கல்வி நிறுவனங்கள், உணவகங்களில் சேரும் குப்பைகளை – நகராட்சியின் குப்பை வாகனத்தை எதிர்பார்த்துக் கொண்டிராமல், தத்தம் இடங்களிலேயே தொட்டியிலிட்டு உரமாக்குவதற்கான செய்முறைப் பயிற்சி – காயல்பட்டினம் நகராட்சி ஏற்பாட்டில் நகராட்சி அலுவலக வளாகத்தில் 05.09.2018. புதன்கிழமையன்று 11.45 மணியளளவில் நடத்தப்பட்டது.
காயல்பட்டினத்திலுள்ள சென்ட்ரல் மேனிலைப் பள்ளி, எல்.கே. மேனிலைப் பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களின் நிர்வாகிகள் – ஆசிரியர்களும், உணவகங்களின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்ட இப்பயிற்சி முகாமில், கோவை நகரில் இதற்கெனத் தனியாக தயாரிக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியை – தயாரிப்பு நிறுவனத்தின் உற்பத்தி கண்காணிப்பாளர் வெங்கடேஷ் செய்முறைப் பயிற்சியளித்தார்.
சென்னையிலுள்ள தமிழ்நாடு நகராட்சிகளின் தலைமை நிர்வாகி (CMA) அறிவுரையின் பேரில் – தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உள்ளாட்சிப் பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று பயிற்சியளிப்பதாகக் கூறிய அவர், குப்பைகளை உரமாக்கும் முறையை பங்கேற்றோரிடம் செய்துகாட்டி விளக்கினார்.
தொட்டியின் அடியில் துவக்கமாக உர மண்ணைப் பரத்தி, அதன் மேல் அடுத்தடுத்து சேரும் மட்கும் குப்பைகளைப் போட்டு, ஒவ்வொரு முறை குப்பையைப் போட்ட பின்பும் – ஒரு கலவையை அதன் மேல் பரவலாகத் தூவி வந்தால், குறிப்பிட்ட கால அளவில் அவை உயிரி உரமாகும் என்றும், அவற்றைக் கொண்டு மரங்களை நல்ல முறையில் வளர்க்கலாம் என்றும் கூறினார்.
முன்னதாக, காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் அனைவரையும் வரவேற்று, அறிமுகவுரையாற்றினார். நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் இதன்போது உடனிருந்தனர்.
|