சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 124-வது செயற்குழு கூட்டம் பாளையம் செய்யித் முஹ்யித்தீன் அவர்கள் இல்லத்தில் வைத்து சென்ற 13/12/2019 வெள்ளி மாலை 06:30 மணிக்கு நடந்தேறியது.
இச்செயற்குழுவிற்கு மன்றத்தின் முன்னாள் செயலாளரும் தற்போதைய ஆலோசகருமாகிய சகோதரர் செய்யது இப்ராஹிம் தலைமை ஏற்றார். சகோதரர் ஷேக் அப்துல்லாஹ் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். சகோதரர் செய்யிது முஹம்மது அலி வரவேற்புரை நல்கினார்.
ஷிஃபா மற்றும் KMT மருத்துவமனை இணைந்து அமைக்கவிருக்கும் டயாலிசிஸ் சென்டர் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்றும் இதையடுத்து ஷிஃபா முன்னெடுக்க வேண்டிய பணிகள் பற்றிய விவரங்களை பகிர்ந்தார் மன்ற செயலாளர் சகோதரர் சீனா மொஹ்தூம் அவர்கள்.
இக்ரஃ முன்னெடுத்து வரும் TNPSC தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பற்றிய விபரத்தை நம் மன்றத்தின் இக்ரஃ பொறுப்பாளர் சகோதரர் ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ் அவர்கள் எடுத்துரைத்தார். ஏற்கனவே பட்டப் படிப்பை முடித்த ஆண்களும் பெண்களும் இந்த பயிற்சியின் மூலம் பலன் பெறுகிறார்கள். மேலும் தற்பொழுது கல்லூரி பயிலும் மாணவர்களும் இப்போதிருந்தே பகுதி நேரமாக இந்த பயிற்சியினை பெற்று வருகிறார்கள். எனவே அவர்கள் கல்லூரி படிப்பு முடிந்ததும் தாமதிக்காமல் அரசு தேர்வுகளில் நேரடியாக பங்குகொள்ள இது வசதியாக இருக்கும் என்ற விபரத்தையும் தெரிவித்தார்.
இந்த பயிற்சி வகுப்புகளுக்கு ஆகின்ற செலவுகளை கருத்தில் கொண்டு “இக்ரஃ” மூலம் வந்த கோரிக்கைக்கு நம் மன்றமும் உதவுவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் தீவுத் தெருவில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக வந்த கோரிக்கையையும் பரிசீலித்து அவர்கள் கேட்ட அனுசரணையில் ஒரு மாதத்திற்கு தேவையானவற்றை நம் மன்றம் மூலம் உதவுவது என்று உறுப்பினர்களின் ஆலோசனைக்கு பிறகு முடிவெடுக்கப்பட்டது.
தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு “இக்ரஃ” மற்றும் "ஷிஃபா" அமைப்புகளுக்கான அனுசரணையை உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் தனவந்தர்களிடம் பெற முயற்சிப்பது என்றும் அது விஷயமாக தற்பொழுது தாயகம் வந்துள்ள அனைத்து உலக காயல் நலமன்றங்களின் உறுப்பினர்களை ஜித்தா-ரியாத்-தம்மாம் மன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டது.
நம் மன்றத்தின் 125-வது செயற்குழு கூட்டம் பாளையம் செய்யித் முஹ்யித்தீன் அவர்கள் இல்லத்தில் வைத்து 10/01/2020 வெள்ளி மாலை 06:30 மணிக்கு நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.
நிதிநிலை:
மன்றத்தின் பொது இருப்பு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் பற்றிய நிதி விபரங்களை சமர்ப்பித்தார் மன்றத்தின் பொருளாளர் சகோதரர் ஆதம் அவர்கள்.
நன்றியுரை:
இக்கூட்டம் இனிதே நிறைவுற அருள்புரிந்த வல்ல இறைவனுக்கு முதலில் நன்றியை உரித்தாக்கி, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் கூட்ட அனுசரணையாளருக்கும் நன்றி கூறினார் மன்ற செயலாளர் சகோதரர் ஹாமீது ரிஃபாய் அவர்கள்.
சகோதரர் தோல்ஷாப் முஹம்மது லெப்பை அவர்களின் இறைவேண்டலுக்குப் பின் கஃப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross