காயல்பட்டினத்தில் இதுவரை 3 தனியார் பள்ளிக்கூடங்களுக்கு அரசு கல்விக் கட்டண நிர்ணய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஞ்சிய பள்ளிக்கூடங்களுக்கான கட்டண நிர்ணயம் இரு வாரங்களில் வெளியாகும் என “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் கல்விக் கட்டண நிர்ணயக் குழு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவலறிக்கை:-
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க 2009-ம் ஆண்டு, Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act என்ற சட்டம் அப்போதைய தமிழக அரசால் இயற்றப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 10,000 தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணங்களை, பள்ளிக்கூடங்களிடம் கலந்தாலோசனை செய்து, அரசே நிர்ணயம் செய்யும். அந்த கட்டணத்திற்கு மேல் வேறு எந்த கட்டணமும் வாங்க கூடாது.
தற்போது - தூத்துக்குடி மாவட்டத்தின் 148 தனியார் பள்ளிக்கூடங்களின் மூன்று ஆண்டுகளுக்கான (2017-2018, 2018-2019, 2019-2020) கல்விக்கட்டணம் விபரம், தமிழக அரசு தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணம் நிர்ணயம் குழு (Tamil Nadu Private Schools Fee Determination Committee) மூலம் வெளியாகியுள்ளன.
இந்த சட்டத்தின் கீழ் வரும், காயல்பட்டினம் சார்ந்த 3 பள்ளிக்கூடங்களுக்கான கல்விக்கட்டணம் விபரங்கள், இன்றைய தேதி வரை வெளியாகியுள்ளன. அவை - சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, எல்.கே. மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி மற்றும் காட்நீதன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி ஆகும்.
இருப்பினும் - காயல்பட்டினம் நகர எல்லைக்குள் அமைந்துள்ள, கீழ்க்காணும் 6 பள்ளிக்கூடங்களின் கல்விக்கட்டணம் விபரம், அரசினால் இதுவரை வெளியிடப்படவில்லை.
(1) அல் அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி
(2) ரஹ்மானியா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி
(3) ஸ்ரீ சத்ய சாய் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி
(4) கமலாவதி மேனிலைப்பள்ளி
(5) முஹைதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி
(6) சுபைதா மேனிலைப்பள்ளி
பள்ளிக்கூடங்கள், தங்கள் புதிய கல்வியாண்டை இன்று துவக்கியுள்ளதை தொடர்ந்து, எஞ்சிய பள்ளிக்கூடங்களின் கல்விக்கட்டணம் விபரங்கள் எப்போது வெளியாகும் என தமிழ்நாடு தனியார் பள்ளிக்கூடங்கள் கல்விக்கட்டணம் நிர்ணயக்குழு (TAMIL NADU PRIVATE SCHOOLS FEE DETERMINATION COMMITTEE) அலுவலர்களிடம், நடப்பது என்ன? குழுமம் இன்று விசாரித்தது.
அதற்கு பதில் வழங்கிய சம்பந்தப்பட்ட அதிகாரி, காயல்பட்டினத்தில் உள்ள எஞ்சிய ஆறு பள்ளிக்கூடங்களில் ஒரு பள்ளிக்கூடம் மட்டும் (அல் அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி) விபரங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த பள்ளிக்கூடத்திற்கான கல்விக்கட்டணம் விரைவில் வெளியிடப்படும் என்றும், எஞ்சிய பள்ளிக்கூடங்களுக்கு உடனடியாக தகவல்கள் சமர்ப்பிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இரு வாரங்களுக்குள் - மாநிலத்தின் அனைத்து பள்ளிக்கூடங்களின் கல்விக்கட்டணம் விபரங்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூன் 1, 2018; 3:45 pm]
[#NEPR/2018060103]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|