காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் மையக் கட்டிடத்தில் இ-பொது சேவை மையம் அமைக்கப்பட்டு, அது இயங்கத் துவங்கியுள்ளது. “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் தொடர் முயற்சியால் அமையப்பெற்றுள்ள இந்த மையம் மூலம் காயல்பட்டினம் & சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்குப் பயன் கிடைத்துள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில் செயல்பட்டு வந்த இ-சேவை மையம், செப்டம்பர் மாதம் மூடப்பட்டது. மெகா | நடப்பது என்ன? குழுமம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியின் பயனாக, இன்று முதல் - இந்த மையம் - பொது மக்கள் எளிதாக அணுகக்கூடிய பேருந்து நிலைய வளாகத்தில் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
பல்வேறு அரசு சேவைகளை (Certificate for Loss of Educational Records due to disasters, Residence certificate, Deserted Woman Certificate, Small / Marginal Farmer Certificate, No Male Child Certificate, Legal Heir Certificate, Community certificate, Unmarried Certificate, Widow Certificate, Solvency Certificate, Unemployment Certificate, Other Backward Classes (OBC) Certificate, Income Certificate, Agricultural Income Certificate, Nativity certificate, First Graduate Certificate) பெற திருச்செந்தூர் வரை செல்லவேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டு, பேருந்து நிலையம் வளாகத்தில் இந்த மையம் அமைவதன் மூலம், காயல்பட்டினம் நகர் மக்கள் உட்பட அருகாமை ஊர் மக்களும் இந்த இ-சேவை மையத்தை எளிதாக பயன்படுத்த இயலும்.
முன்னதாக காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில், 2015 ஆம் ஆண்டு முதல் - அரசு கேபிள் டிவி நிறுவனம் பராமரிப்பில், இயங்கிவந்த இ-சேவை மையம் திடீரென, புதிதாக துவக்கப்பட்ட ஏரல் தாலூக்காவிற்கு - செப்டம்பர் மாதம் - மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, சென்னையில் தகவல் தொழில் நுட்பவியல் துறை அரசு செயலர் டாக்டர் சந்தோஷ் பாபு IAS மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு ஜான் லூயி IAS ஆகியோரை, மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் நேரடியாக சந்தித்தனர்.
அதன் பயனாக , அரசு கேபிள் நிறுவனத்தின் தூத்துக்குடி மாவட்ட தாசில்தார் - காயல்பட்டினம் வருகை புரிந்து, பேருந்து நிலையம் வளாகத்தில் (தற்போது ஆதார் மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே), மீண்டும் இ-சேவை மையத்தை அமைக்கலாம் என அறிக்கை சமர்ப்பித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட - தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், இதற்கான உத்தரவையும் உடனடியாக வழங்கியது.
இருப்பினும் - இ-சேவை மையம் மீண்டும் செயல்பட காலதாமதம் ஆகிவந்ததால், -இ-சேவை மையம் விரைவில் மீண்டும் இயங்கிட ஆவனம் செய்திடக்கோரி - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி IAS மற்றும் காயல்பட்டினம் நகராட்சியின் பொறுப்பு ஆணையர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் IAS ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் சார்பாக நவம்பர் 26 அன்று கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சி - இ-சேவை மையத்தை, பேருந்து நிலையம் வளாகத்தில் அமைத்திட அனுமதி வழங்கியது. நகராட்சியின் அனுமதியை அடுத்து விரைவில் இ-சேவை மையம் காயல்பட்டினத்தில் துவக்கப்படும் என்றும் கேபிள் டிவி தாசில்தார் உறுதியளித்திருந்தார்.
கடந்த சனிக்கிழமையன்று மதியம், பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள நகராட்சி கட்டிடத்தில் (ஆதார் மையம் வளாகம்), இ-சேவை மையத்தை துவங்கிட - தேவையான சாதனங்கள் பொருத்தப்பட்டன. அடுத்த சில தினங்களில் - இறைவன் நாடினால் - இ-சேவை மையம் செயல்படதுவங்கும் என்றும் அரசு கேபிள் நிறுவன அதிகாரிகள், மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகிகளிடம் தெரிவித்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 19, 2018; 1:45 pm]
[#NEPR/2018121902]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|