கத்தர் காயல் நல மன்றத்தின் – இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் கூடிய பொதுக்குழுக் கூட்டத்தில், உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடை நிதியாக 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் சேகரிக்கப்பட்டு, நகர்நல நிதியாக கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார். இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியாக 24.05.2018. வியாழக்கிழமையன்று 17.00 மணியளவில், தோஹா பர்வா வில்லேஜிலுள்ள வெம்பனட் ரெஸ்டாரண்ட்டில் நடைபெற்றது. மன்றத்தின் மூத்த உறுப்பினர்களான எஸ்.ஏ,ஃபாஸுல் கரீம், மவ்லவீ ஏ.எல்.முஹம்மத் ஸாலிஹ் உமரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மன்றச் செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் கே.எம்.எஸ்.மொகுதூம் மீரான் தலைமையுரையாற்றினார். மூத்த உறுப்பினர் கே.வி.ஏ.டீ.ஹபீப் முஹம்மத் வரவேற்றுப் பேசினார். மன்றத்தின் ‘கவிக்குயில்’ ஏ.எச்.ஃபாயிஸ் இஸ்லாமிய பாடல் பாடினார். முன்னாள் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் வாழ்த்துரையாற்றினார்.
மன்றத்தின் இதுநாள் வரையிலான நிதிநிலையறிக்கையை, பொருளாளர் ஹுஸைன் ஹல்லாஜ் சமர்ப்பித்தார்.
இஃப்தார் நிகழ்ச்சி
மஃக்ரிப் அதான் ஒலிக்கப்பட்டு, இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், வடை வகைகள், பழ வகைகள், குளிர்பானம், கஞ்சி பரிமாறப்பட்டது.
ஜமாஅத் தொழுகைக்குப் பின் இரண்டாம் அமர்வு துவங்கியது.
சால்வை அணிவிப்பு
கண்ணியப்படுத்துவதற்காக அழைக்கப்பட்டதையேற்று வருகை தந்திருந்த சகோதரர்களான கடலூர் முஸ்தஃபா அவர்களுக்கு கே.வி.ஏ.டீ.ஹபீப் முஹம்மத் அவர்களும்,
ஷபீர் அஹ்மத் அவர்களுக்கு மன்றத் துணைத்தலைவர் செய்யித் முஹ்யித்தீன் அவர்களும்,
மன்றத் தலைவர் மீரான் அவர்களுக்கு சிறப்பு விருந்தினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. அவர்களும்,
சிறப்பு விருந்தினருக்கு மன்றத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஏ,ஃபாஸுல் கரீம் அவர்களும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர். மன்றத்தின் சார்பில், சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
இரங்கல்
ஸ்டெர்லைட் விஷ ஆலைக்கெதிரான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு இக்கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மணவாழ்த்து
விரைவில் திருமண விழா காணவுள்ள மன்ற உறுப்பினர்களான சுலைமான் லெப்பை (நெய்னார் தெரு), அப்துல்லாஹ் (சதுக்கைத் தெரு), சிமாகின் (குத்துக்கல் தெரு) ஆகிய வருங்கால மணமக்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
ஒருநாள் ஊதிய நன்கொடை
உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடை திரட்டுவதற்காக மூடி முத்திரையிடப்பட்ட உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. மன்ற உறுப்பினர்களின் தன்னார்வத்துடன் கூடிய தாராளப் பங்களிப்பின் நிறைவில், 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் சேகரிக்கப்பட்டு, நகர்நல நிதியாக கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
பஃபே முறையில் இரவுணவு
நன்றியுரைக்குப் பின், ஹாஃபிழ் சோனா அமீர் சுல்தான் அவர்களின் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. பின்னர், அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு பஃபே முறையில் செய்யப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் – மன்றத் துணைத்தலைவர்களான முஹம்மத் முஹ்யித்தீன், செய்யித் முஹ்யித்தீன் ஆகியோரது ஒருங்கிணைப்பில் குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.
பொதுக்குழுக் கூட்டம், இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளின் முழு படப்பதிவுகளை,
https://we.tl/MgRDSPufPB
என்ற இணைப்பில் சொடுக்கி, தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி, கத்தர் கா.ந.மன்றம்)
|