செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 116 - வது செயற்குழு ஜித்தா ஷரஃபிய்யாவிலுள்ள இம்பால உணவக உள்ளரங்கில் வைத்து நடந்தேறிய நிகழ்வின் விபரம் வருமாறு:
செளதி அரேபியா- ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 116-வது செயற்குழு கூட்டம் கடந்த 07/12/2018, வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் முதல் அமர்வு
06:30 மணியளவிலும் அதனை அடுத்து இரவு 08:00 மணிக்கு இரண்டாவது அமர்வு என இரு அமர்வாக, ஜித்தா-ஷரஃபியாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து சிறப்பாக நடந்தேறியது.
முதல் அமர்வு:
சகோ. குளம் எம்.ஏ. அஹ்மது முஹியதீன் தலைமையில் சகோ. எஸ். ஏ. கே. அபுல் ஹஸன் ஷாதுலி இறைமறை ஓத, முதல் அமர்வு ஆரம்பமானது.
மன்ற தலைவர் வரக்கூடிய புதிய ஆண்டின் புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வது சம்பந்தமாக நல்ல விளக்கத்தைத் தந்து, கடந்த ஆண்டுகளில் மன்றம் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு சேவையாற்றியது, என்பதை நினைவு கூர்ந்து உறுப்பினர்களின் நல்ல கருத்துகளை தருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க மன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கருத்துக்களுடன் கூடிய நல்ல ஆலோசனைகளை தந்தார்கள்.
மன்ற செயல்பாடுகள்:
இந்த அருமையான கூட்டத்தில் நம் எல்லோரையும் அல்லாஹ் ஒன்று சேர்த்துள்ளான். என்று தொடங்கி, இந்த நிர்வாகத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருவதுடன், ஒரு குழு ஒன்று அமைத்து, அதன்மூலம் உறுப்பினர்களின் யோசனைப்படி கலந்து ஆலோசித்து புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். மாற்றம் என்பது நிச்சயமாக நிகழக்கூடியது, அதன்படி புதிய தலைமுறைகள் வரும்போது அவர்களுக்குள்ளே இருக்கும் நல்ல ஆற்றலையும் திறமையையும் நிச்சயமாக வெளிக்கொணர முடியும். ஆகையால் சிறந்த நிர்வாகத்தை அமைத்து துடிப்புடன் செயல்படுவோம். என்று கூறியதுடன் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றியும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இம்மன்றம் மூலம் உதவி செய்ததையும் கோடிட்டு காட்டி, தாராள மனதுடன் நிதி வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூறி பாராட்டியதுடன் இன்னும் நல்ல சேவைகளை மன்றம் மூலம் தொடர்ந்து செய்வோம் என்று அழகுற எடுத்துரைத்து தனதுரையை நிறைவு செய்தார். மன்ற செயலாளர் சகோ.எம்.ஏ. செய்யது இப்ராஹிம்.
மன்ற உறுப்பினர்களின் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்திற்கு பின் இரண்டாவது அமர்வு, சிறப்பு விருந்தினர் வருகைக்குப்பின் இனிதே ஆரம்பமாகியது.
சிறப்பு விருந்தினர் சகோ எல். கே. கே. லெப்பை தம்பி அவர்களை வரவேற்று, மன்ற தலைவர் சகோ. குளம். எம்.ஏ. அஹ்மது முஹியதீன் இரண்டாவது அமர்வு ஆரம்பம் செய்தார்.
வரவேற்புரை:
சகோ. ஏ.எம்.செய்து அஹ்மது வருகை புரிந்த சிறப்பு விருந்தினர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்று அமர, கூட்டம் இனிதே ஆரம்பமாகியது.
