜூன் மாதம், இரண்டாவது மருத்துவரும், கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாவது மருத்துவரும், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நான்காவது மருத்துவரும் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நியமனம் செய்யப்பட்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இதற்கிடையே - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படவேண்டும், கூடுதல் நிபுணர் மருத்துவர்கள் இருவர் நியமனம் செய்யப்பட்டு, 24 மணி நேர சேவை வழங்கப்படவேண்டும் என்று - நடப்பது என்ன? குழுமம், கடந்த 1.5 ஆண்டுக்கும் மேலாக - தமிழக அரசின் சுகாதார துறைக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது.
இது சம்பந்தமாக - நடப்பது என்ன? குழுமத்திற்கு, நவம்பர் 22, 2017 தேதிய கடிதம் மூலம் எழுத்துப்பூர்வ பதில் வழங்கியிருந்த மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் (DMS) டாக்டர் இன்பசேகரன், நடப்பது என்ன? குழுமத்தின் நவம்பர் 2, 2016 கோரிக்கை கடிதம் அடிப்படையில் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக இரு மருத்துவர் பொறுப்பு உருவாக்க, அரசுக்கு பிரேரணை அனுப்பப்பட்டு - அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். [கடிதம் இணைக்கப்பட்டுள்ளது]
இறைவனின் கிருபையால், பிப்ரவரி 14, 2018 அன்று தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலமாக அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. [G.O. (Ms) No.57 dated 14.02.2018]
அத்துறையின் முதன்மை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS வெளியிட்டுள்ள அந்த அரசாணை வாயிலாக, காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக இரு நிபுணர் மருத்துவர்கள் பொறுப்பு உருவாக்கப்பட்டது. அதில் ஒன்று - மகப்பேறு நிபுணர் (OBSTETRICS & GYNAECOLOGY) என்றும், மற்றொன்று - காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் (ENT) அல்லது கண் மருத்துவர் (OPTHTHALMOLOGY) என்றும் அந்த அரசாணை தெரிவிக்கிறது. [அரசாணை நகல் இணைக்கப்பட்டுள்ளது]
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொறுப்பிற்கு, இரு நிபுணர்கள் மருத்துவர்கள், காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு விரைவில் நியமனம் செய்யப்பட, நடப்பது என்ன? குழுமம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூன் 2, 2018; 6:00 pm]
[#NEPR/2018060202]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|