ஐக்கிய அரபு அமீரகம் – துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & 43ஆவது குடும்ப சங்கம நிகழ்ச்சி – குழந்தைகளின் குதூகலத்துடன் - 05.04.2019. அன்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
கடந்த 05.04.2019 வெள்ளிக்கிழமை துபை அல் ஸஃபா பூங்காவில் துபை காயல் நல மன்றத்தினரின் 43வது காயலர் சங்கமம் ஒன்று கூடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
பெண்கள், குழந்தைகள் எனக் குடும்பங்கள் திரளாகப் பங்கு பெற்ற அந்நிகழ்ச்சியில் தனியாக இருப்பவர்களும் தளராமல் கலந்து கொண்டனர்.
காலை 11 மணியளவில் குழந்தைகளுக்கான கிராஅத் போட்டியுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. வருகிறவர்களுக்கு சூடான தேனீரும், சுவையான சுண்டலும் சுடச்சுடப் பரிமாறப்பட்டன.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பள்ளப்பட்டியிலுள்ள அபூஹனீஃபா மதரசாவின் இமாம் மௌலவி அ. ரிஃபாய்தீன் ஹசனீ அவர்கள் கிராஅத் போட்டிக்கு நடுவராக இருந்தார்.
அழகிய உச்சரிப்பில் அமுதூட்டும் வண்ணம் குழந்தைகள் குர்ஆன் ஓதியது ஆலிம் பெருந்தகையை ஆச்சரியமூட்டியது. குழந்தைகளின் குர்ஆன் ஆர்வம் பெற்றோர்களின் மார்க்க சிந்தனையை உணர்த்தியது.
இதற்கிடையே கராமா மெடிக்கல் சென்டரின் இலவச மருத்துவ முகாம் ஆண்களுக்கு ஆரம்பமானது. ஆண்கள் வரிசையில் நின்று இரத்த அழுத்தமும், இரத்த சர்க்கரை அளவும் பரிசோதனை செய்தனர்.
ஆண்கள் ஜும்ஆ சென்ற நேரத்தில் பெண்களுக்கான இலவச மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன. ஜும்ஆ முடிந்ததும் பொதுக்குழுக் கூட்டம் மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புஹாரீ காக்கா அவர்கள் தலைமையில் ஆரம்பமானது.
ஹாஃபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கீ அவர்கள் இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் சாளை சலீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதுடன், நிகழ்ச்சியை நெறிப்படுத்தியும் தந்தார்.
பின்னர் சிறப்பு விருந்தினர் மௌலவி அ. ரிஃபாய்தீன் ஹசனீ அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இன்றைய நவீன உலகில் தீமைகள் பல பெருக்கெடுத்து விட்டன. வாட்ஸ்அப், முகநூல் மூலமாக தீமைகள் பரவுகின்றன. அவற்றைப் பயன்படுத்தும் குழந்தைகளைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். சிறார்களைச் சிறு வயதிலிருந்தே மார்க்கப் பற்றுடன் வளர்க்க வேண்டும். காயல் பட்டினத்தில் வளர்ந்த நான் பள்ளப்பட்டியில் மதரசா நடத்தி வருகிறேன். அங்கே ஆறாம் வகுப்பு வரை இஸ்லாமிய அடிப்படைக் கல்வி புகட்டப்படுகிறது. ‘படித்துக் கொண்டிரு, படித்துக் கொடு, படிப்பதற்கு உதவு’ என்ற வகையில் பலரும் படிக்கிறார்கள். படித்துக் கொடுக்கிறார்கள். படிப்பதற்கு உதவியும் புரிகிறார்கள்” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
பின்னர் மன்றத் தலைவர் தலைமையுரையாற்றினார்.
“அல்லாஹ்வின் அருளால் ஆண்டிற்கு இருமுறை இங்கே ஒன்று கூடுகிறோம். அமீரகத்தின் பல பகுதிகளிலிருந்தும் காயல் சொந்தங்கள் இங்கே வந்துள்ளனர். நமதூரைச் சார்ந்த பலரையும் இங்கே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அருமையான வாழ்த்துரையை ஆலிம் பெருந்தகை வழங்கினார்கள். இந்தக் கூட்டம் நடப்பதற்கு பலருடைய உழைப்பு இருக்கிறது. இந்தியா சில்க் ஹவுஸ் நிறுவனத்தார் நமக்கு அன்பளிப்பு வவுச்சர்கள் தந்துள்ளார்கள். அவர்களுக்கு நம் நன்றிகள்.
