காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியினது கேளிக்கைப் பிரிவின் சார்பில், மழலையருக்கான வரைகலை & கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சிப் பட்டறை – சுதந்திர நாளான 15.08.2018. அன்று நடத்தப்பட்டது.
லண்டனில் வசிக்கும் காயலரான பொறியாளர் அபூபக்கர், கம்பல்பக்ஷ் என்.எஸ்.நூஹ் ஹமீத் ஆகிய பிரமுகர்கள் பட்டறையைத் துவக்கி வைத்தனர். துளிர் அறக்கட்டளை செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை அனைவரையும் வரவேற்றார். ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் செயலாளர் சிம்ஸன் நூஹ், வணிகப் பிரமுகர் ஹாங்காங் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். பேராசிரியர் சுப்பிரமணியன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இப்பட்டறையில், காயல்பட்டினத்திலிருக்கும் மழலையரும், வெளிநாடுகளில் வசித்து – விடுமுறையில் தாயகம் வந்துள்ள காயல்பட்டினம் மழலையரும் என 75 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு, ஃபெவிக்ரில் நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற கலைத் திறன் பயிற்சியாளர் நெல்லை மங்களா தேவி தலைமையிலான குழுவினர் பயிற்சியளித்தனர். இதில், மழலையர் தமக்குள் ஒளிந்திருக்கும் திறன்களை அழகுற வெளிப்படுத்தியதோடு, புதிய அம்சங்களையும் கற்றுக்கொண்டனர்.
பயிற்சி பெற்ற அனைத்து மழலையருக்கும் துளிர் நிர்வாகத்தின் சார்பில் – மூன்று வகையான விளையாட்டுப் பொருட்களும், சான்றிதழும் வழங்கப்பட்டன. வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் துணைச் செயலாளர் வாவு இஸ்ஹாக், ஹாங்காங் கஸ்வா அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் இஸ்மாஈல் ஆகியோர் அவற்றை மழலையருக்கு வழங்கினர்.
ஏற்பாடுகளை, துளிர் பள்ளி பணிப்பாளர் வழக்குரைஞர் அஹ்மத் வழிகாட்டலில், அதன் முதல்வர் சித்தி ரம்ஸான் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு, தேனீர் & சிற்றுண்டி வழங்கி விருந்தோம்பல் செய்யப்பட்டது.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் தமது விடுமுறைக் காலங்களில் நடத்திடுமாறு வெளிநாட்டு மழலையரின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர். ஆவன செய்வதாக துளிர் பள்ளி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
அப்துர் ரஹ்மான்
(நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்)
|