கேரளாவில் அண்மையில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைத் திரட்டும் நோக்குடன், காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் வெளி வளாகத்தில், அப்பள்ளி நிர்வாகமும் – பாலக்காடு செம்பிறை சங்கமும் இணைந்து சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சியை 25.08.2018. சனிக்கிழமையன்று 19.00 மணியளவில் நடத்தின.
பொருளாதாரத்தில் நலிவுற்ற – வயது முதிர்ந்த தம்பதி தாம் புனித ஹஜ் பயணம் செல்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளை வர்ணித்து, “ஆதமின்ட மகன் அபு” எனும் தலைப்பில் வெளியான மலையாள மொழியிலான திரைப்படம், அதிநவீன எல்.இ.டி. தொழில்நுட்பத் திரையில் திரையிடப்பட்டது.
முன்னதாக திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு திரையிடல் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். துளிர் அறக்கட்டளை நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் வரவேற்றார். அதன் செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை – அவையோருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
திரையிடல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இலக்கிய ஆர்வலர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் நிகழ்ச்சியை வாழ்த்திப் பேசினார். பேராசிரியர் சுப்பிரமணியன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
இத்திரையிடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒருவருக்கு 100 ரூபாய் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் பெறப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் மொத்தத் தொகை – கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இத்திரையிடல் நிகழ்ச்சியில், காயல்பட்டினம் & சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் குளிர்பானம் & சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, துளிர் பள்ளி முதல்வரும், அதன் கேளிக்கைப் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான சித்தி ரம்ஸான் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
|