தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை விட அதிகளவில் பெற்றோரிடமிருந்து அவை பெற்ற கட்டணங்களைத் திருப்பிச் செலுத்த உத்தரவிடக் கோரி, தமிழக அரசிடம் காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க 2009-ம் ஆண்டு, Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act என்ற சட்டம் அப்போதைய தமிழக அரசால் இயற்றப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 10,000 தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணங்களை, பள்ளிக்கூடங்களிடம் கலந்தாலோசனை செய்து, அரசே நிர்ணயம் செய்யும். அந்த கட்டணத்திற்கு மேல் வேறு எந்த கட்டணமும் வாங்க கூடாது.
தற்போது - தூத்துக்குடி மாவட்டத்தின் 148 தனியார் பள்ளிக்கூடங்களின் மூன்று ஆண்டுகளுக்கான (2017-2018, 2018-2019, 2019-2020) கல்விக்கட்டணம் விபரம், தமிழக அரசு தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணம் நிர்ணயம் குழு (Tamil Nadu Private Schools Fee Determination Committee) மூலம் வெளியாகியுள்ளன.
காயல்பட்டினத்தை பொறுத்தவரை, இன்றைய நிலவரப்படி - ஆறு பள்ளிக்கூடங்களின் கல்விக்கட்டணம், இக்குழுவினால் வெளியிடப்படவில்லை. எல்.கே.மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் காட்நீதன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிக்கூடங்களுக்கு மட்டும், கட்டண விபரங்கள் வெளியாகியுள்ளன.
ஒரு சில பெற்றோர்கள், இந்த பட்டியல் வெளியாவதற்கு முன்பே, அடுத்தாண்டுக்கான கல்விக்கட்டணத்தை - பள்ளிக்கூடங்களில் செலுத்தியுள்ளார்கள். அந்த கட்டணங்கள் - அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை விட அதிகமாக உள்ளது என புகார்கள் எழுந்துள்ளன.
ஒரு தனியார் பள்ளிக்கூடம், ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில், ஒவ்வொரு மாணவரிடமும் 2400 ரூபாய் வரை அதிகமாக வசூல் செய்கிறது. மேலும் - புத்தகம், ஸ்டேஷனேரி போன்ற வகைக்கு என 6000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை வசூல் செய்கிறது. ஆனால் அத்தொகைக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு அதிகப்படியான மதிப்பு சுமார் 2500 ரூபாய் தான். எனவே - ஒரு மாணவரிடம் இருந்து குறைந்தது 6000 ரூபாய் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது.
மற்றொரு தனியார் பள்ளிக்கூடம், EXTRA CURRICULAR ACTIVITIES என்ற பெயரில்,சுமார் 4000 ரூபாய் வரை வசூல் செய்கிறது. இந்த வகைக்காக - மாணவர்களிடம் கட்டாய வசூல் செய்யக்கூடாது என்பதே விதி. மேலும் - இந்த பள்ளிக்கூடத்தில், புத்தகம், ஸ்டேஷனேரி போன்ற வகைக்கு என சுமார் 5000 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. ஆனால் அத்தொகைக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு அதிகப்படியான மதிப்பு சுமார் 2500 ரூபாய் தான். எனவே - ஒரு மாணவரிடம் இருந்து குறைந்தது 6500 ரூபாய் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது.
அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையைவிட அதிகமாக வசூல் செய்யவேண்டாம் எனக்கோரி நகர தனியார் பள்ளிக்கூடங்களுக்கு - கடந்த மாத துவக்கத்தில், எழுத்துப்பூர்வமாக நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை வைத்திருந்தது நினைவிருக்கலாம்.
இருப்பினும் - அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிக தொகை தற்போதும் வசூல் செய்யப்படுவதாக பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து, நடப்பது என்ன? குழுமம் சார்பாக - தமிழ்நாடு தனியார் பள்ளிக்கூடங்கள் கட்டணம் நிர்ணயம் குழு, தமிழக அரசின் பள்ளிக்கூட கல்வித்துறையின் முதன்மை செயலர், பள்ளிக்கூடங்களின் இயக்குனர், மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்களின் இயக்குனர் ஆகியோருக்கு - சான்றுகளுடன், புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. அதில் - அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை விட அதிகமாக பெறப்பட்ட தொகையை பெற்றோருக்கு திருப்பி வழங்கிட உத்தரவிடும்படியும் கோரப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 28, 2018; 2:30 pm]
[#NEPR/2018042801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|