சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் 07.12.2018. அன்று நடைபெற்றுள்ளது. அதன் விபரங்களை உள்ளடக்கி அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
ரியாத் கா.ந.மன்றத்தின் 69-வது செயற்குழு கூட்ட நிகழ்வு!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 69-வது செயற்குழு கூட்டம் கடந்த 07.12.2018 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் மன்ற தலைவர் சகோ. PMS முஹம்மது லெப்பை அவர்கள் இல்லத்தில் சகோ. தாவூத் இத்ரீஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, சகோதரர் தைக்கா சாஹிப் அவர்கள் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை வாசித்த பின் ஹாஃபிழ் சதக் ஷமீல் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
கூட்டத்தைத் தலைமையேற்று நடாத்திதந்த சகோதரர் தாவூத் இத்ரீஸ் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். மன்ற செயல்பாடுகள் இன்னும் சிறப்பாக நடைபெற வேண்டும், அதற்கு மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய பேரவையின் வேண்டுகோளை ஏற்றுப் பேரவையின் மூலம் எமது மன்றம் நிதி உதவி செய்ததை தமது தலைமை உரையில் சுட்டிக்காட்டினார்.
மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:
நகரில் இருந்து பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து நிதியை ஒதுக்கிய பின், அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனியிடம் பிரார்த்திக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டின் சாராம்சம் மற்றும் 57வது பொதுக்குழுவில் பெறப்பட்ட சந்தா நிலவரம் பற்றிய அறிக்கையைப் பொருளாளர் சகோதரர் M.M.S. ஷேக் அப்துல் காதர் சூஃபி அவர்கள் வாசித்தார்.
57-வது பொதுக்குழு கூட்டம்:
மன்றத்தின் 57-வது பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் (நவம்பர்) 16ம் தேதி குடும்ப சங்கம நிகழ்ச்சியாக வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ். மன்ற தலைவர் சகோ. PMS முஹம்மது லெப்பை அவர்கள் குடும்ப சங்கம நிகழ்ச்சியின் போது நமது பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் பெறப்பட்ட கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார், அதன் அடிப்படையில் அடுத்த பொதுக்குழுவை மேலும் சிறப்பாக நடத்திட செயல்திட்டங்கள் வகுக்கப்படும் என்று கூறினார். இஸ்திராஹா, உணவு, வாகனம், சிறுவர் பெரியவர் போட்டிகள், பரிசுப் பொருட்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் சிறப்பாக செய்த செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், பெண்கள் நிகழ்வுகளைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த சகோதரிகளுக்கும் தமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டார்.
பெண்கள் மற்றும் சிறார்கள் நிதி (Women And Kids Fund – WAKF):
பெண்கள் மற்றும் சிறுவர்/சிறுமியர்களும் மன்ற நல உதவிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கிடும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த Women And Kids Fund – WAKF திட்டம். இத்தட்டத்தின் மூலம் மன்றத்தின் 57வது பொதுக்குழுவில் பெறப்பட்ட நிதியைப் பிரத்தியேக செயல்திட்டங்களில் பயன்படுத்திட செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனைகளைப் பெறப்பட்டு அடுத்த செயற்குழுவில் தீர்மானிக்கப்படும்.
பார்வையாளர்கள் கருத்து:
இக்கூட்டத்தின் பார்வையாளர்களாக கலந்து கொண்ட மன்றத்தின் மூத்த உறுப்பினர் சகோதரர் SMB ஸாலிஹ் ஹாஜியார் அவர்கள் தம்மை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி, தமது கருத்துக்களையும் மேலான ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.
சகோ. PSJ ஜைனுல் ஆப்தீன், சகோ. நயீமுல்லாஹ், சகோ. முஹ்சின், சகோ. முஹம்மது ஹசன் மற்றும் சகோ. SB முஹையதீன் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து வழங்கப்பட்டது. இக்கூட்டம் நடத்த இடம் தந்த சகோ. PMS முஹம்மது லெப்பை அவர்கள் அனைவருக்கும் மாலை தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார்.
இறுதியாகச் சகோ. நுஸ்கி அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில, துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
தைக்கா ஸாஹிப்
படங்கள்:
ஸாலிஹ் & இப்றாஹீம் ஃபைஸல்
|