காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில், நிகழாண்டு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்த மாணவ - மாணவியர் நேர்காணல் செய்யப்பட்டு, அவர்களுள் 21 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அதன் செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
உலக காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணைகளுடன், நமது இக்ராஃ கல்விச் சங்கத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவியர் 25 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
வழமை போன்று இவ்விண்ணப்பங்கள் மூன்றடுக்கு விசாரணையின் கீழ் பரிசீலிக்கப்பட்டுள்ளன. துவக்கமாக, விண்ணப்பப் படிவங்களிலுள்ள ஜமாஅத் சான்றறிக்கை பரிசீலிக்கப்பட்டது. இரண்டாவதாக விண்ணப்பதாரர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்விசாரணையில், இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், இணைச் செயலர் ஏ.எம்.எம்.இஸ்மாயில் நஜீப், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் இக்ராஃவிற்கு நேரடியாக அழைக்கப்பட்டு, நேர்காணல் செய்யப்பட்டனர். இந்த நேர்காணல் நிகழ்ச்சி, 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.45 மணி முதல் 07:45 மணி வரை காயல்பட்டினம், கீழ நெயினா தெருவிலுள்ள இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர், ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் ஆகியோரடங்கிய குழுவினர், நடப்பாண்டு இக்ராஃவின் கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பித்த மாணவ-மாணவியரை தனித்தனியாக நேர்காணல் செய்தனர். இவர்களுக்கு உதவியாக இக்ராஃ செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது,பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நேர்காணலில், 11 மாணவர்கள், 10 மாணவியர் என 21 பேர் நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாணவர்கள் B.Com, B.Com (Information System Management), B.Sc.(CS), B.Sc.(Maths), BPT (பிஸியோதெரபி) ஆகிய கல்வியும், மாணவியர் B.A.(Eng.), B.Com., B.B.A., B.Sc.(CS) ஆகிய கல்வியும் பயில்கின்றனர். இவர்களுக்கான கல்வி நிதியாக மாணவர்களுக்கு ரூபாய் 2,98,000 மற்றும் மாணவியருக்கு ரூபாய் 69,000 என மொத்தம் ரூபாய் 3,67,000/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 மாணவர்களுக்கும் ( முந்தைய வருடம் இக்ராஃ வின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானித்தபடி) வட்டியில்லா கல்விக்கடன் அடிப்படையில் வழங்கப்பட்டது. இவர்களில் 4 மாணவர்களுக்கு அவர்களுக்கு தேவையான முழு கல்வித் தொகையும் அளிக்கப்பட்டுள்ளது. இதர மாணவர்களுக்கு அவர்களின் தேவைகளில் 75 மற்றும் 50 சதவிகிதம் அளவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு வழமை போல் கல்வி நிதி உதவித்தொகையாக அளிக்கப்பட்டது. (தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் இவர்களுக்கான கல்வி நிதி வழங்கப்படும், இன்ஷா அல்லாஹ்!).
தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் ஆதித்தனார் கல்லூரி (திருச்செந்தூர்), சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (பாளையங்கோட்டை), புதுக்கல்லூரி (சென்னை), Dr. M.G.R.Educational And Research Institute (சென்னை), Scott Christian College (நாகர்கோவில்), Farook College (கோழிக்கோடு, கேரளா) ஆகிய கல்லூரிகளிலும், மாணவிகள் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியிலும் பயின்று வருகின்றனர்.
தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ - மாணவியர்களில் சிலர் ஆதரவற்றவர்கள்; வறுமையில் வாழ்ந்து வருபவர்கள் என்பதும், இவர்களை நம்பியே இவர்களின் குடும்பம் வாழ்ந்து வருகிறது என்பதும், இந்த மாணவ - மாணவியருக்கு தேவையான வழிகாட்டுதலும், மேற்படிப்பு குறித்த ஆலோசனைகளும் இந்நேர்காணலின்போது வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இந்த நேர்காணலில் கலந்து கொண்ட மாணவ - மாணவியரிடம், அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றிய விபரங்களை தெரிவித்து கட்டாயம் அதற்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர்களில் மூன்று மாணவர்கள் திருக்குர்ஆனை மனனம் செய்துள்ள ஹாஃபிழ் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.தர்வேஷ் முஹம்மது
நிர்வாகி, இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம்.
|