ஸ்டெர்லைட் தாமிர உருக்குத் தொழிற்சாலையை எதிர்த்து – 22.05.2018. செவ்வாய்க்கிழமையன்று தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதில் 13க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்துறையின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, தமிழகம் முழுக்க தொடர்ந்து 3 நாட்கள் கடையடைப்பு நடத்தப்பட்டது. 5 நாட்கள் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. இவற்றின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது பொறுப்பிலிருந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோரைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை நெல்லை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய சந்தீப் நந்தூரி – தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக முரளி ரம்பா பொறுப்பேற்றுள்ளார்.
|