காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
மார்ச் 29 அன்று இருபத்தொன்றாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் புதுப்பள்ளியின் இமாம் மவ்லவீ காலித் அன்ஸாரீ ஃபாஸீ, குருவித்துறைப் பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ ஆகியோர் வழங்கினர்.
தலாக் எனும் மணமுறிவின் சட்டங்கள் குறித்தும், மஹான் ஸாம் ஷிஹாபுத்தீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு நாளாதலால், அவர்களது வாழ்க்கைச் சரிதம் குறித்தும் அவர்களது உரைகளில் தகவல்கள் இடம்பெற்றன.
ரஜப் 23ஆம் நாள் (மார்ச் 31) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, சென்னை கோடம்பாக்கம் ஜும்ஆ பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் ஃபாழில் ஜமாலீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|