சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 119-வது செயற்குழு கூட்டம் ஷரஃபியாவிலுள்ள சகோ.பாளையம் செய்யிது முஹ்யித்தீன் இல்லத்தில் சென்ற 05/04/2019 வெள்ளி மாலை 07:30 மணிக்கு நடந்தேறியது.
இச்செயற்குழுவிற்கு மன்றத்தலைவர் சகோ.பிரபு எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா தலைமை ஏற்றார். சகோ.அரபி எம்.ஐ.முஹம்மது ஷுஐபு இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கினார். மன்ற துணைத்தலைவர் சகோ.ஓ.ஏ.சி.கிஜார் ஸலாஹுத்தீன் வரவேற்புரை நல்கினார்.
தலைமையுரை:
சென்ற செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதன் நிமித்தம் நடந்தேறிய மன்றப்பணிகள் மற்றும் இன்றைய செயற்குழுவின் கூட்டப் பொருள் பற்றிய விபரங்களையும் தலைமையுரையாக தந்தார் சகோ.பிரபு எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா.
பிரிவுபசாரம்:
பல ஆண்டுகளாக ஜித்தாவில் பணிபுரியும் நம் மன்றத்தின் மூத்த உறுப்பினர் சகோ.எஸ்.ஹெச்.அப்துல்காதிர் அவர்கள் பணி முடித்து தாயகம் செல்லவிருப்பதால் அவரை வாழ்த்தி, மன்றத்துடனான அவரது தொடர்பு மற்றும் உழைப்பு குறித்த தகவலை சீரிய முறையில் தொகுத்தளித்தார் மன்ற ஆலோசகர் சகோ.எம்.ஏ.செய்யிது இப்ராஹீம்.
மேலும், அவர் மற்றும் அவர் குடும்பத்தின் சமூகப்பார்வை / சேவை பற்றிய அழகிய கருத்துக்களை மன்ற மூத்த செயற்குழு உறுப்பினர் சகோ. எஸ்.எஸ்.ஜாஃபர் சாதிக், மன்ற ஆலோசகர் சகோ.சட்னி எஸ்.ஏ.கே.செய்யிது மீரான் மற்றும் பலர் எடுத்துரைத்தனர்.
சகோ.எஸ்.ஹெச்.அப்துல்காதிர் அவர்களின் சேவையைப் பாராட்டி மன்றத்தின் சார்பாக ஒரு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
ஏற்புரை:
மன்றம் ஆரம்பித்த காலந்தொட்டு இதுகாறும் இணைந்து பணியாற்றிய சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட சகோ.எஸ்.ஹெச்.அப்துல்காதிர், அவ்வாய்ப்பினை நல்கிய இறையை போற்றி, இந்நற்பணிகளை இன்ஷாஅல்லாஹ் தாய்மண்ணிலும் தொடர்வேன் என உறுதியளித்து, நமது மன்றம் நம் ஊருக்கும், சமுதாயத்திற்கும் மேலும் பல சேவைகளாற்றி அதன் பணிகள் சிறக்க இறையை பிரார்த்தித்து பிரியா விடைபெற்றார்.
நிதி நிலை:
மன்றத்தின் பொது இருப்பு, சிறப்பு திட்டங்களுக்கான ஒதுக்கீடு மற்றும் கடந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட உதவிகள் பற்றிய நிதி விபரங்களை விரிவாக சமர்ப்பித்தார் மன்ற துணைப்பொருளர் சகோ.எம்.எம்.முஹம்மது முஹ்யித்தீன்.
இக்ரஃ செய்திகள்:
உலக காயல் நல மன்றங்களின் கல்விக் கூட்டமைப்பான “இக்ரஃ” உடைய கல்வி உதவி குறித்த விபரங்கள் மற்றும் இதர பணிகள் பற்றி தெளிவுபடுத்தியதோடு, இக்ரஃவின் நிர்வாக சம்பந்தமாக அதன் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை செய்த விபரங்களையும் எடுத்துக்கூறினார் நம் மன்றத்தின் இக்ரஃ பொறுப்பாளர் சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ்.
ஷிஃபா செய்திகள்:
உலக காயல் நல மன்றங்களின் மருத்துவக் கூட்டமைப்பான "ஷிஃபா" மூலம் ஊரில் அண்மையில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம் பற்றிய விபரங்களை தந்தார் நம் மன்றத்தின் ஷிஃபா பொறுப்பாளர் சகோ.எம்.எம்.எஸ்.ஷெய்கு அப்துல் காதிர்.
