ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு நிஸ்ஃபு ஷஃபான் (ஷஃபானில் பாதி) என்று அழைக்கப்படும். ‘ஷபே பராஅத்’, ‘பராஅத் இரவு’ என்ற பெயர்களிலும் அழைக்கப்படும் இந்நாள் இரவில், நீண்ட ஆயுளை வேண்டியும், தீவினைகளிலிருந்து பாதுகாப்பு வேண்டியும், படைத்தவனைத் தவிர்த்து படைப்பினங்களின் உதவிகளிலிருந்து தேவைற்றிருக்கச் செய்திடக் கோரியும் திருமறை குர்ஆனின் யாஸீன் அத்தியாயத்தை 3 முறை ஓதி, பிரார்த்திப்பது வழமையாக இருந்து வருகிறது.
காயல்பட்டினத்திலுள்ள புதுப்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, அஹ்மத் நெய்னார் பள்ளி, முஹ்யித்தீன் பள்ளி, ஸெய்யிதினா பிலால் பள்ளி, மஸ்ஜித் மீக்காஈல், குருவித்துறைப் பள்ளி, மஹ்ழரா, ஜாவியா உள்ளிட்ட பல இடங்களில் வழமை போல இவ்வாண்டும் பராஅத் இரவு நிகழ்ச்சிகள் 20.04.2019. சனிக்கிழமையன்று 19.00 மணியளவில் நடத்தப்பட்டன. அனைத்திடங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், அந்தந்த மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
குருவித்துறைப் பள்ளியில், அப்பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ தலைமையில் பராஅத் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஐக்கிய சமாதானப் பேரவை அமைப்பின் நிறுவனர் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ பராஅத் இரவு குறித்து விளக்கவுரையாற்றினார். முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி செயலர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ யாஸீன் ஓதலைத் துவக்கி வைக்க, அனைவரும் 3 முறை யாஸீன் ஓதினர்.
குருவித்துறைப் பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ. தாஜுத்தீன் மஸ்லஹீ, ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா, மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல். நூஹ் சிராஜுத்தீன் பாக்கவீ ஆகியோர் ஒவ்வொரு யாஸீன் ஓதலுக்குப் பிறகும் அவற்றுக்கான சிறப்பு துஆ பிரார்த்தனையை வழிநடத்தினர்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, நிறைவு துஆ ஓதி நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார்.
காயல்பட்டினம் ஜாவியாவில் அன்று 20.00 மணியளவில் நிகழ்ச்சி துவங்கியது. பராஅத் இரவின் மகத்துவம் குறித்து, ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் பாரூக் அல்ஃபாஸீ சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது. ஜாவியாவில் இந்நிகழ்ச்சி இவ்வாண்டுடன் - தொடர்ந்து 92 ஆண்டுகளாக நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|