சிறப்பு விருந்தினர் அறிந்துகொள்வதற்காக மன்றத்தின் செயல்பாடுகள் பற்றி மன்ற செயலாளர் சகோ.எம்.ஏ. செய்யது இப்ராஹிம். சுருக்கமாக தனதுரையில், மக்காவில் வைத்து மூன்று வருடங்களுக்கு முன் நடந்த செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தவர் இன்று மீண்டும் நம் கூட்டத்தை அலங்கரிக்க வந்து கலந்து கொண்டமைக்கு நன்றி கூறுவதுடன் மாதம் ஒருமுறை கூடி, நம் மக்களிடம் இருந்து வரும் மனுக்களை பரிசீலித்து அதற்கு உதவிகள் செய்வதும், சமீபத்தில் நடந்த கஜா புயலுக்கு நிதி உதவி செய்ததையும் குறிப்பிட்டு காட்டி, நமதூர் மக்கள் யாரெல்லாம் புனித உம்ரா கடமையை நிறைவேற்ற வருகின்றார்களோ அவர்களில் சிலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர்.அப்படிப்பட்ட ஒரு சிறப்பு இம் மன்றத்திற்கு இருக்கிறது. நம் சிறப்பு விருந்தினர் சகோ. எல். கே. கே. லெப்பை தம்பி அவர்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை எல்லோருக்குமே அவரைப் பற்றி நன்றாக தெரியும். தனது வியாபாரத்திற்கு மத்தியில் பல சமுதாய சேவைகளை அவர்கள் செய்து வருகின்றார்கள். மேலும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் துணைச்செயலாளரா கவும், இக்ராஃ செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகின்றார்கள் என்பதை எடுத்துக் கூறி நிறைவு செய்தார்.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த கூட்டத்தின் தீர்மானம் மேலும் நிறைவேறிய மன்றப்பணிகள், கஜா புயலுக்கு அள்ளி வழங்கிய நிதியை, நமதூர் ஐக்கியப் பேரவைக்கு கையளித்த விளக்கத்தையும், நாம் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு வழங்கிய நிதி மற்றும் மன்றம் சார்ந்த செய்திகளையும், நல்ல விளக்கமுடன் பதிவு செய்தார். மன்ற செயலாளர் சகோ. சட்னி. எஸ்.ஏ.கே. செய்யிது மீரான்.
நிதி நிலை:
தற்போதைய இருப்பு, கல்வி மற்றும் மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் போன்ற விபரம் மற்றும் நிதிநிலைகளை விளக்கினார் பொருளாளர் சகோ. எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம்.
மருத்துவ உதவிகள்:
ஷிபா மருத்துவ கூட்டமைப்பின் மூலமாக பெறப்பட்ட பயனாளிகளின் மனுக்கள் வரிசைப்படுத்தப்பட்டு சிறப்பு விருந்தினர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டு, புற்றுநோய், சிறுநீரக பிரச்சனை, இருதய அடைப்பு, காதில் சதை, மனநிலை பாதிப்பு, கர்ப்பப்பை நீக்கம், மூளையில் கட்டி, இரத்த சோகை, நுரையீரலில் தொற்று, டிபி, காலில் சீல், மற்றும் கண் அறுவை சிகிச்சை என பாதிப்புக்குள்ளாகியுள்ள நம் காயல் சொந்தங்கள் மொத்தம் 19 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்து நிதி ஒதுக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர் சிறப்புரை:
தன்னை அன்போடு வந்து இம்மன்ற அமர்வில் கலந்து கொள்ள அழைத்தமைக்கு முதலில் நன்றி கூறி, நபி மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வுதனை மேற்கோள் கட்டி, பிரார்த்தனையுடன் தனது உரையை ஆரம்பம் செய்தார் சகோ.எல்.கே.கே. லெப்பைத் தம்பி. நம் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நம் ஊர் மேல் கொண்ட பற்று இவற்றை கண்டு பெருமிதம் கொள்வதாயும், தான தர்மங்கள் முதலில் நம் சொந்த பந்தங்கள், அண்டை அயலார்கள் யார் கஷ்டத்தில் உள்ளார்களோ அங்கிருந்து ஆரம்பம் செய்ய வேண்டும்.
அல்லாஹ்வின் கிருபை கொண்டு இந்த ஜித்தா காயல் நல மன்றம் பல சிறந்த பணிகளை செய்து வருவதை காண முடிகிறது. இது ஒரு பாராட்டத்தக்க விஷயம் அல்லாஹ்வின் பொருத்தத்திற்கு உகப்பானது. அல்லாஹ் ஈருலகிலும் நற்கூலியை உங்களுக்கு வழங்குவானாக என்று துவா செய்கின்றேன். இதனை இன்னும் வீரியத்துடனும் சிறப்புடனும் செய்ய வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் பிரிந்துவிடாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள்.
