வரும் பிப்ரவரி 16ஆம் நாளன்று மதுரை – ஒத்தக்கடையில் நடைபெறவுள்ள – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கில் பங்கேற்பதென அதன் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் பீ.மீராசா மரைக்காயர் தலைமையில், 25.01.2019. வெள்ளிக்கிழமையன்று 17.30 மணியளவில், தூத்துக்குடி தெற்குப் புதுத் தெருவிலுள்ள சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதினார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் வரவேற்புரையாற்றினார். ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ – மறைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களின் மக்ஃபிரத்திற்காக துஆ இறைஞ்சினார். மாவட்டத்தின் மேலிடப் பார்வையாளர்களான – மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, எஸ்.டீ.யு. மாநில பொதுச் செயலாளர் குளச்சல் செய்யித் அலீ, மின்னணு ஊடகப் பிரிவு மாநில துணை ஒருங்கிணைப்பாளர் மேலப்பாளையம் அப்துல் ஜப்பார், சீனா காயிதேமில்லத் பேரவை பிரதிநிதி பீ.எஸ்.என்.அஹ்மத் ஜரூக், முஸ்லிம் யூத் லீக் மாவட்டச் செயலாளர் எம்.கே.இம்ரான் கான், எம்.எஸ்.எஃப். மாவட்டத் தலைவர் சாரா முபாரக் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற – மாநில பொதுச் செயலாளரும், அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் – மாநாட்டின் அவசியம் குறித்தும், தாய்ச்சபையின் வளர்ச்சி குறித்தும் சிறப்புரையாற்றினார்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ பின்வருமாறு தீர்மானங்களை வாசிக்க, கூட்டத்தில் அவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 – இரங்கல் தீர்மானம்:
அண்மையில் காலமான - கேரள முன்னாள் அமைச்சர் செர்குளம் அப்துல்லாஹ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணை செயலாளர்களான கூடலூர் எம்.ஏ.சலாம், திண்டுக்கல் ஷபீர் அஹ்மத், வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் குடியாத்தம் ரஹ்மத்துல்லாஹ் கான், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் எம்.எம்.ஜாஃபர், கட்சியின் காயல்பட்டினம் நகர ஊழியர் பீ.எம்.யு. அமானுல்லாஹ், தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் மன்னர் ஏ.ஆர். பாதுல் அஸ்ஹப் அவர்களது தாயார் ஹாக்ஜா கே.எம்.ஹவ்வா பீவி, ஐக்கிய அரபு அமீரகம் அய்மான் சங்க முன்னாள் தலைவர் எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் என்ற சின்னலெப்பை அவர்களது மனைவியும் - அய்மான் சங்க நிகழ் செயலாளர் எஸ்.ஏ.சி.ஹமீத் அவர்களது தாயாருமான ஹாக்ஜா எம்.கே.டீ.செய்யித் அஹ்மத் ஃபாத்திமா ஆகியோரது மறைவுக்கு இக்கூட்டம் இரங்கல் தெரிவிப்பதுடன், அன்னாரின் மண்ணறை மறுமை நற்பேறுகளுக்காக மனமாரப் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 02 – மாநாட்டுத் தீர்மானம்:
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பிப்ரவரி 16ஆம் நாளன்று மதுரை ஒத்தக்கடையில் நடைபெறவிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மாநாட்டில் மாவட்டம் முழுவதிலும் இருந்து இரண்டாயிரம் பேருக்குக் குறையாமல் பங்கேற்கவும், அதன் வரவேற்புக் குழுவில் நூற்றுக்கணக்கானோரை இணைக்கவும், நடைபெறவிருக்கும் மாநாடு குறித்து பொதுமக்களுக்கு விளக்க மாவட்டம் முழுக்க தெருமுனைப் பரப்புரைக் கூட்டங்களை நடத்தவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 03 – ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரல்:
தூத்துக்குடி மாவட்டத்திலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் சுற்றுச்சூழலைச் சீர்கெடுத்து, அங்கு வாழும் மக்களின் உயிருக்கும், உடல் நலத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை - மீண்டும் செயல்படாத அளவுக்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிரந்தரமாக மூடிட, மத்திய அரசையும், தமிழக அரசையும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 04 – தூத்துக்குடி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையைப் புதுப்பித்தல்:
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, ஆமை வேகத்தில் அமைக்கப்பட்டு வரும் கிழக்குக் கடற்கரைச் சாலைத் திட்டத்தை விரைவாக முடிப்பதன் மூலம், தூத்துக்குடி – திருச்செந்தூர் நெடுஞ்சாலை போக்குவரத்திற்குத் தகுதியற்றதாகத் திகழும் நிலையை மாற்றிட மாநில அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 05 – காயல்பட்டினத்தில் அனைத்துப் பகுதிகளிலும் புதிய சாலைகள்:
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட – பெரும்பாலும் அனைத்துப் பகுதிகளிலும், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சாலைகள் புதுப்பிக்கப்படாமல், ஏற்கனவே இருந்த சாலையும் இருந்த இடம் தெரியாமல், ஊர் முழுக்கக் குண்டுங்குழியுமாக உள்ளது. இந்தக் குறையை நிரந்தரமாகப் போக்கும் வகையில், அவ்வனைத்துப் பகுதிகளிலும் தரமான தார் சாலையைப் போர்க்கால அடிப்படையில் அமைத்திட காயல்பட்டினம் நகராட்சியை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 06 – காயல்பட்டினம் இரண்டாம் குடிநீர் திட்டம்:
