வரும் அக்டோபர் மாதம் 06ஆம் நாளன்று – காயல்பட்டினத்தில் பொதுக்கூட்டத்தை நடத்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டம், 07.09.2018. வெள்ளிக்கிழமையன்று 20.30 மணிக்கு, நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் தலைமையில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள – கட்சியின் அலுவலகமான தியாகி பீ.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.
மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் வரவேற்றார்.
கட்சியின் நகர நிர்வாகிகளுள் ஒருவரான எம்.எம்.எஸ்.இப்றாஹீம் அத்ஹம் – 06.10.2018. அன்று நடைபெறவுள்ள தன் மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார். கட்சியினர் அனைவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாகக் கூறி, வருங்கால மணமக்களின் நல்வாழ்விற்காக துஆ செய்தனர்.
இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கட்சியின் காயல்பட்டினம் கிளையுடைய செயல்பாடுகள் மந்த நிலையைத் தவிர்த்து மீண்டும் வீரியத்துடன் அமைய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்திப் பேசினார்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – சதுக்கைத் தெரு அலுவலகக் கட்டிடத்தை வாடகைக்கு விடல்:
சதுக்கைத் தெருவிலுள்ள – கட்சியின் அலுவலகமான தியாகி பீ.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் – மாடியில் அலுவலகம் இருப்பதால் இயலா நிலையிலுள்ளோருக்குள்ள வசதிக் குறைவு இருப்பதைக் கருத்திற்கொண்டு, மேற்படி கட்டிடத்தை முழுமையாக வாடகைக்கு விடவும், வசதியான வேறோர் இடத்தில் வாடகைக்கு அலுவலகத்தை உடனடியாகப் பார்த்து தேர்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
கட்சியின் காயல்பட்டினம் நகர கிளைக்கு – அனைத்து வசதிகளுடன் கூடிய வேறொரு புதிய கட்டிடத்தைச் சொந்தமாக வாங்கவும் தீர்மானிக்கப்பட்டு, அதற்காக
(1) எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன்,
(2) மன்னர் பாதுல் அஸ்ஹப்,
(3) பெத்தப்பா சுல்தான்,
(4) என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன்
ஆகியோரிடம் பொறுப்பளிக்கப்பட்டது.
தீர்மானம் 2 – நகர நிர்வாகத்தை செம்மைப்படுத்தல்:
நகர நிர்வாகத்தின் செயல்பாடுகளை இன்னும் செம்மைப்படுத்திட தீர்மானிக்கப்பட்டதோடு, அதற்கேற்ப – இருக்கும் நிர்வாகிகளில் செயல்பட இயலாமலுள்ளோரைத் தவிர்த்துவிட்டு, அப்பொறுப்புகளுக்கு – செயல்திறன் மிக்க புதியோரைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 – அக்டோபர் 06 அன்று பொதுக்கூட்டம்:
கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், “2019 பாராளுமன்றத் தேர்தலில் இந்திய முஸ்லிம்களின் பங்கும், பணியும்” எனும் தலைப்பில் - 06.10.2018. சனிக்கிழமையன்று 19.00 மணிக்கு, சீதக்காதி திடலில் பொதுக்கூட்டத்தை நடத்திடவும்,
கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாஸித், கேரளாவிலிருந்து ஒரு பேச்சாளர் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து உரையாற்றச் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டச் செலவிற்கான நிதியைத் திரட்ட
(1) எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் (மாவட்டச் செயலாளர்),
(2) எம்.ஏ.முஹம்மத் ஹஸன் (நகர தலைவர்),
(3) ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் (நகர செயலாளர்),
(4) எம்.கே.செய்யித் முஹம்மத் (எ) ஹாஜி காக்கா
ஆகியோரிடமும்,
கூட்ட ஏற்பாடுகளைச் செய்திட
(1) மன்னர் பாதுல் அஸ்ஹப்,
(2) பெத்தப்பா சுல்தான்,
(3) எம்.எச்.அப்துல் வாஹித்,
(4) என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ,
(5) என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன்,
(6) எம்.இசட்.சித்தீக்
ஆகியோரிடமும் பொறுப்பளிக்கப்பட்டது.
தீர்மானம் 4 – புதிய சாலைகளுக்குக் கோரிக்கை:
காயல்பட்டினத்தில் பெரும்பாலும் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக – போக்குவரத்திற்குத் தகுதியின்றி இருப்பதைக் கருத்திற்கொண்டு, அவ்விடங்களில் முறைப்படி புதிய சாலைகளை அமைத்திடவும், பழுதுள்ள சாலைகளில் பழுதுகளைச் சரிசெய்திடவும் நகராட்சிக்கு இக்கூட்டம் கோரிக்கை விடுக்கிறது.
தீர்மானம் 5 – ஆத்தூரிலிருந்து குடிநீர் பகிர்வை நிறுத்தியமைக்குக் கண்டனம்:
ஆத்தூர் குடிநீரேற்று நிலையம் அமைவதற்கும், அதன் பயன்பாட்டுப் பொருட்களுக்கும் காயல்பட்டினம் தனவந்தர்கள் பெரும்பான்மையாக உதவியிருக்கின்றனர். இரண்டாம் குடிநீர் திட்டம் துவக்கப்பட்டாலும், ஆத்தூரிலிருந்தும் குடிநீர் வழமை போல பகிரப்படும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. இதனை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, பழைய படி வழமை போல ஆத்தூரிலிருந்தும் காயல்பட்டினத்திற்குத் தொடர்ந்து குடிநீரைப் பகிர தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இக்கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், நகர பொதுமக்களைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், தொடர் போராட்டங்களை அடுத்தடுத்து நடத்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 6 – போதைப் பொருள் ஒழிப்புக்கு தொடர் நடவடிக்கை தேவை:
காயல்பட்டினத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக் குழுவின் செயல்பாடுகளுக்கு இக்கூட்டம் பாராட்டைத் தெரிவிப்பதோடு, இக்குற்றம் காயல்பட்டினத்திலிருந்து முற்றிலுமாக அகற்றப்படும் வரை – தயவுதாட்சண்யமற்ற தொடர் நடவடிக்கையை எடுக்குமாறு காவல்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 7 – கேரள வெள்ள நிவாரணத்திற்கு உதவியமைக்கு நன்றி:
அண்மையில் கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாயினர். அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைமை சார்பில் நிவாரண நிதியும், பொருட்களும் திரட்டப்பட்டு வந்தன. இவ்வகைக்காக மாநிலத்திலேயே அதிக உதவிகளைச் செய்தமைக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ப்ரைமரி நிர்வாகங்களுக்கு இக்கூட்டம் பாராட்டைத் தெரிவிப்பதோடு, இதற்காக தாராளமாக உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 8 – எரிபொருள் விலை உயர்வைக் கண்டிக்கும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு:
இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்விலை உயர்வைக் கண்டித்து வரும் 10.09.2018. அன்று இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் நாடு தழுவிய முழு வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் அடிப்படையில், காயல்பட்டினத்தில் முழு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 9 – ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அனுமதியளித்தமைக்குக் கண்டனம்:
மனித வாழ்வின் புனிதத்தையும், இந்தியாவின் கலாச்சார தனித்தன்மையையும் சிதைக்கும் வகையில், ஓரினச் சேர்க்கைக்கு நீதிமன்றத்தால் சட்ட அனுமதியளிக்கப்பட்டுள்ளதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, அச்சட்டத்தைத் திரும்பப் பெறவும் இக்கூட்டம் கோருகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ நன்றி கூற, ஹாங்காங் காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் V.M.T.முஹம்மத் ஹஸன் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |