காயல்பட்டினம் நகராட்சியில் செயல்பாட்டில் இல்லாத திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களையெல்லாம் செயல்பாட்டில் உள்ளதாகப் பொய்யான தகவலை மத்திய அரசுக்கு காயல்பட்டினம் நகராட்சி வழங்கி வருவதாக - ஆதார ஆவணங்களுடன் - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் - மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலம், பல்வேறு திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு (SOLID WASTE MANAGEMENT) - பல கோடி ரூபாய் - நிதி உதவி வழங்கப்பட்டது. சில திட்டங்களை - பொது நிதியில் இருந்து - காயல்பட்டினம் நகராட்சி செய்தது..
இந்த திட்டங்களில் பெருவாரியானவை இன்றைய தேதி வரை இயக்கப்படவில்லை. ஆனால் - அத்திட்டங்கள், கடந்த பல மாதங்களாக - செயல்பாட்டில் உள்ளதாக, காயல்பட்டினம் நகராட்சி - மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தகவல் வழங்கிவருவதாக தெரிகிறது.
======================
பயோ காஸ் திட்டம் | BIO-METHANATION PLANT (கடையக்குடி / கொம்புத்துறை)
======================
மாநில அரசின் IUDM திட்டத்தின் கீழ் - கட்டுமானம் மற்றும் 7 ஆண்டுகள் பராமரிப்பு என்ற பணிகளுக்காக 90 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. SK & CO என்ற சேலம் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த மையத்தில், தினமும் 5 டன் மக்கும் குப்பை கொண்டு வரப்பட்டு, அருகில் உள்ள தெரு விளக்குகளுக்கு சுமார் 400 யூனிட் மின்சாரம் வழங்கப்பட வேண்டும். இது தான் - ஆவணங்கள்படி - இந்த திட்டத்தின் நோக்கம்.
மத்திய அரசுக்கு விபரங்கள் வழங்கியுள்ள காயல்பட்டினம் நகராட்சி, 15-1-2019 தேதி முதல் செயல்பாட்டில் உள்ளதாக பொய்யான தகவலை தெரிவித்து வருகிறது. மேலும் - இந்த மையத்திற்கு, தினமும் 1.5 டன் மக்கும் குப்பை வருவதாகவும், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தவறான தகவலை நகராட்சி வழங்கியுள்ளது.
======================
மைக்ரோ கம்போஸ்ட் சென்டர், ஸ்டாக் ரூம், குப்பைகளை பிரிக்கும் அறை | MICRO COMPOST CENTRE WITH STOCK ROOM, SORTING HALL, COMPOUND WALL AND APPROACH ROAD (கடையக்குடி / கொம்புத்துறை)
======================
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் - 3 டன் கொள்ளளவில் மைக்ரோ கம்போஸ்ட் சென்டர் (சுற்றுச்சுவர் மற்றும் அணுகு சாலை வசதிகளுடன்) அமைத்திட 2.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியும் மார்ச் 2018 இல், குமரேசன் (திருச்செந்தூர்) என்ற நபருக்கு வழங்கப்பட்டது.
கட்டுமானப்பணிகள் நிறைவுற்றாலும், மைக்ரோ கம்போஸ்ட் சென்டர் செயல்பாட்டிற்கு வரவில்லை. ஆனால் - 2.5.2019 முதல் இந்த மையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக, மத்திய அரசுக்கு, காயல்பட்டினம் நகராட்சி தகவல் வழங்கியுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் - ஸ்டாக் ரூம், குப்பைகளை பிரிக்கும் அறை ஆகியவை அமைத்திட - 18.76 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியும், மார்ச் 2018 இல் - தளவாணிமுத்து என்ற நபருக்கு வழங்கப்பட்டது. கட்டுமான பணிகள் நிறைவுற்றாலும், செயல்பாட்டுக்கு வராத இந்த மையம் செயல்பாட்டில் உள்ளதாக - மத்திய அரசுக்கு, காயல்பட்டினம் நகராட்சி தகவல் வழங்கியுள்ளது.
பயோ காஸ் திட்டம், மைக்ரோ கம்போஸ்ட் சென்டர், ஸ்டாக் ரூம், குப்பைகளை பிரிக்கும் அறை ஆகியவை கடையக்குடி(கொம்புத்துறை) பகுதியில் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் வழங்கிய 4 ஏக்கர் நிலத்தில் (காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண்278/1B) அமைக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றுக்கு மிக அருகே உள்ள இடம் இது என்பதால் - இவ்விடம் முன்மொழியப்படும் போது - நீரினால் பாதிப்பு ஏற்படும் என ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
சமீபத்தில் பெய்த மழையில் - இந்த திட்டத்திற்கு என அமைக்கப்பட்ட அணுகு சாலை ஏறத்தாழ முழுவதும் நீரில் மூழ்கியிருந்தது; சுற்றுச்சுவரை சுற்றியும் நீர் தேங்கியிருந்தது. பார்க்கவும் இணைக்கப்பட்டுள்ள படங்கள்.
