தன் பள்ளி மாணாக்கருக்கு சேர்க்கை வழங்கிய பிறகுதான் பிற பள்ளி மாணாக்கருக்கு சேர்க்கை அனுமதி வழங்க வேண்டும் என – பேயன்விளையிலுள்ள காயல்பட்டினம் – ஆறுமுகநேரி மேனிலைப் பள்ளிக்கு, தூத்துக்குடி மாவட்ட தலைமைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
திருச்செந்தூர் தாலுகா காயல்பட்டினம் - ஆறுமுகநேரி மேனிலைப்பள்ளியில் (K.A. Higher Secondary School) தற்போது பன்னிரண்டாம் வகுப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த சேர்க்கையின் போது – அந்த பள்ளிக்கூடத்தில் படித்து, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் – குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக, பதினொன்றாம் வகுப்பு சேர்க்கை மறுக்கப்படுகிறார்கள் என புகார்கள் எழுந்தன.
மேலும் அவர்களை வேறு பள்ளிக்கூடத்தில் சேரவும், வேறு படிப்பு படிக்கவும் பள்ளிக்கூடம் நிர்பந்தம் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.
இது தவிர – மாணவர் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல், மதிப்பெண் அடிப்படையில் இந்தெந்த பிரிவுகளில் தான் சேர வேண்டும் எனவும் நிர்பந்தம் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இப்புகார்களை தொடர்ந்து, நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், தூத்துக்குடியில் தலைமை கல்வி அலுவலரை (CHIEF EDUCATIONAL OFFICER) சந்தித்து, இது சம்பந்தமாக விளக்கம் கோரினர்.
சொந்த பள்ளி மாணவர்களுக்கு இடம் மறுக்கக்கூடாது என தெரிவித்த தலைமை கல்வி அலுவலர், அவர்களுக்கு இடம் ஒதுக்கியபின்னரே - பிற பள்ளிக்கூட மாணவர்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும் என காயல்பட்டினம் - ஆறுமுகநேரி மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு தற்போது அறிவுறுத்தியுள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 30, 2018; 5:30 pm]
[#NEPR/2018053001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|