நாற்சக்கர வாகன விபத்தில் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் காலமானார். அவரது உடல், மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்தவர் ‘முத்துக்கெட்டி’ செய்யித் அபூதாஹிர் (வயது 44). நெய்னார் தெருவில் திருமணம் செய்துள்ளார்.
வணிகத்திற்காக வெளியூர்களுக்குச் சென்றுவிட்டு, 25.04.2019. வியாழக்கிழமையன்று ஊருக்குப் புறப்பட்டு வந்த அவர், மதுரையில் இருந்தபோது, நாற்சக்கர (கார்) வாகனத்தில் அவ்வழியே சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த அவரது உறவினர்கள், அவரையும் ஊருக்கு உடன் வருமாறு அழைக்க, அதன்படி அவரும் இணைந்து அவர்களுடன் பயணித்திருக்கிறார்.
அருப்புக்கோட்டை அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென அதன் ஒரு டயர் வெடித்ததில், வண்டி நிலைகுலைந்து, தலைகுப்புறப் புரண்டு சாலையோரத்தில் விழுந்ததாகவும், அதில் செய்யித் அபூதாஹிர் – பலத்த காயத்துடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், இதரருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த அபூதாஹிரின் உடல் – அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, சொந்த ஊரான காயல்பட்டினம் கொண்டு வரப்பட்டடு, அன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அங்குள்ள மையவாடியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மகுதூம் ஜும்ஆ பள்ளியிலுள்ள அறிவிப்புப் பலகையில், வழமையாக திருக்குர்ஆன் வசனங்களையும், நபிகளாரின் பொன்மொழிகளையும் காலத்திற்கேற்ப – தனது அழகிய கையெழுத்தால் எழுதும் வழமையை செய்யித் அபூதாஹிர் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அறிவிப்புப் பலகையில் வாழ்வில் கடைசியாக அவர் எழுதிய வாசகம் வருமாறு:-
அடுத்தடுத்து விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதையடுத்து காயல்பட்டினம் சோகத்துடன் காணப்படுகிறது. |