======================
மைக்ரோ கம்போஸ்ட் சென்டர் | MICRO COMPOST CENTRE (சிவன் கோவில் தெரு)
======================
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் - சிவன் கோவில் தெரு அருகில், சர்வே எண் 392/5 இடத்தில், 3 டன் கொள்ளளவில் மைக்ரோ கம்போஸ்ட் சென்டர் - 50.92 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், அமைக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி - எம்.மலையாண்டி பிரபு (சாத்தான்குளம்) என்ற நபருக்கு மார்ச் 2018 இல் வழங்கப்பட்டு, பணிகள் நிறைவுற்றாலும் - இன்றைய தேதி வரை செயல்பாட்டில் இல்லை. ஆனால் - 22-12-2017 முதல் இது செயல்பாட்டில் இருப்பதாக காயல்பட்டினம் நகராட்சி, மத்திய அரசுக்கு தகவல் வழங்கியுள்ளது.
======================
ஆன்சைட் கம்போஸ்ட் சென்டர் | ONSITE COMPOST CENTRE (நகராட்சி வளாகம்)
======================
நகராட்சியின் பொது நிதியில் இருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கம்போஸ்ட் சென்டர் - காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில் அமைத்திட, ஆகஸ்ட் 2018 இல் - தளவாணிமுத்து என்ற நபருக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டது. 1 டன் கொள்ளளவு கொண்டதாக கூறப்படும் இந்த மையம், 13-5-2018 முதல் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய அரசுக்கு காயல்பட்டினம் நகராட்சி தகவல் வழங்கியுள்ளது. ஆனால் - இன்றைய தேதி வரை அது செயல்பாட்டிற்கு வரவில்லை.
பயன்படுத்தப்படாமல் உள்ள பேட்டரியில் இயங்கும் 25 வாகனங்கள் (BATTERY OPERATED VEHICLES)- இந்த மையத்தில் தான், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
======================
ஆன்சைட் கம்போஸ்ட் சென்டர் | ONSITE COMPOST CENTRE (கடற்கரை)
======================
நகராட்சியின் பொது நிதியில் இருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கம்போஸ்ட் சென்டர் - காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் அமைத்திட, ஆகஸ்ட் 2018 இல் - மாதவன் என்ற நபருக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டது. 1 டன் கொள்ளளவு கொண்டதாக கூறப்படும் இந்த மையம், * 20-7-2018* முதல் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய அரசுக்கு காயல்பட்டினம் நகராட்சி தகவல் வழங்கியுள்ளது. ஆனால் - இன்றைய தேதி வரை அது செயல்பாட்டிற்கு வரவில்லை.
அது மட்டுமல்ல, கடற்கரையில் - CRZ பகுதியில், அணுகு சாலைக்கூட இல்லாமல் அமைந்துள்ளதால், இந்த மையத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்துள்ளது. மேலும் - இந்த மையம், கடலுக்கு செல்லும் உபரி மழைநீரினை தடுத்திடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
NO LANDFILL CITY (குப்பைக்கிடங்கு இல்லாத நகரம்) என்பதே தங்களின் இலக்கு என ஜூன் மாதம் - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரின் (CMA) அறிவுறுத்தல்படி - காயல்பட்டினம் நகராட்சி - தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
மேலே விவரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் செயற்பாட்டுக்கு வந்திருந்தாள் - நகரில் - பப்பரப்பள்ளியில் மட்டுமல்ல; எங்குமே குப்பையை கொட்டவேண்டிய அவசியம் தொடராது.
மக்கும் குப்பை பிரித்தெடுக்கப்பட்டு - பயோ காஸ் திட்டம் மூலம் மின்சாரம் தயாரிக்கவும், MICRO COMPOST CENTRE | ONSITE COMPOST CENTRE திட்டங்கள் மூலம் உரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பை பிரித்தெடுக்கப்பட்டு - அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும்.
ஆனால் - இதுபோன்ற எந்த பணிகளையும், செய்யாமல், பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டபிறகும் - பொய்யான தகவல்களை மட்டும், மத்திய அரசுக்கு - காயல்பட்டினம் நகராட்சி வழங்கிவருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|