காயல்பட்டினத்தில் இரண்டாம் குடிநீர் திட்ட ஒப்பந்தம் முன்னனுபவமற்றவருக்கு வழங்கப்பட்டுள்ளதன் விளைவாக, பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணியாணை வழங்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும் மந்த நிலையிலேயே பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறி, முறையாகக் காலக்கெடு விதித்து பணிகளை விரைந்து முடித்துத் தருமாறு - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் மத்திய – மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பொது மக்களின் கனவுத்திட்டம் - இரண்டாம் குடிநீர் திட்டம். 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமல் செய்யப்படும் இத்திட்டத்திற்கான நிதி - 80 சதவீதம் மத்திய அரசினால், UIDSSMT திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
4.9.2012 அன்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, 14.12.2012 அன்று ஒப்பந்தப்புள்ளிகளுக்கு நகர்மன்ற ஒப்புதல் வழங்கப்பட்டு, 7.1.2013 அன்று வேலை ஆணை (WORK ORDER) - SHRIRAM EPC என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
வரும் ஜனவரி 7 அன்று - வேலை ஆணை வழங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவாகிறது. 18 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டிய இப்பணிகள் இன்றைய தேதி வரை முடிவு பெறவில்லை.
வேடிக்கை என்னவென்றால் - பிப்ரவரி 2017 இல் இத்திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - அதிகாரப்பூர்வமாக திறந்தும் வைத்துவிட்டார். உண்மை என்னவெனில் இத்திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை.
பழைய குடிநீர் விநியோக குழாய்கள் மூலமே, நான்கு நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு வீடுகளுக்கு (3000) இதுவரை - வீட்டு இணைப்புகள் வழங்கப்படவில்லை.
தெருக்களில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் அடிக்கடி நீர் கசிவு; கலங்கிய நிலையில், துர்நாற்றத்துடன் வழங்கப்படும் தண்ணீர். எப்போது தினமும் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியாக அறிவிக்கப்படாத நிலை.
இது குறித்து பலமுறை - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக நகராட்சியில் புகார் தெரிவிக்கப்பட்டு - எவ்வித பிரயோஜனமும் இல்லை.
எனவே - இது குறித்து மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சகத்தின் செயலர் திரு துர்கா ஷங்கர் மிஸ்ரா IAS மற்றும் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் திரு ஹர்மந்தர் சிங் IAS ஆகியோரிடம் மெகா அமைப்பு சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
அதில் -
7 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட பணிகளை, காலக்கெடு விதித்து நிறைவு செய்திட உத்தரவிட கோரப்பட்டுள்ளது.
மேலும் - ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த விநியோக குழாய்கள், பொது மக்கள் அனைவரும் அறியும் வகையில், பகிரங்கமாக தோண்டி எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. பழைய குழாய்கள் மூலம், முறையற்ற இணைப்புகளும், நேரடி இணைப்புகளும் சட்டத்திற்கு புறம்பாக வழங்கப்பட்டன.
இது தவிர - முன் அனுபவம் எதுவும் பார்க்காமல், பொன்னங்குறிச்சி மற்றும் உள்ளூர் விநியோகம் பராமரிப்பு பணிகள் - ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது. அது ரத்து செய்யப்பட்டு, நேர்மையான, தகுதியான நிறுவனம் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட - மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்படவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|