இரு சக்கர வாகன விபத்தில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் மரணமடைந்துள்ளார். விரிவான விபரம்:-
காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்த முஹம்மத் அப்துல் காதிர் என்பவரது மகன் முஹம்மத் ஜமாலுத்தீன் (18). நிகழாண்டில், கமலாவதி மேனிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று, கல்லூரிப் படிப்பைத் தொடரவிருந்தார்.
நேற்று 23.15 மணியளவில், குரும்பூரைச் சேர்ந்த தனது பள்ளித் தோழன் ஹரி கிருஷ்ணன் – தனது வண்டியில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால், நடுச்சாலையில் நிற்பதாகக் கூறி, அதற்கு எரிபொருள் நிரப்ப முஹம்மத் ஜமாலுத்தீனிடம் அவருடைய வண்டியைக் கொண்டு வருமாறு கூறியிருக்கிறார்.
அப்போது காயல்பட்டினம் கடற்கரையிலிருந்த - முஹம்மத் ஜமாலுத்தீன், மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த தனது நண்பன் முஹம்மத் நெய்னாவையும் உடன் அழைத்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
ஹரி கிருஷ்ணன் தனது எரிபொருளில்லாத வாகனத்தில் அமர்ந்து இயக்க, ஜமாலுத்தீன் தன் நண்பன் நெய்னாவுடன் தனது வாகனத்தில் அமர்ந்து ஓட்டியவாறு - ஹரி கிருஷ்ணனின் வாகனத்தைத் தனது ஒற்றைக் காலால் (Toe) தள்ளி வந்திருக்கிறார். எதிரே வேகமாக வந்த காரைத் திடீரெனப் பார்த்துவிட்ட ஜமாலுத்தீன், தன் நண்பன் விபத்தில் சிக்கி விடக் கூடாது என்றெண்ணி, அவர் அமர்ந்து சென்ற எரிபொருளில்லாத வாகனத்தைக் காலால் வேகமாகத் தள்ளவே அவர் ஓரத்தில் ஒதுங்கிவிட்டார். ஆனால், அவரது வாகனத்தைத் தள்ளியதால் தனது வாகனத்தை இயக்குவதில் நிலைகுலைந்துவிட்ட ஜமாலுத்தீன், கண்ணிமைக்கும் நேரத்தில் - நேராக கார் மீது மோதி, படுகாயமுற்று, இரத்தம் அதிகளவில் வெளியேறி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் அமர்ந்து சென்ற காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த செய்யித் இப்றாஹீம் என்ற சேமா என்பவரது மகன் நெய்னா முஹம்மத் (18) கீழே விழுந்ததில், சில இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துவக்கமாகச் சிகிச்சை பெற்ற அவர் பின்னர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.
உயிரிழந்த ஜமாலுத்தீனின் உடல் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின், இன்று 14.15 மணியளவில் தீவுத் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. 16.30 மணிக்கு, அவரது ஜனாஸா, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், ஜமாலுத்தீன் உடன் பயின்ற பள்ளித் தோழர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
18 வயது பூர்த்தியடையாத மக்களுக்குப் பெற்றோர் இரு சக்கர வாகனங்களை வாங்கிக் கொடுக்க வேண்டாம் எனவும், அனைத்துத் தேவைகளுக்கும் மிதிவண்டிகளையே பயன்படுத்திட அவர்களை ஊக்குவிக்குமாறும், அதற்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் – விலை மதிக்கவியலாத தமது உயிர் இதுபோன்ற கோர விபரத்துகளில் இழக்கப்படுவதைத் தவிர்க்குமாறும் நல்லடக்கத்தின் நிறைவில் உரை மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த விபத்து மரணம் காரணமாக, காயல்பட்டினம் நகரே பெரும் சோகத்துடன் காணப்பட்டது.
[செய்தி திருத்தப்பட்டது @ 23:52 / 23.04.2019.] |