இன்று அமீரகத்தில் வேலைகளுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சார்ட்டட் அக்கவுண்டண்டுகளுக்கே வேலை கிடைப்பதில் சிரமம் உள்ளது. பலர் வேலையிழந்துள்ளனர். வேலையில்லாதோருக்கு நம் நிறுவனங்களில் வேலை வாங்கிக் கொடுப்பதற்கு நாம் உதவ வேண்டும். ஊருக்குச் சென்றுவிட்ட மன்றத்தின் முன்னாள் மூத்த உறுப்பினர்கள் துணி உமர் காக்கா, எம்.இ. ஷேக் காக்கா போன்றோரின் உழைப்புகள் அளவிட முடியாதவை. மன்றத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டார்கள். அவர்களுக்கு மன்றம் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
அமீரகத்தில் இருப்பவர்களும் மன்றத்திற்காக பணம், நேரம், உழைப்பைக் கொடுக்க முன்வர வேண்டும். புதிய உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்களாகச் சேர்வதற்கு முன்வந்து பெயர் கொடுக்க வேண்டும். இப்பொழுது கூட்டத்தின் வருகைப்பதிவுக்கு நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம். ‘மொபைல் ஆப்’ உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வேலைவாய்ப்புக்கு மன்ற உறுப்பினர் ஜமீல் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று உருவாக்கியிருக்கிறார்.”
இவ்வாறு தலைவர் உரையாற்றினார். தலைவரின் உரைக்கிடையில் இலவச மருத்துவ முகாம் நடத்திய கராமா மெடிக்கல் சென்டரின் மருத்துவர் ஜெய்சிங் வில்லியம்ஸ் அவர்களும், அவரின் குழுவினரும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு அன்பளிப்புகளும் அளிக்கப்பட்டன.
பின்னர் வேலைவாய்ப்பு வாட்ஸ்அப் குழுமம் குறித்து அரிஸ்டோ ஸ்டார் நிறுவனத்தின் பொது மேலாளர் சகோ. ஜமீல் புகாரீ சிறிது நேரம் விளக்கினார்.
அதன் பிறது இன்னொரு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த வாவு காதர் ஹாஜி அவர்கள் சிறிது நேரம் சிறப்புரையாற்றினார். “கடல் கடந்து காயல் மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் காயல் நல மன்றங்கள் உள்ளன. துபை காயல் நல மன்றம் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட மன்றம். கல்விக்கும், மருத்துவத்திற்கும் உதவி புரிந்து வருகிறீர்கள். உங்கள் உதவிகளினால் பல பட்டதாரிகள் உருவாகி விட்டார்கள். கல்வி உதவிக்காக ஆரம்பிக்கப்பட்ட இக்ராவுக்கு பல உதவிகளை நீங்கள் செய்கிறீர்கள். ஸுபைதா பள்ளிக்கூடத்திற்கும் உதவி செய்திருக்கிறீர்கள்” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
பின்னர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அபூதாபி காயல் நல மன்றத் தலைவர் பொறியாளர் மக்பூல் அவர்கள் உரையாற்றினார். பின்னர் உரையாற்றிய நெறியாளர் சாளை சலீம், “கேஎம்டி மருத்துவமனை மூலம் நடத்தப்படும் டயாலிசிஸ் சென்டருக்கு இரண்டு படுக்கைகள் வாங்குவதற்கு துபை காயல் நல மன்றம் உதவியிருக்கிறது. ஊரில் இப்பொழுது முக்கிய பிரச்சினை போதைப் பழக்கம். அடுத்த தலைமுறை இதில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். சமுதாயாத்திற்கு பேராபத்தாக மாறியுள்ள இதனை காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்தும் முன்னேற்றம் இல்லை. போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
பின்னர் புதிய உறுப்பினர்கள் தங்களை அறிமுகப்படுத்தினார்கள். அதன் பிறகு மேலப்பாளையத்திலிருந்து வருகை புரிந்த மௌலவி அப்துல்லாஹ் அவர்கள் சிறிது நேரம் உரையாற்றினார்.
பின்னர் உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. பரிமார் தெருவைச் சார்ந்த சகோதரர் காதர் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
“நமதூருக்குச் சென்றிருந்தேன். பாதுகாப்பு விடயத்தில் நமதூர் மிகவும் பலவீனமாக இருப்பதைக் கண்டேன். பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அனைத்து காயல் நல மன்றங்களும் ஊருக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்று அவர் கருத்து தெரிவித்தார்.
மன்றத்தின் மூத்த உறுப்பினரும், ஆலோசனைக்குழு உறுப்பினருமான நூஹு ஸாஹிப் அவர்கள் பணி நிறைவில் தாயகம் திரும்ப இருப்பதாகவும், அவர்களின் பிற்கால வாழ்க்கை நல்லபடியாக அமையவும், நீடித்த ஆயுளுக்கும் அனைவரும் துஆ செய்ய வேண்டும் என்றும் மன்றத் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் காயல் களறிச் சாப்பாடு பரிமாறப்பட்டது. விருந்து உபசரிப்பில் விஞ்ச முடியுமா நம்மூரை என்ற அடிப்படையில் நெய்ச் சோறு, களறிக் கறி, பருப்பு கத்தரிக்காய், கேரட் ஹல்வா ஆகியவை பரிமாறப்பட்டன.
சுவையான விருந்துக்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின. குழந்தைகளுக்கான பல்சுவை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. செயற்குழு உறுப்பினர் பி.ஏ. ரியாஸ் இந்த விளையாட்டுப் போட்டிகளைப் பொறுமையுடன் நடத்தினார். குழந்தைகள் குதூகலமாக அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
குர்ஆனிய வரலாற்றைக் கண்டுபிடிப்பது உட்பட இன்னும் சுவையான பல அம்சங்களைக் கொண்ட அறிவியல் திறன் வினாடி-வினா போட்டியை வெகு சிறப்பாக நடத்தினார் செயற்குழு உறுப்பினர் எம்.யூ. ஷேக். கேள்விகளைத் திறம்பட தயாரித்தவரும் அவரே! அவருக்கு உதவியாக செயற்குழு உறுப்பினர் உமர் காலித் செயல்பட்டார்.
பெரியவர்களுக்கான நடைப்போட்டி இறுதியில் ஓட்டப் போட்டியாக மாறிப் போன அதிசயமும் அரங்கேறியது. பெரியவர்களுக்கான சாக்கு ஓட்டப் பந்தயமும் எலுமிச்சைப் பழத்தைக் கரண்டியில் ஏந்தி ஓடும் போட்டியும் நடைபெற்றன.
நாங்களும் சளைத்தவர்களல்லர் என்று பெண்களும் தங்களுக்குள் குழு பிரித்து சுவையான பல போட்டிகளை நடத்தி, வீட்டுக்குத் தேவையான பாதாம், ஈத்தப்பழம், நாட்டுச் சர்க்கரை என்று பல பயனுள்ள பரிசுகளை வழங்கினர்.
அனைவருக்கும் முன்பாக வரவேற்புக் குழுவினர் பூங்கா வந்து வருபவர்களை வரவேற்று அவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்காக காத்திருந்தனர். அரிஸ்டோ ஸ்டார் நிறுவனத்தின் உபயத்தில் இயந்திரம் மூலமாக அதிவேகத்தில் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு டோக்கன்களும் வழங்கப்பட்டன. இதனைத் திறம்பட அரிஸ்டோ ஸ்டார் நிறுவனத்தின் பொது மேலாளர் சகோ. ஜமீல் புகாரீ வழிநடத்தினார்.
பின்னர் மாலை நேரத் தேனீரும், பருப்பு வடையும் பாங்காகப் பரிமாறப்பட்டன. கிராஅத், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறார்களுக்கும் வினாடி வினா போட்டியிலும் ஓட்டப்பந்தயங்களிலும் வெற்றி பெற்ற பெரியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கூட்டத்திற்கு வருகை தருபவர்கள் முற்கூட்டியே வருவதை ஊக்குவிப்பதற்காக காலை 11 மணிக்கு முன்பு வருபவர்களுக்கும் (இவர்களுக்கு மூன்று குலுக்கல் வாய்ப்புகள்), ஜும்ஆவுக்கு முன்பு வருபவர்களுக்கும் (இவர்களுக்கு இரண்டு குலுக்கல் வாய்ப்புகள்), ஜும்ஆவுக்குப் பிறகு வருபவர்களுக்கும் (இவர்களுக்கு ஒரு குலுக்கல் வாய்ப்பு) என்று மூன்று பரிசுக் குலுக்கல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்ட இறுதியில் இதற்கான பரிசுக் குலுக்கல்கள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயங்கள், இதர பரிசுப் பொருட்கள் அன்பளிப்புகளாக வழங்கப்பட்டன. பெண்களுக்காவும் தனியாக ஒரு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் முறைப்படுத்தி, பொறுப்பாளிகளை Follow up செய்து அனைத்து ஏற்பாடுகளையும் திறம்படச் செய்திருந்தார் மன்றப் பொதுச் செயலாளர் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹ்யித்தீன்.
நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பரிசுகளுக்கு ARISTO STAR, TOSHIBA ELEVATORS, இந்தியா சில்க் ஹவுஸ் ஆகிய நிறுவனங்களும் பி.ஏ. ரியாஸ், காழி அலாவுதீன் ஆகியோரும் அனுசரனை வழங்கியிருந்தனர்.
நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த அந்தி சாயும் நேரத்தில் அனைவரும் பிரியா விடை பெற்று பிரிந்தனர்.
கூட்ட நிகழ்விடத்திற்கான ஏற்பாடுகளை எந்தக் குறையும் இல்லாமல் செய்து தந்த இப்றாஹீம் காக்கா, விருந்து உணவு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்து தந்த விளக்கு தாவூத் ஹாஜி, இந்தக் கூட்டத்தை நடத்துவதற்காக வாராவாரம் கூடிய செயற்குழு உறுப்பினர்கள், இங்கே சுழன்று சுழன்று பணியாற்றிய தன்னார்வத் தொண்டர்கள், இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு அனுமதி தந்த ஸஃபா பூங்கா நிர்வாகத்தினர், வாகனம் மற்றும் பணியாளர்களைத் தந்துதவிய ரஹ்மானியா டிரேடர்ஸ் மற்றும் அரிஸ்டோ ஸ்டார் நிறுவனத்தார், வாகனங்களை மேற்பார்வை செய்த முத்து முஹம்மத் மற்றும் முத்து மொகுதூம், கூட்டத்தில் கலந்து சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள், அழைப்பை ஏற்று மகிழ்வுடன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அபூதாபி சகோதரர்கள், நிகழ்வுகள் அனைத்தையும் நிழற்படங்கள் எடுத்த புகைப்படக் கலைஞர் எஸ். இப்றாஹீம் (மன்றத்தின் முன்னாள் மூத்த உறுப்பினர் எம்.இ. ஷேக் காக்கா அவர்களின் மகன்), ஒலிபெருக்கி ஏற்பாடுகளை எந்தப் பிசிறும் இல்லாமல் செய்த செயற்குழு உறுப்பினர் காதர், கூட்டம் நடத்துவதற்கு பாய்கள், இன்னபிற பொருட்கள் தந்து உதவிய ஈடிஏ 'டி' பிளாக் நிர்வாகத்தினர், உறுப்பினர் சந்தா வசூல் செய்து தரும் முத்து ஃபரீத், முனவ்வர் மற்றும் முஸஃப்பிர், உறுப்பினர்களின் பெயர்களைப் பதிவு செய்து இயந்திரம் மூலம் அதிவேகத்தில் டோக்கன்கள் வழங்கிய ஜமீல் புகாரீ மற்றும் அரிஸ்டோ ஸ்டார் ஊழியர்கள், அன்பளிப்புகளுக்கு அனுசரனை அளித்தவர்கள் ஆகியோருக்கு மன்றம் தனது நன்றியைக் காணிக்கையாக்குகிறது.
இறுதியாகவும் உறுதியாகவும் இம்மன்றப் பணிகள் சிறப்புற நடைபெறவும் இந்நிகழ்ச்சிகள் சிறப்புற நடைபெறவும் எல்லா வகைகளிலும் பாடுபடும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் எம் நன்றிகள் உரித்தாகட்டும்.
நிகழ்ச்சியின் நிழற்படங்களைக் கீழ்க்கண்ட இணைப்பில் முழுமையாக காணலாம். இணைப்பை அழுத்தியவுடன் Key கேட்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள Key ஐ Copy & Paste செய்யவும்.
https://mega.nz/#F!GNMBwKSR
Key: JzAu1vAyrMS3AWosVU8XzQ
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
M.S.அப்துல் ஹமீத்
படங்கள்:
S.இப்றாஹீம்
|