உடம்பில் எங்கு அடிபட்டாலும் அதன் வேதனையை உணர்வோம், அது போல் நம் சமுதாயத்திற்கு ஒன்று என்றால் நாம் உடனே அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும். அந்த நிலைக்கு நாம் தள்ளப்பட வேண்டும். கருத்து வித்தியாசம் வந்து நாம் கலைந்துவிடக்கூடாது. நமக்குள் போட்டிகள் இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்கக்கூடாது. கலந்தாலோசனை செய்து நம்ம ஊருக்கு வேண்டி நல்லதைச் செய்யுங்கள். சில விஷயங்களில் நாம் ஊர் சேர்ந்து செய்ய வேண்டியதை ஊர் சேர்ந்துதான் செய்ய வேண்டும், அதில்தான் பல வெற்றிகளைக் காண முடியும்.
நல்ல இஹ்லாசுடன் தலைமைக்கு கட்டுப்பட்டு ஒற்றுமையுடன் செயல்படுங்கள். கருப்பு நிறமுடைய அடிமையை உங்களுக்கு தலைவராக போட்டாலும் அவருக்கு கட்டுப்பட வேண்டும் என்று நபியவர்கள் கூறினார்கள்.
சின்ன வயதில் நாம் பள்ளியில் படித்தோம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இங்கு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்ற முதுமொழியை ஞாபகப்படுத்தி, வல்ல ரஹ்மான் நம்முடைய ஊருக்கும் நம் சமுதாயத்திற்கும் ஒற்றுமையை தந்து, இந்த உலகத்தில் தீனுல் இஸ்லாம் மேலோங்கச் செய்ய அருள் புரிவானாக ஆமீன்.
என்ற பிரார்த்தனையுடன் அழகான முறையிலே சில ஹதீஸ்களையும் மேற்கோள்காட்டி, கருத்துக்கேற்ற நல்ல சிறுகதைகளையும் கூறி அழகுபட எடுத்துரைத்து அமர்ந்தார் சிறப்பு அழைப்பாளர்.
சகோ. எஸ்.ஹெச். அமீர் சுல்தான் நன்றி நவில, சகோ. எஸ். எஸ். ஜாபர் சாதிக்
பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் இச்செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
தீர்மானங்கள்:
1 - புதிய நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஏழு பேர் கொண்ட குழு சகோ.எஸ்.எஸ். ஜாபர் தலமையில் ஓன்று கூடி கலந்தாலோசித்து ஒருமித்த கருத்துடன் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுகோள் வைக்கப்பட்டது.
2 - சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிவு செய்து அதன் படி தாராள மனதுடன் அள்ளி வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு மனதார நன்றி பாராட்டுவதுடன், அதனை காயல்பட்டணம் முஸ்லீம் ஐக்கிய பேரவைக்கு கையளிக்க, அவர்கள் ஓன்று திரட்டிய நிதியுடன், நமது பங்களிப்பையும் சேர்த்து பாதிக்கப்பட்ட மக்களை பல சிரமங்களுக்கு மத்தியில் தேடிச் சென்று வழங்கிய பேரவை உறுப்பினர்களுக்கும், அவர்களுடன் இணைந்து களப்பணியாற்றிய தன்னார்வ தொண்டர்களுக்கும் இம் மன்றம் துஆவுடன், மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவிக்கின்றது.
3 - இன்ஷா அல்லாஹ் அடுத்த 117 ஆவது செயற்குழுக்கூட்டம் வருகின்ற புது வருடம் ஜனவரி 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின் ஜித்தா-ஷரஃபியாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து நடைபெறும்.
செய்தியாக்கம்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
செய்தியாக்கம்:
புகைப்படம்.
அரபி எம்.ஐ.முஹம்மது சுஐபு.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
07.12.2018.
|