காயல்பட்டினத்தில் இரண்டாம் குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகள் மிகவும் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையை மாற்றி, வெகு விரைவாக அத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்து, காயல்பட்டினம் மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்குமாறும், அதே நேரத்தில் ஏற்கனவே ஆத்தூரிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் காயல்பட்டினத்திற்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிடவும் தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 07 – காயல்பட்டினம் அரசு மருத்துவமனையைத் தரம் உயத்தல்:
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை – தாலுகா அளவிலான மருத்துவமனையாகத் தரமுயர்த்தவும், அங்கு இதுவரை வெற்றிடமாக உள்ள பணியிடங்களில் உரியவர்களை உடனடியாக நியமித்து, மக்கள் நலன் காக்க ஆவன செய்யவும் தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 08 – DCW அமிலக் கழிவு தொழிற்சாலை:
காயல்பட்டினம் – சுற்றுப்புறப் பகுதி மக்களின் உயிருக்கும், உடல் நலனுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் டி.சி.டபிள்யு. அமிலக் கழிவு தொழிற்சாலையை நிரந்தரமாக மூடி, மக்கள் உயிருக்கும், உடல் நலனுக்கும் உத்தரவாதம் அளித்திட மத்திய – மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 09 – மாவட்டத் துணைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை:
கடந்த 02.01.2019. புதன்கிழமையன்று - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நடத்தப்பட்ட ஊழியர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கண்ணியம் - கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டு, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியிருக்கும் காயல்பட்டினம் எம்.எச்.அப்துல் வாஹித் அவர்களை - அவர் வகித்து வந்த 'தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர்' உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் விடுவித்து, இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 10 – ஆத்தூரில் வேகத்தடைகள்:
ஆத்தூரில் தேவையான இடங்களில் வேகத்தடைகளை அமைத்து, சீரான போக்குவரத்திற்கு வழிவகை செய்திட தமிழக நெடுஞ்சாலைத் துறையை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 11 – கேம்பலாபாத்தில் அனைத்துப் பேருந்துகளையும் நிறுத்தக் கோரல்:
கேம்பலாபாத் – சுற்றுப்புறப் பகுதி மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளையும் நின்று, பயணியரை ஏற்றிச் செல்லப் பணிக்குமாறு தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 12 – இஷாஅத் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு:
தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபை சார்பில், பாளையங்கோட்டை 10ஆம் நம்பர் பங்களா வளாகத்தில் விரைவில் துவக்கப்படவிருக்கும் காயிதேமில்லத் மருத்துவ உதவி மையம் மற்றும் இஷாஅத்துல் இஸ்லாம் சென்டர் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மூத்த தலைவர்களான எம்.அப்துல் கனீ, ஐ.எம்.உஸ்மான் கான், மாவட்ட துணைத்தலைவர் முத்தையாபுரம் முஸ்தஃபா, மாவட்ட துணைச் செயலாளர் பெத்தப்பா சுல்தான், தூத்துக்குடி மாநகர தலைவர் நவ்ரங் எம்.ஸஹாபுத்தீன், மாநகர செயலாளர் எஸ்.பீ.முஹம்மத் அலீ பாஷா, மாநகர பொருளாளர் முஹ்யித்தீன் மூஸா, காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் செய்யித் சுலைமான், ஜெய்லானி தெரு ப்ரைமரி அப்துல் ஃகாலிக், அன்ஸாரீ, ஷேக் மெய்தீன், ஜமால், காஸிம், மாவட்ட மீனவரணி தலைவர் திரேஸ்புரம் மன்ஸூர், மாவட்டப் பிரதிநிதிகளான தூத்துக்குடி செய்யித் மஸ்தான், தூத்துக்குடி முஹம்மத் உவைஸ், காயல்பட்டினம் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், எம்.எம்.உமர், மலேஷியா ஏ.டபிள்யு.அய்யூப், எம்.எம்.அய்யூப், நடுவர்பட்டி ப்ரைமரி சுபைர்தீன், ஷாஹுல் ஹமீத், அரியநாயகிபுரம் ப்ரைமரி அப்துல் ரஹ்மான், ரஹ்மத்துல்லாஹ்புரம் ப்ரைமரி அக்பர்கான், ஜெய்லானி தெரு ப்ரைமரி செய்யித் ஜாஃபர், காயல்பட்டினம் 02ஆவது வார்டு ப்ரைமரி தலைவர் பீ.எம்.எஸ்.அமானுல்லாஹ், செயலாளர் எம்.இசட்.சித்தீக், 03ஆவது வார்டு ப்ரைமரி பொருளாளர் எஸ்.ஏ.கே.முஜீபுர்ரஹ்மான், 04ஆவது வார்டு ப்ரைமரி செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, 05ஆவது வார்டு ப்ரைமரி தலைவர் அரபி எம்.எம்.ஷாஹுல் ஹமீத், செயலாளர் என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், பொருளாளர் கே.எம்.ஏ.அஹ்மத் ஸாலிஹ், 06ஆவது வார்டு ப்ரைமரி தலைவர் ஏ.கே.மஹ்மூத் சுலைமான், 07ஆவது வார்டு ப்ரைமரி செயலாளர் கே.வி.எச்.எம்.ஜிஃப்ரீ, ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர், 09ஆவது வார்டு ப்ரைமரி செயலாளர் சாளை புகாரீ, 17ஆவது வார்டு ப்ரைமரி தலைவர் ஜெ.உமர், செயலாளர் கே.எம்.டீ.அபூபக்கர் சித்தீக், 18ஆவது வார்டு ப்ரைமரி தலைவர் குளம் சாஹிப் தம்பி தோட்டம் எஸ்.ஆர்.ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கே.எம்.என்.உமர் அப்துல் காதிர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|