ஞெகிழி (ப்ளாஸ்டிக்) பொருட்களால் – இந்தியா உட்பட உலகம் முழுக்க மாசுபட்டு, சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேட்டை விளைவித்து வருகிறது.
தமிழகத்தில் ப்ளாஸ்டிக் உற்பத்திக்கு வரும் 2019 ஜனவரி மாதம் முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக அண்மையில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, மாற்றுப் பொருட்களின் மீது பொதுமக்களுக்கு மோகம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 22.08.2018. புதன்கிழமையன்று ஹஜ் பெருநாளையொட்டி, காயல்பட்டினம் கடற்கரையில் மண்பாண்டப் பொருட்கள் உற்பத்தி & விற்பனைக் கண்காட்சி – “பழமையில் புதுமை EXPO 2018” எனும் தலைப்பில் நடைபெறவுள்ளதாக பொதுமக்களுக்குப் பிரசுரங்கள் வழியே அறிவிக்கப்பட்டது.
காயல்பட்டினம் அக்பர்ஷா தெருவைச் சேர்ந்த முஹம்மத் ரிஃபாஸ், மருத்துவர் தெருவைச் சேர்ந்த முஹம்மத் முஹ்யித்தீன், சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஷேக் ஃபைஸல் ஆகியோர் இணைந்து அவ்வறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
ஹஜ் பெருநாளன்று 17.00 மணிக்கு, காயல்பட்டினம் கடற்கரையில் – பெருநாள் மக்கள் திரளுக்கிடையே கண்காட்சி துவங்கியது. காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் விற்பனையைத் துவக்கி வைத்து, கண்காட்சியைப் பார்வையிட்டு, பொதுமக்களிடையே உரையாற்றினார்.
ஞெகிழிப் பொருட்களால் உலகமே மாசுபட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், தரமான – கவர்ச்சியான மண்பாண்டப் பொருட்களை உள்ளடக்கி இக்கண்காட்சியை நடத்திக் கொண்டிருப்பதும், இதற்கென தனி விற்பனையகமே துவங்கியிருப்பதும் மிகுந்த பாராட்டுக்குரியது என்று புகழ்ந்துரைத்த அவர், பொதுமக்கள் – தடை செய்யப்பட்ட – சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேடு விளைவிக்கிற பொருட்களைத் தவிர்த்து, இதுபோன்ற தரமான மண்பாண்டப் பொருட்களை ஆர்வத்துடன் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்காக உழைக்கும் அனைவருக்கும் ஒத்துழைப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தண்ணீர் பானைகள், சமையல் பாத்திரங்கள், இட்லி சட்டிகள், தண்ணீர்க் குடுவைகள், தேனீர்க் குடுவைகள் என விதவிதமான மண்பாண்டப் பொருட்கள் – வழமையான உற்பத்தித் தரத்தையும் தாண்டி நேர்த்தியாகவும், சுத்தமாகவும் ஆயத்தப்படுத்தி, விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
பொதுமக்கள் அதிகளவில் பொருட்களை வாங்கிச் சென்றதோடு, கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த – களிமண் கொண்டு மண் பாண்டங்கள் உற்பத்தி செய்யப்படும் பிரிவை – இதுவரை காணாத வியப்புடன் கண்டுகளித்துச் சென்றனர்.
பாதுஷா, உமர் ஃபாரூக், அப்துல் பாஸித், செய்யித் இப்றாஹீம் ஆகிய இளைஞர்கள் துணைப்பணியாற்றினர்.
காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் House World எனும் பெயரில் இதற்கென விற்பனையகம் துவக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
|