காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் செயலாளர் பிரபு ஷுஅய்ப் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழு கூட்டம் 08.03.2019 வெள்ளிக்கிழமையன்று, அமைப்பின் துணைத்தலைவர்கள் எம். என். அமீர் சுல்தான் மற்றும் வாவு எம்.எஸ்.ஷாஹுல் ஹமீது ஆகியோரது சார்பாக துணைத்தலைவர் வாவு எம்.எஸ்.ஷாஹுல் ஹமீது இல்லத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை:
ஹாஃபிழ். ஏ.எல்.முஹம்மது இர்ஷாத் அலி கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேரவைத் தலைவர் எஸ்.எம்.கே. முஹம்மது இஸ்மாயில் வரவேற்புரையாற்றினார். செயற்குழுவின் அங்கத்தினரை வரவேற்றுப் பேசிய அவர், நகர் மற்றும் சமுதாய நலனுக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். மேலும், அண்மையில் கஜா புயல் நிவாரணத்திற்காக சேகரிக்கப்பட்ட நிதிக்கு தங்கள் பங்களிப்பினை தாராளமாக வழங்கிய மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அடுத்து, செயலாளர் பிரபு ஷுஐப் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கை வாசித்தார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
அதன் பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் எல்.ஏ.கே. புஹாரி சமர்ப்பித்தார்.
தீர்மானங்கள்:
அடுத்து, நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. 2018-19 வருடத்திற்கான தமது உறுப்பினர் பதிவை (Membership) புதுப்பித்துக்கொள்ளாத உறுபினர்களை தொடர்பு கொண்டு அவர்களை அமைப்பின் உறுப்பினர்களாக விரைவில் புதுப்பிக்கச் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
2. நகர்நலப் பணிகளாற்றுவதற்கான நிதியாதாரத்தைத் திரட்டும் உண்டியல் திட்டத்தின் கீழ், அனைத்து உறுப்பினர்களுக்கும் உண்டியல்களை வினியோகிக்கும் பொறுப்பு செயற்குழு உறுப்பினர்கள் வசம் பிரித்தளிக்கப்பட்டது.
3. மருத்துவ உதவி கூட்டமைப்பான ஷிஃபா அமைப்பிற்கு மருத்துவ விண்ணப்பங்களுக்கு உதவ ரூபாய் 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
4. நமதூர் மக்களுக்காக கல்வி பணியாற்றி வரும் இக்ராஃ கல்வி சங்கத்தின் IAS / TNPSC Coaching Project திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டுக்கான உதவித்தொகை ரூபாய் 20 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.
5. காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள பயனாளிகளுக்கு சிறுதொழில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்திற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்க துணைக்குழு அமைக்கப்பட்டது.
6. பேரவையின் தையல் தொழில் அமைப்பு KUF HONG KONG GARMENTS & TAILORINGயின் நடப்பு நிர்வாக செயற்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு, அவ்வமைப்பின் நிர்வாகத்தை தொடர்ந்து கண்காணிக்க துணைக்குழு அமைக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் வாவு எம்.எஸ்.ஷாஹுல் ஹமீது நன்றி கூற, ஹாஃபிழ். எம். எம். சுல்தான் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், பேரவையின் செயற்குழுவினர் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு அமைப்பின் துணைத்தலைவர்கள் எம். என். அமீர் சுல்தான் மற்றும் வாவு எம்.எஸ்.ஷாஹுல் ஹமீது ஆகியோரது ஏற்பாட்டில் வழங்கி உபசரிக்கப்பட்டது. குழுப்படம் பதிவு செய்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|