இந்தியாவின் 17ஆவது மக்களவைத் தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 18.04.2019. அன்று (நேற்று) ஒரே விடுத்தமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
காயல்பட்டினத்தை உள்ளடக்கிய தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், திமுக கூட்டணியில் – திமுக சார்பில் கனிமொழி கருணாநிதி, பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் - அதன் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட – கட்சிகள் சார்பாகவும், தனித்தும் மொத்தம் 37 பேர் போட்டியிட்ட இத்தேர்தலில்,
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 61 ஆயிரத்து 248 வாக்குகள் பதிவாகியுள்ளன. காயல்பட்டினத்தில் உள்ள 35 வாக்குச் சாவடிகளில் மொத்தமுள்ள 35,266 வாக்காளர்களுள் 23 ஆயிரத்து 449 பேர் வாக்களித்துள்ளனர். இது 66.49 சதவிகிதமாகும்.
07.00 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது. கடுமையான வெப்ப வானிலை நிலவியபோதிலும், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்துச் சென்றனர்.
இயலா நிலை மக்களுக்கென எல்லா வாக்குச் சாவடிகளிலும் சர்க்கர நாற்காலி ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது பலருக்கும் பயன்பட்டது.
அதே நேரத்தில் கடும் வெயிலிலும் வாக்காளர்கள் நின்ற நிலையிலேயே மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் அமர்வதற்கான ஏற்பாடுகள் எந்த வாக்குச் சாவடியிலும் செய்யப்படவில்லை.
பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்களின் பணி பாராட்டத்தக்க வகையில் அமைந்திருந்தது. இயலா நிலை மக்கள் வந்தபோது, அவர்களது உறவினர்கள் போல – அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கி, அனைவரது பாராட்டுக்களையும் அவர்கள் பெற்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் – அதன் சட்டமன்றக் கட்சித் தலைவரும் – கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் – காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், தான் 02 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் 07.30 மணியளவில் வாக்களித்தார்.
வாக்குப் பதிவு 17.00 மணிக்கு நிறைவுற்றது. பின்னர் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் அனைத்து வாக்குச் சாவடிகளது வாக்குப் பதிவு இயந்திரங்களும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப் பதிவு இயந்திரங்களும் - தூத்துக்குடியிலுள்ள வ.வு.சி. அரசு பொறியியல் கல்லூரியிலுள்ள தனித்தனி காப்பறைகளில், மாவட்ட ஆட்சியரும் – மாவட்ட தேர்தல் தலைமை அலுவலருமான சந்தீப் நந்தூரி முன்னிலையில் பாதுகாப்பாக வைத்து, பூட்டி முத்திரையிடப்பட்டது.
படங்களுள் உதவி:
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன் |