“18 வயதுக்குக் குறைவானோர் இரு / நாற்சக்கர வாகனங்களை ஓட்டினால், அவர்களது பெற்றோருக்குத் தண்டனை வழங்கப்படும்!” என - வாகன விபத்து குறித்து காயல்பட்டினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கலந்துகொண்டு, மாணவர்களிடையே விழிப்புணர்வுரையாற்றியுள்ளார். விரிவான விபரம்:-
வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், காயல்பட்டினம் கடற்கரை அருகிலுள்ள வி.எம்.எஸ்.லெப்பை விளையாட்டரங்கில் - நிகழாண்டு காயல் ப்ரீமியர் லீக் கால்பந்துப் சுற்றுப்போட்டி துவங்கி நடைபெற்று வருகின்றன. 28.04.2019. ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணியளவில், நடைபெற்ற போட்டியின் நிறைவில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (திருச்செந்தூர்) பாரத் கலந்துகொண்டு, நடைபெற்ற போட்டியில் சாதனை புரிந்த வீரர்களுக்கு விருதுகளை வழங்கி, மாணவர்களிடையே வாகன விபத்து குறித்து விழிப்புணர்வுரையாற்றினார். அவரது உரை விபரம்:-
இந்த நிகழ்ச்சிக்கு யாரும் அழைத்து நான் வரவில்லை. இந்த ஊரில் 18 வயது கூட நிரம்பாத மாணவர்கள் இரு சக்கர / நாற்சக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு செல்வதும், விபத்துக்குள்ளாவதும் அடிக்கடி நடைபெறுவதையும், சில நாட்களுக்கு முன் ஒரு மாணவர் விபத்தில் உயிரிழந்ததைக் கருத்திற்கொண்டும், நானாகவேதான் விரும்பி வந்து இங்கே உரையாற்றிக் கொண்டிருக்கிறேன்.
பொதுவாகவே எல்லாப் பகுதிகளிலும் இளைஞர்கள் அதிகளவில் இருசக்கர வாகனங்களை ஓட்டினாலும், காயல்பட்டினத்தில் அவர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. பெற்றோர், தம் குழந்தைகளின் உயிர், உடல் நலன் மீது சிறிதும் அக்கறையின்றியோ அல்லது பிள்ளைகளின் பிடிவாத்திற்குக் கட்டுப்பட்டோ இருசக்கர வாகனங்களை மிகப் பெரிய தொகைக்கு வாங்கிக் கொடுத்து விடுகின்றனர்.
ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் மாணவர்களே! உங்களுள் யாருக்காவது உங்கள் பெற்றோரை காவல் நிலையத்தில் தண்டனை பெறச் செய்ய வேண்டும் என்று விருப்பம் இருந்தால், நீங்கள் பைக்கை ஓட்டிச் செல்லுங்கள்! உங்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது. உங்கள் பெற்றோருக்குத்தான் தண்டனை காத்திருக்கிறது.
18 வயதுக்குக் குறைவானவர்கள் வாகனங்களை ஓட்டுவதும், 18 வயதுக்கு மேலானவர்களும் தலைக்கவசம் இன்றி வாகனங்களை இயக்குவதும் சட்டப்படி குற்றம். இதற்காக அடிக்கடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இனி காயல்பட்டினத்தில் கூடுதலாக திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு, சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்கள் இயக்கப்பட்டால், உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அவற்றைத் திரும்பப் பெறுவது மிகவும் சிக்கலானது.
இனி இந்த ஊரிலோ, என் சரகத்திற்குட்பட்ட பகுதிகளிலோ ஒரேயோர் உயிரிழப்பு கூட நடக்கக் கூடாது என்று கருதியே இதை நான் உங்களிடையே கூறிக்கொண்டிருக்கிறேன்.
காவல்துறையின் திடீர் சோதனைக்குப் பயந்து தயவுசெய்து, வண்டியை அவசரமாகத் திருப்ப முயற்சிக்காதீர்கள். அதுவும் உங்களை விபத்தில் தள்ளிவிடும். பிடிபட்டால் அபராதம், அலைச்சலோடு முடிந்தது. ஆனால், தப்பிக்க நினைத்து விபத்தில் சிக்கிக் கொண்டால் நிலமை மிகவும் விபரீதமாகிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் வீர விளையாட்டுக்களை மைதானத்திற்குள் மட்டும் நன்றாக வைத்துக்கொள்ளுங்கள்! வெளியில் வேண்டாம்!! ஏனெனில், நீங்கள் வாகனம் ஓட்டும்போது விபத்து நேர்ந்தால் அதில் பாதிக்கப்படப் போவது நீங்கள் மட்டுமல்ல! மாறாக, அவ்வழியே செல்லும் அப்பாவிப் பொதுமக்களும் கூட உயிரிழக்க நேரிடும். அதுபோன்ற நிகழ்வுகளும் இந்த ஊரில் நடந்துள்ளதை நான் அறிவேன்.
உங்கள் மீது அக்கறை கொண்டதாலேயே – உங்கள் மூத்த சகோதரனாக இவற்றை நான் இங்கே தெரிவிக்கிறேன். ஒருவேளை பரிசோதனையில் பிடிபட்டால், அங்கே உங்கள் சகோதரனாக இருக்க முடியாது. ஒரு காவல்துறை அதிகாரியாகவே என்னால் செயல்பட இயலும். மாட்டிக் கொண்ட பிறகு, யார் பரிந்துரைக்கு வந்தாலும் அதைக் கருத்திற்கொள்ளாமல் சட்டம் தன் கடமையைச் செய்யும்!
இவ்வாறு அவர் உரையாற்றினார். அவருடன், ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் பவுன், துணை ஆய்வாளர்களான சுந்தர மூர்த்தி, முகைதீன் அப்துல் காதிர் ஆகியோர் வந்திருந்தனர்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் துணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், ஆதம் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் ‘அக்குஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நன்றி கூறினார்.
இதில், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, வி.எம்.எஸ். லெப்பை விளையாட்டரங்க மேலாளர் எம்.ஜஹாங்கீர் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
|