இரத்த வங்கிகள் மூலம் பெறப்படாத குருதியை நோயாளிக்கு ஏற்றுவது சட்டப்படி குற்றம் என்பதை விளக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கை:-
உலக சுகாதார அமைப்பின் (WHO) இலக்கான மக்கள் தொகையின் ஒரு சதவீதம் பேர் - குருதிக்கொடை செய்தால், சமுதாயத்தின் தேவை பூர்த்தியாகும் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு - மெகா | நடப்பது என்ன? குழுமம் ஒருங்கிணைப்பில் - நடத்தப்படும் குருதிக்கொடை முகாம்களை சீர்குலைக்கும் நோக்கில் - ஒரு சிலர், அடிப்படையற்ற சில பிரச்சாரங்களை தொடர்ந்து நகரில் மேற்கொண்டு வருகின்றனர்.
நோயாளிகளை நேரடியாக சந்தித்து, மருத்துவமனைகளில் குருதிக்கொடை செய்வது தான் சிறந்தது என்றும் விபரம் அறியாத சிலர் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகள் மூலம் சேகரிக்கப்பட்டு, அவசியமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு - சேமித்துவைக்கப்பட்ட ரத்தத்தை மட்டுமே, நோயாளிகளுக்கு வழங்கவேண்டும்.
குருதிக்கொடை செய்பவரிடம் - மருத்துவமனைகளில் குருதி தானம் பெற்று, நோயாளிகளுக்கு ஏற்றும் முறை - மருத்துவத்துறையில் UNBANKED DIRECT BLOOD TRANSFUSION (UDBT) என அழைக்கப்படும். அந்த ரத்தம், பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும், அந்த வழிமுறை சட்டப்படி தடைசெய்ப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், ரத்த வங்கிக்கான உரிமம் இல்லாத மருத்துவமனையை சார்ந்த மருத்துவர்கள், நோயாளிகளின் உயிரை காப்பாற்றும் நோக்கில் - இந்த வழிமுறையை பயன்படுத்தினாலும் - தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கீகரிக்கப்படாத, அதற்கான உரிமம் பெறாத - மருத்துவமனை உட்பட எந்த அமைப்பும், கொடையாளிகளிடம் இருந்து ரத்தம் எடுக்கக்கூடாது. இந்த சட்டத்திருத்தம் (DRUGS AND COSMETICS ACT 1940), 1999 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.
எனவே - குருதிக்கொடைக்கான, சட்டப்பூர்வமான, பாதுகாப்பான, வழிமுறை - அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகள் அல்லது ரத்த வங்கிகள் மூலம் நடத்தப்படும் முகாம்கள் மட்டுமே ஆகும்.
ரத்த வங்கி நடத்த - அரசு அங்கீகாரம் பெற்றுள்ள மருத்துவமனைகள், தாமாகவே முகாம்கள் நடத்தலாம்; கொடையாளர்களிடம் ரத்தம் பெறலாம்.
இது தவிர - மருத்துவமனைகள், BLOOD STORAGE UNIT என்ற முறையில், ரத்த வங்கிகள் மூலம் தேவையான ரத்தம் பெற்று, பாதுகாத்து வைக்கலாம்.
ரத்த வங்கிகள் மூலம், தேவையான ரத்தம் பெறுவது மருத்துவமனைகளின் கடமை; பல மருத்துவமனைகள், இந்த பொறுப்பினை - நோயாளிகளின் குடும்பத்தினர் மீது சுமத்துகிறார்கள். இது சட்டப்படி தவறு.
மருத்துவமனைகள், தாமாகவே ரத்த வங்கிகள் துவங்கவேண்டும் அல்லது ஏதாவது ரத்த வங்கியுடன் - புரிந்துணர்வு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இது தான் அரசின் வழிகாட்டல்.
எனவே தான், மெகா | நடப்பது என்ன? குழுமம், ரத்த வங்கிகளை வலிமை படுத்தும் நோக்கில் - குருதிக்கொடை முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. சட்டப்படி தவறு என்பதால், மருத்துவமனைகளுக்கு சென்று குருதிக்கொடை செய்வதை மெகா | நடப்பது என்ன? குழுமம் ஊக்கப்படுத்துவதில்லை.
இந்த உண்மை அறியாமல், நகரில் ஒரு சிலர் - குருதிக்கொடை முகாம்களுக்கு எதிராக தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 19, 2018; 9:30 am]
[#NEPR/2018121901]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|