தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை விட அதிகளவில் கட்டணம் செலுத்தியிருந்தால், அவர்கள் செய்ய வேண்டியவற்றை விளக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க 2009-ம் ஆண்டு, Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act என்ற சட்டம் அப்போதைய தமிழக அரசால் இயற்றப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 10,000 தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணங்களை, பள்ளிக்கூடங்களிடம் கலந்தாலோசனை செய்து, அரசே நிர்ணயம் செய்யும். அந்த கட்டணத்திற்கு மேல் வேறு எந்த கட்டணமும் வாங்க கூடாது.
தற்போது - தூத்துக்குடி மாவட்டத்தின் 148 தனியார் பள்ளிக்கூடங்களின் மூன்று ஆண்டுகளுக்கான (2017-2018, 2018-2019, 2019-2020) கல்விக்கட்டணம் விபரம், தமிழக அரசு தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணம் நிர்ணயம் குழு (Tamil Nadu Private Schools Fee Determination Committee) மூலம் வெளியாகியுள்ளன.
காயல்பட்டினத்தை பொறுத்தவரை, இன்றைய நிலவரப்படி - ஆறு பள்ளிக்கூடங்களின் கல்விக்கட்டணம், இக்குழுவினால் வெளியிடப்படவில்லை. எல்.கே.மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் காட்நீதன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிக்கூடங்களுக்கு மட்டும், கட்டண விபரங்கள் வெளியாகியுள்ளன.
ஒரு சில பெற்றோர்கள், இந்த பட்டியல் வெளியாவதற்கு முன்பே, அடுத்தாண்டுக்கான கல்விக்கட்டணத்தை - பள்ளிக்கூடங்களில் செலுத்தியுள்ளார்கள். அந்த கட்டணங்கள் - அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை விட அதிகமாக உள்ளது என புகார்கள் எழுந்துள்ளன.
இப்போது என்ன செய்வது?
பள்ளிக்கூடத்தின் தாளாளருக்கும் (CORRESPONDENT), தலைமை ஆசிரியருக்கும் (HEADMASTER / HEADMISTRESS / PRINCIPAL) - அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை விட அதிகமாக வசூல் செய்யப்பட்ட தொகையை திருப்பி தரக்கோரி பெற்றோர்கள் கடிதம் எழுதலாம். அந்த கடிதத்துடன் - வழங்கப்பட்ட ரசீது நகலையும் இணைத்து அனுப்பலாம்.
பள்ளிக்கூடத்தில் இருந்து ஒரு வாரத்திற்குள் திருப்தியான பதில் வரவில்லை என்றால், Tamil Nadu Private Schools Fee Determination Committee குழுவிற்கு - உங்கள் புகாரை, பள்ளிக்கூட ரசீது நகலுடன், பதிவு தபாலாக அனுப்பவும்.
அதன் முகவரி இதோ:
Tamil Nadu Private Schools Fee Determination Committee,
DPI Campus, College Road,
Chennai - 600 006.
உங்கள் புகார் பெறப்பட்ட சில தினங்களுக்குள், இது குறித்த விசாரணையை - அந்த குழு நடத்தும். அந்த விசாரணையின் போது, அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிகமாக அப்பள்ளிக்கூடம் வசூல் செய்துள்ளது என கண்டறியப்பட்டால், அந்த தொகையை திருப்பி கொடுக்க உத்தரவிடும் அதிகாரம் அக்குழுவிற்கு உண்டு; மேலும் - அந்த பள்ளிக்கூடத்தின் உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரமும் அக்குழுவிற்கு உண்டு.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 23, 2018; 2:00 pm]
[#NEPR/2018042302]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|