பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate – TC) வழங்கிட, தனியார் பள்ளிக்கூடங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற விதிமுறையை மீறி, மாணவர்களிடம் வசூலித்த கட்டணங்களை பள்ளிக்கூடங்கள் திரும்ப அவர்களிடம் வழங்கிடுமாறு, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் பள்ளிக்கூடங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து வேறு பள்ளிக்கூடம் மாற - ஏற்கனவே பயின்ற பள்ளிக்கூடத்தில் இருந்து பள்ளி மாற்றுச்சான்றிதழ் (TRANSFER CERTIFICATE;TC) பெறுவது அவசியமாகும்.
நேற்று முதல் நகரின் பல்வேறு தனியார் பள்ளிக்கூடங்களில், பள்ளி மாற்றுச்சான்றிதழ் (TC) வழங்கப்படுகிறது. TC பெற சென்ற பெற்றோரிடம் அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும், பள்ளிக்கூட நிர்வாகிகளால், அதற்கான கட்டணமாக - ரூபாய் 200 / 300 / 500 கோரப்பட்டுள்ளது. இதற்கான எந்த ரசீதும் பள்ளிக்கூடங்கள் வழங்கவில்லை.
இது சம்பந்தமாக பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் நகரங்களில் உள்ள கல்வித்துறையின் உயர் அதிகாரிகளிடம் நடப்பது என்ன? குழுமம் விபரங்கள் கோரியது. இவ்வாறு பள்ளி மாற்றுச்சான்றிதழ் (TC) வழங்க, கட்டணம் வசூல் செய்ய எந்த அனுமதியும் இல்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் - நூற்றுக்கணக்கான மாணவர்களிடம் - நகரின் தனியார் பள்ளிக்கூடங்கள் - பள்ளி மாற்றுச்சான்றிதழுக்கு (TC) என பல நூறு ரூபாய் வசூல் செய்துள்ளன. விதிமுறைகளை மீறி - இவ்வகைக்காக பெறப்பட்ட தொகையை மாணவர்களிடம் திருப்பி செலுத்திட, நகர தனியார் பள்ளிக்கூட நிர்வாகங்களை நடப்பது என்ன? குழுமம் கேட்டுக்கொள்கிறது.
அரசு அனுமதித்த தொகையை விட, பல ஆயிரம் ரூபாய் அதிகமாக பள்ளிக்கூடங்களுக்கு செலுத்தி தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்த பெற்றோர்களிடம், பள்ளி மாற்றுச்சான்றிதழ் (TC) வகைக்காக சில நூறு ரூபாயை பள்ளிக்கூடங்கள் வசூல் செய்வது எந்த வகையிலும் நியாயமானது அல்ல எனவும் நடப்பது என்ன? குழுமம் தெரிவித்துக்கொள்கிறது.
இதனை மீறி - பள்ளிக்கூடங்கள் கட்டணம் வசூல் செய்தால், மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்களின் ஆய்வாளர் (விருதுநகர்) [INSPECTOR OF MATRICULATION SCHOOLS, VIRUDUNAGAR] அலுவலக எண்ணிற்கு தொடர்புக்கொண்டு பெற்றோர்கள் புகார் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
INSPECTOR OF MATRICULATION SCHOOLS (VIRUDUNAGAR)
PHONE NUMBER: 04562 243655
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 22, 2018; 9:00 am]
[#NEPR/2018042201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|