பள்ளி செல்லும் மாணவர்களுக்கு, அவர்களது வார விடுமுறைக் காலங்களில் மார்க்க அடிப்படைக் கல்வியைப் புகட்டுவதற்காகவும், திருமறை குர்ஆனை மனதிலேற்றிப் பாதுகாக்கும் ஹாஃபிழ்களை உருவாக்குவதற்காகவும், காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வருகிறது மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் மற்றும் அதன் திருக்குர்ஆன் ஹிஃப்ழு (மனன)ப் பிரிவு.
ஹிஃப்ழுப் பிரிவு மாணவர்களுக்கான நடப்பாண்டின் இறுதித் தேர்வுகள், 20.04.2019. சனிக்கிழமையன்று காலையில் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, மத்ரஸா ஆசிரியர்களைக் கண்ணியப்படுத்தி வழியனுப்பும் நிகழ்ச்சி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் துணைத் தலைவர் தை.மு.க.முத்து செய்யித் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது.
ஹாமிதிய்யா முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, கவுரவ ஆசிரியர் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ ஆகியோர் விடைபெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும், விடுமுறையைக் கழிக்கவுள்ள மாணவர்களுக்கு அறிவுரைகளையும் உள்ளடக்கி உரையாற்றினர்.
ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிர்வாகத்தின் சார்பாக மத்ரஸா அபிமானிகள் அவற்றை ஆசிரியர்களுக்கு வழங்கினர்.
14.15 மணியளவில் மாணவர்கள், சிறப்பழைப்பாளர்கள் அனைவருக்கும் களறி சாப்பாடு மதிய விருந்தாகப் பரிமாறப்பட்டது.
|