மேலும் சென்னையில் நடந்த விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்ட நமதூர் சகோதரர் ஒருவருக்கு ஷிஃபா மூலம் கோரப்பட்ட அவசர மருத்துவ உதவி குறித்த விபரங்களையும், நமதூரில் ஆரம்பிக்கப்படும் நிலையில் பரிசீலனையில் உள்ள DIALYSIS CENTER பற்றிய செய்திகளையும் விபரமாகக்கூறினார் மன்றச்செயலரும் ஷிஃபா அறங்காவலருல் ஒருவரான சகோ.சீனா எஸ்.ஹெச்.மொகுதூம் முஹம்மது.
மருத்துவம்:
ஷிஃபா மூலம் பெறப்பட்ட மனுக்கள் வாசிக்கப்பட்டது. அதனைப் பரிசீலித்து கர்ப்பப்பை, வயிற்றுக்கட்டி, கண்புரை, கிட்னி, குறைப்பிரசவம், காமாலை, இருதய அறுவை என பத்து மருத்துவ தேவையுடையோருக்கு அதற்கான உதவிகள் அறிவித்து அவர்கள் பரிபூரண நலம் பெற ஏகனிடம் பிரார்த்திக்கப்பட்டது.
கலந்துரையாடல்:
தலைவரால் எடுத்து வைக்கப்பட்ட கூட்டப்பொருள் மீதான உறுப்பினர்களின் ஆரோக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது. அதனடிப்படையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்:
1. இக்ராஃவின் கல்வி உதவி மற்றும் நிர்வாக நிவர்த்தி சம்பந்தமாக சில எளிய வழிமுறைகளை முறைப்படி இக்ராஃவிற்கு தெரிவித்தல்.
2. ஷிஃபா மூலம் KMT மருத்துவமனையில் துவக்கப்பட இருக்கும் DIALYSIS CENTER குறித்த செயலாக்க பகுப்பாய்வு (Feasibility Analysis) மற்றும் திட்ட அறிக்கையை (Project Report) கேட்டுப்பெறுதல். அதன் தொடர் முன்னேற்றப் பணிகளை அவதானித்து நம் மன்றத்தின் பங்களிப்பை வழங்குதல்.
3. நமது மன்றத்தின் அடுத்த கூட்டம் புனித ரமழான் மாதத்தில் பொதுக்குழுவாக இன்ஷாஅல்லாஹ் 17-05-2019 வெள்ளிக் கிழமையன்று ஷரஃபிய்யா – ஆர்யாஸ் உணவக உள்ளரங்கில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்:
உம்ரா கடமையை நிறைவேற்ற புனித மக்கா வந்திருந்த நமதூர் பெரிய நெசவு தெருவைச் சார்ந்த சகோ.ழாஃபிர் அவர்கள் இச்செயற்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மன்ற செயல்பாடுகளை அவதானித்த அவர் மன்றத்தை வாழ்த்தி பாராட்டியதோடு பணிகள் தொய்வின்றி தொடர பிரார்த்தித்தார்.
செயற்குழு உறுப்பினர் அல்லாத ஐந்து பொதுக்குழு உறுப்பினர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துக்களை எடுத்துக் கூறினர்.
நன்றியுரை:
இச்செயற்குழு இனிதே நிறைவுற அருள்புரிந்த இறைவனுக்கு முதல் நன்றியை உரித்தாக்கி, கலந்து கொண்ட உறுப்பினர்கள், சிறப்பழைப்பாளர்கள், கூட்ட அனுசரணையாளர்கள் மற்றும் கூட்டம் நடத்த இடஉதவி, சுவையானதொரு காயல் கஞ்சி, இரவு உணவு என அனைத்தையும் செவ்வனே ஏற்பாடு செய்து தந்த சகோ.பாளையம் செய்யிது முஹ்யித்தீனுக்கும் நன்றிகளை தெரிவித்தார் மன்ற இணைச்செயலர் சகோ.செய்யிது அஹ்மது.
மன்றப்பொருளர் சகோ.முஹம்மது ஆதம் இறைவேண்டல் செய்ய கஃப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் மற்றும் படங்கள்:
செய்திப் பிரிவு
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
05.04.2019.
|