அண்மையில் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள – குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து இந்தியா முழுக்கவும் பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் - 18.12.2019. புதன்கிழமையன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்று காலையில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
நாடு முழுவதும் இச்சட்டத்தைக் கண்டித்து எதிர்ப்புக் குரல்கள் வலுப்பெற்ற பின்னரும் மத்திய அரசு அவற்றைப் பரிசீலிக்காதிருப்பதால், தொடர் போராட்டங்கள் பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் ஒருங்கிணைப்பில் மீண்டும் 03.01.2020. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் கண்டனப் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், மகுதூம் ஜும்ஆ பள்ளி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளி, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் ஜும்ஆ பள்ளி, மஸ்ஜிதுத் தவ்பா ஆகிய நகரின் ஆறு ஜும்ஆ பள்ளிவாசல்களிலிருந்தும், ஜும்ஆ தொழுகைக்கு முன்பும், பின்பும் பேரணியில் பங்கேற்க அறிவிப்புச் செய்யப்பட்டது.
அதனையேற்று ஜும்ஆ தொழுகை நிறைவுற்ற பின் அந்தந்தப் பள்ளிகளில் தொழுகையை நிறைவேற்றிய ஆண்கள் அனைவரும் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாகப் புறப்பட்டுச் சென்று, ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் ஒன்று கூடினர். அங்கிருந்து 650 அடி நீளமுள்ள இந்திய தேசியக் கொடியைத் தலைக்கு மேல் தாங்கியவர்களாக பொதுமக்கள் பேரணியாகப் புறப்பட்டு, முதன்மைச் சாலை, தைக்கா பஜார் வழியாக பேருந்து நிலையத்திற்கு முன் சென்றடைந்தனர்.
அங்கு வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையில் பேரணி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. ஐக்கியப் பேரவை தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். அதன் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் கண்டனப் பேருரையாற்றினார். ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் வாவு ஷம்சுத்தீன் நன்றி கூற, அதன் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் பேரணி நிறைவுற்றது. இந்திய தேசிய இறையாண்மைப் பாதுகாக்கப்படவும், சமய நல்லிணக்கம் தழைக்கவும், நாட்டில் சகோதரவாஞ்சை இன்னும் சிறக்கவும், ஆட்சியாளர்களுக்கு நாட்டுக் குடிமக்கள் அனைவரின் மீதும் பாரபட்சமற்ற பார்வை ஏற்படவும் இதன்போது பிரார்த்திக்கப்பட்டது.
இப்பேரணியில் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் அதிமான ஆண்கள் கலந்துகொண்டனர். பேரணியில் பொதுமக்கள் சுமந்து சென்ற 650 மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய பேரணிக்காக தென்காசியைச் சேர்ந்த அதன் அங்கத்தினரால் தைக்கப்பட்டு, சென்னை பேரணியில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கடையநல்லூர், மதுரை, நாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கே நடத்தப்பட்ட எதிர்ப்புப் பேரணிகளில் பயன்படுத்தப்பட்டது. பின்னர், காயல்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து, காஞ்சிபுரம் மேற்கு, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நடத்தப்படவுள்ள பேரணிகளிலும் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல்:
ஷம்சுத்தீன் (TNTJ)
|