வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், நிகழாண்டு காயல் ப்ரீமியர் லீக் கால்பந்துப் சுற்றுப்போட்டி துவங்கி நடைபெற்று வருகின்றன. 26.04.2019. வெள்ளிக்கிழமையன்று 17.00 மணியளவில், சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் விளையாட்டுச் சீருடை (ஜெர்ஸி) வழங்கும் விழா, கடற்கரை அருகிலுள்ள வி.எம்.எஸ்.லெப்பை விளையாட்டரங்கில் நடைபெற்றது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். ஜெ.ஏ.லரீஃப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
கிராஅத், வரவேற்புரையைத் தொடர்ந்து, வீரர்களுக்கு ஜெர்ஸி வழங்கப்பட்டது. நிகழ்ச்சித் தலைவரும், முன்னிலை வகித்த காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், சாமு ஷிஹாபுத்தீன், எல்.கே.மேனிலைப் பள்ளி ஆசிரியர் மீராத்தம்பி உள்ளிட்ட அவையோர் அணிகளின் வீரர்களுக்கு ஜெர்ஸி வழங்கினர்.
அண்மையில் வாகன விபத்தில் உயிரிழந்த – விளையாட்டு வீரர் முஹம்மத் ஜமாலுத்தீன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மவுனம் கடைப்பிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக் தம்பி, காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், காயல்பட்டினம் ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் ‘அக்குஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ், இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோர் மாணவர்களிடையே உரையாற்றினர்.
18 வயதையடைந்து, ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே இரு / நாற்சக்கர வாகனங்களை ஓட்டுமாறும், அதற்குக் குறைவான வயதுடையவர்கள் எக்காரணம் கொண்டும் மேற்படி வாகனங்களை ஓட்டாமல் தவிர்த்து, மிதிவண்டிகளை ஓட்டி – உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும், அதன் மூலம் – பல்வேறு கனவுகளுடன் பெற்று, வளர்த்துப், பராமரித்து வரும் பெற்றோருக்கு மனமகிழ்ச்சியை வழங்கிடுமாறும் உரையாற்றியோர் கேட்டுக்கொண்டனர்.
நன்றியுரை, கஃப்பாரா துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இதில், அனைத்தணிகளின் வீரர்கள் உள்ளிட்ட மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை, வி.எம்.எஸ். லெப்பை விளையாட்டரங்க மேலாளர் எம்.ஜஹாங்கீர் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். |