ஸ்டெர்லைட் தாமிர உருக்குத் தொழிற்சாலையை எதிர்த்து – 22.05.2018. செவ்வாய்க்கிழமையன்று தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதில் 13க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று – பொதுமக்கள் நலன் கருதி – தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், வட்டாட்சியர் சிவகாமி சுந்தரி – ஆலையைப் பூட்டி முத்திரையிட்டார்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் வெற்றி கண்ட தூத்துக்குடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணையக் கோரியும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி நகரில் கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி, நூற்றுக்கணக்கான மக்களுக்கு உயிர் இழப்பு உட்பட பல்வேறு சுகாதார கேடுகளை ஏற்படுத்தி வந்த ஸ்டெர்லைட் நிறுவனம், தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணை மூலம், நிரந்தரமாக மூடப்பட்டது.
சட்டரீதியாக இந்த அரசாணையை இரத்து செய்ய அந்நிறுவனம் முயற்சி செய்ய வாய்ப்புகள் இருப்பது உண்மையென்றாலும், 20 ஆண்டுகளாக இத்தொழிற்சாலைக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்களில் இது ஒரு முக்கிய மைல்கல் என்பதை யாராலும் மறுக்க இயலாது.
மே 22 அன்று காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் மற்றும் அந்த சம்பவத்தில் காயமடைந்த நூற்றுக்கணக்கான பொது மக்களின் - சுயநலமற்ற தியாகத்தின் விளைவே இந்த அரசாணை என்பதனையும் யாரும் மறுக்க இயலாது. எதிர்கால சந்ததியின் நலனை மட்டும் பிரதானமாக கொண்டு - கடந்த பல ஆண்டுகளாக போராடி வந்த தூத்துக்குடி மக்களும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவரும் நம் மரியாதைக்கும், பாராட்டிற்கும் உரியவர்கள் ஆவர்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலையினால் ஏற்பட்ட மாசுவின் விளைவுகளை எவ்வாறு அத்தொழிற்சாலையை ஒட்டிய சமூகங்கள் கடந்த 22 ஆண்டுகளாக அனுபவித்து வந்தார்களோ, அதை போலவே - காயல்பட்டினத்தில் அமைந்துள்ள DCW தொழிற்சாலையின் மாசுவினால் அப்பகுதி சுற்றுவட்டார மக்கள், கடும் இன்னல்களை - கடந்த 59 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறார்கள்.
// 48 ஆண்டுகளாக மெர்குரி உட்பட பல்வேறு வேதியல் பொருட்கள் கொண்டு சுற்றுச்சூழலை DCW நிறுவனம் மாசுபடுத்தி வந்தது; இன்று வரை அதன் பாதிப்புகள் சரி செய்யப்படவில்லை
// காற்று மற்றும் நீர் மாசு குறித்த அனைத்து சட்டதிட்டங்களையும் மீறி இந்த தொழிற்சாலை செயலாற்றி வருகிறது; ஆனால் இந்த நிறுவனம் மீது எந்த நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
// நிபந்தனைகளுக்கு உட்பட்டு விரிவாக்க அனுமதி வழங்கப்பட்டது; ஆனால் - அந்த நிபந்தனைகளை நிறைவேற்றாமலேயே புதிய தொழிற்சாலைகளை இயங்க அனுமதித்துள்ளது தமிழக அரசு
// எந்த தொழிற்சாலை பிரிவுக்கும் தொடர்ந்து செயலாற்ற அனுமதி புதுப்பிக்கப்படாமலேயே (CONSENT TO OPERATE) அனைத்து பிரிவுகளும் இயங்கி வருகின்றன
// ஆபத்தான VCM மூலப்பொருள், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மக்கள் அதிகம் வாழும் பகுதிகள் வழியாக அனுதினமும் கொண்டு செல்லப்படுகிறது; இதன் காரணமாக அனுதினமும் அச்சத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்
// தாமிரபரணி ஆற்றுக்கு 5 கிலோமீட்டர் அருகில் எந்த தொழிற்சாலையும் அமைய கூடாது என்ற விதிமுறையை மீறி தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன
// குத்தகை அடிப்படையில் அரசு வழங்கிய 793 ஏக்கர் நிலத்தை காலி செய்ய வெளியிட்ட அரசாணையை அமல்படுத்த, அரசாணையை வெளியிட்ட அரசே சுணக்கம் காண்பிக்கிறது
22 ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது என்ற சந்தோஷமான செய்தி வெளிவந்துள்ள இந்த சூழலில், 59 ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் DCW தொழிற்சாலையினையும் நிரந்தரமாக மூடிட தமிழக மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 28, 2018; 11:00 pm]
[#NEPR/2018042802]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|