ஸ்டெர்லைட் தாமிர உருக்குத் தொழிற்சாலையை எதிர்த்து – 22.05.2018. செவ்வாய்க்கிழமையன்று தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதில் 13க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்துறையின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, தமிழகம் முழுக்க தொடர்ந்து 3 நாட்கள் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று, காயல்பட்டினத்திலும் பெரும்பாலான கடைகள் அந்நாட்களில் அடைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்கள் வழியே தகவல்கள் பரிமாறப்பட்டு, அதன் காரணமாக பொதுமக்கள் கொந்தளிப்பதைத் தவிர்ப்பதற்காக, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருந்தது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மே 23 முதல் 25 வரை 3 நாட்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் மே 23 முதல் 27ஆம் நாள் வரை தொடர்ந்து 5 நாட்களும் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஆன்லைன் முறையில் வணிகம் செய்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பொதுமக்களும் தகவல் தொடர்பின்றிப் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இத்தனை நாட்களாக – கைபேசிக் கருவிகளைத் தடவியவர்களாக குனிந்த தலை நிமிராமல் சாலையில் நடந்து சென்ற இளைஞர்கள் – இன்டர்நெட் சேவை முடக்கம் காரணமாக, ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசிக்கொண்டது மட்டும் வரவேற்கத்தக்க அம்சம்.
|