ஸ்டெர்லைட் தாமிர உருக்குத் தொழிற்சாலையை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளதோடு, காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. அமிலக் கழிவு தொழிற்சாலையையும் நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த கண்டன அறிக்கை:-
தூத்துக்குடி மாநகரில், 1996 ஆம் ஆண்டு, STERLITE தொழிற்சாலை துவக்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில் இருந்தே சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வரும் இந்த தொழிற்சாலை மீது அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், நாளுக்குநாள் இந்த தொழிற்சாலையினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்தே வந்துள்ளன.
இதற்கிடையே, இந்த தொழிற்சாலை தனது உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடவே, தூத்துக்குடி மாநகர மக்கள், இதற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர். இந்த தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்படும் என்ற உத்திரவாதத்தை அரசு தராததை அடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறவழி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்ட குழுவினர் அறிவித்திருந்தனர்.
ஆனால், அதிர்ச்சியூட்டும் வகையாக - ஜனநாயக ரீதியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் மீது நேற்று (மே 22) காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில், 10க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 17 வயது நிரம்பிய ஒரு இளம்பெண்ணும் அடங்கும். இதனை நடப்பது என்ன? குழுமம் வன்மையாக கண்டிக்கிறது.
இப்போராட்டத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை நடப்பது என்ன? குழுமம் தெரிவித்து கொள்கிறது. மேலும் - காவல்துறை தாக்குதலில் காயமுற்றவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறது.
பொது மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, மதிப்பளித்து செயல்படவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள், தங்கள் கடமையில் இருந்து தவறியுள்ளனர். நேற்று நடந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு - தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமே ஆகும். மேலும் - இந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, STERLITE தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் - அதிகளவிலான மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் புகலிடமாக கடந்த சில ஆண்டுகளாக உருமாறி வருகிறது. இந்த போக்கு நிறுத்தப்படவேண்டும். குறிப்பாக - காயல்பட்டினம் நகரில், 60 ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் மற்றும் வருவாய்த்துறை விதிமுறைகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக செயல்புரிந்து வரும் DCW தொழிற்சாலை குறித்து வழங்கப்பட்டுள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, இத்தொழிற்சாலையையும் நிரந்தரமாக மூடிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 23, 2018; 10:30 am]
[#NEPR/2018052301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|