தனியார் பள்ளிக்கூடங்களில் நிகழும் கல்வியாண்டிற்கான புதிய கல்விக் கட்டணம் குறித்த அரசு அறிவிப்பு வராத வரை பள்ளிக்கூடங்களில் பெற்றோர் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டாம் என, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க 2009-ம் ஆண்டு, Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act என்ற சட்டம் அப்போதைய தமிழக அரசால் இயற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து - 2009 ஆண்டு, டிசம்பர் மாதம் 7-ம் தேதி நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு கட்டண நிர்ணையக் குழு (Tamil Nadu Private Schools Fee Determination Committee) அமைக்கப்பட்டது. இந்த குழு மே 2010 இல் - சுமார் 10,000 பள்ளிக்கூடங்களுக்கான - தனது பரிந்துரையை சமர்ப்பித்தது. கட்டண விபரங்கள், அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 2010 இல் வெளியிடப்பட்டது.
உடல்நலன் காரணமாக நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண குழு தலைவராக நீதிபதி கே. ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே 6400 பள்ளிக்கூடங்கள், குழு அறிவித்த கட்டணத்தை ஏற்க மறுத்து மேல் முறையீடு செய்தன.
அந்த பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் உள்பட மொத்தம் 7 ஆயிரம் பள்ளிகளிடம் கட்டண குழு மீண்டும் விசாரணை நடத்தியது. இதன்படி - ஜூன் 2011 இல், 2013ம் ஆண்டு வரையிலுமான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
2013 - 2016 ஆண்டுகள் காலகட்டத்திற்கான கட்டணம் நிர்ணயம் செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு நியமனம் செய்யப்பட்டார். அவர் தலைமையிலான குழுவும், இக்காலகட்டத்திற்கான (2013 - 2016) கல்விக்கட்டணத்தை வெளியிட்டது.
நீதிபதி சிங்காரவேலு உடைய மூன்றாண்டு பதவி காலம் முடிவுற்றவுடன், அரசு புதிய நீதிபதியை குழு தலைவராக நியமனம் செய்யவில்லை. அதன் காரணமாக, 2015 -16 ஆம் ஆண்டுக்கான கல்விக்கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் வரை, பள்ளிக்கூடங்கள் உயர்த்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
காலியிடம் தோன்றி 15 மாதங்கள் கழித்து, மார்ச் 2017 இல் - ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணி, கல்விக்கட்டணம் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். போதிய கால அவகாசம் இல்லை என காரணம் கூறப்பட்டு, 2017 - 18 க்கான கல்விக்கட்டணங்கள் விபரங்கள் உரிய காலத்தில் வெளியிடப்படவில்லை. முந்தைய கல்வியாண்டு கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் வரை, பள்ளிக்கூடங்கள் உயர்த்தலாம் என மீண்டும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், 2018 - 2019 கல்வியாண்டுக்கான கட்டணங்கள், ஏப்ரல் இறுதிக்குள் வெளியிடப்படவேண்டும் என தெரிவித்திருந்தன. மே மாதம் துவங்கிய நிலையில், புதிய கல்விக்கட்டணம் வெளிவராத சூழலில், இது குறித்து கல்விக்கட்டணம் நிர்ணயக்குழுவில் நடப்பது என்ன? குழுமம் விசாரித்தபோது, மே இறுதிக்குள் - பள்ளிக்கட்டணங்கள் விபரம் வெளியிடப்படும் என பதில் வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் தனியார் பள்ளிக்கூடங்கள் - 2010 - 2013 கால்கட்டத்திற்கான அரசு நிர்ணயம் செய்திருந்த தொகை, 2013 - 2016 காலகட்டத்திற்கான அரசு நிர்ணயம் செய்திருந்த தொகை - ஆகியவற்றை விட, பல மடங்கு அதிகமாக, பெற்றோர்களிடம் வசூல் செய்துள்ளனர். அதிகமாக வசூல் செய்யப்படும் தொகைக்கு - முறையான ரசீதுகள் கொடுக்கப்படவில்லை.
சில பள்ளிக்கூடங்களில், அந்த பள்ளிக்கூடங்களிலேயே புத்தகங்கள் போன்ற பொருட்கள் கண்டிப்பாக வாங்கபபடவேண்டும் என்றும், அவ்வாறு குறைந்த அளவு பொருட்களை வழங்கிவிட்டு, அதிக தொகைக்கான ரசீதும் கொடுத்துள்ளன.
நகரின் அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களுக்கும், சில வாரங்களுக்கு முன்னர் - நடப்பது என்ன? குழுமம் கடிதம் எழுதியிருந்தது. அதில் - அரசு நிர்ணயம் செய்யும் தொகையை விட, கல்விக்கட்டணமாக அதிகமாக மாணவர்களிடம் வசூல் செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.
2018 - 2019 ஆண்டுக்கான கல்விக்கட்டணம் இதுவரை அரசு வெளியிடவில்லை. இதற்கிடையே, நகரின் தனியார் பள்ளிக்கூடங்கள் - எதிர்வரும் கல்வியாண்டுக்கான கல்விக்கட்டணங்களை மிக அதிகளவில் நிர்ணயம் செய்து, வசூல் செய்ய துவங்கியுள்ளன. இது முறையற்ற செயலாகும்.
புதிய கல்விக்கட்டணம் குறித்த அரசு அறிவிப்பு இதுவரை வெளிவராத சூழலில், பொது மக்கள் - அவசரப்பட்டு, வரும் பருவத்திற்கான கல்விக்கட்டணத்தை செலுத்த வேண்டாம் என நடப்பது என்ன? குழுமம் கேட்டுக்கொள்கிறது.
பள்ளிக்கூடங்கள் - அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிகமாக கட்டணம் வசூல் செய்தால், கீழ்காணும் முகவரிக்கு ஆதாரங்களின் நகல்களுடன், பதிவு தபால் மூலம் புகார் அனுப்பவும்:
Tamil Nadu Private Schools Fee Determination Committee,
DPI Campus,
College Road,
Chennai - 600 006.
காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களுக்கு 2013 - 2016 கல்வியாண்டிற்கு அரசு நிர்ணயத்திருந்த கட்டண விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 22, 2018; 11:00 am]
[#NEPR/2018042202]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|