காயல்பட்டினத்தில் லஞ்சம் – ஊழலற்ற நல்ல நகர்மன்றம் உருவாக்கப்பட – ஒத்த கருத்துடைய பொதுநல அமைப்புகள் உள்ளாட்சித் தேர்தலை எந்த வகையில் அணுகலாம் என்பது குறித்து - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு தனது நிலைபாட்டை அறிவித்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சந்திக்கும் மூன்று வகையான தேர்தல்களில் - உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்களே, பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகம் தாக்கம் ஏற்படுத்த கூடிய தேர்தலாகும்.
மூன்றாண்டுகாலமாக தமிழகத்தில் நடத்தப்படாத இந்த தேர்தல், விரைவில் நடைபெறவுள்ளதாக அறிவிப்புகள் வந்துள்ள சூழலில், கடந்த பல ஆண்டுகளாக - காயல்பட்டினம் நகரில் பல்வேறு மக்கள் பணிகளை - இறைவனின் உதவிகொண்டு - செய்துவரும் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) | நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் - இந்த தேர்தலை எவ்வாறு அணுகுவது என பொது மக்களிடம், வினவியிருந்தது.
கருத்து தெரிவித்த பெருவாரியான மக்கள் - ஒத்த கருத்துள்ள அமைப்புகளுடன் தேர்தலில் நிற்கவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், 11-11-2019 அன்று மெகா அமைப்பு - ஒத்தகருத்துள்ள அமைப்புகளுடன், தேர்தல் குறித்து பேசிட - குழு ஒன்றினை அமைத்தது.
இதற்கிடையில் - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பாக - உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து பேசிட அழைப்பு கடிதம் வந்தது. அதன் அடிப்படையில் - மெகா நிர்வாகிகள் மற்றும் பேரவை நிர்வாகிகள், சந்திப்பு - இறைவனின் நாட்டத்தினால் - நவம்பர் 19 அன்று இரவு 8:30 மணி அளவில், பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பிலும் மற்றும் அதன் பிறகு நடந்த சந்திப்புகளிலும் பரிமாறப்பட்ட விஷயங்கள் அடிப்படையில் - கீழே விவரிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் - ஆலோசனைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
இதுவே மெகா அமைப்பின் - ஒத்தக்கருத்துள்ள பல்வேறு அமைப்புகள் - உள்ளாட்சி தேர்தலுக்காக - எவ்வாறு ஒன்றிணையலாம் என்பதற்கான - நிலைப்பாடும் ஆகும்.
=============================
பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம் (COMMON MINIMUM PROGRAMME)
=============================
-- எந்த தனி மனிதரின், அமைப்புகளின், அரசியல் கட்சிகளின் - அழுத்தங்களுக்கு அடிபணியாத, நேர்மையான முறையில் செயல்படக்கூடிய தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரை தேர்தலில் வெற்றிபெற செய்வது
-- நகருக்கு தேவையான அவசியமான பணிகளை அறிந்து, நீதமாக அனைத்து மக்களுக்கும் அவற்றை செய்து கொடுக்க திட்டமிடல்
-- லஞ்சம், ஊழல் ஆகியவற்றை நகராட்சியில் இருந்து கலைந்திட பணியாற்றுதல்
============================
வேட்பாளர்களை அடையாளம் காண - ஒரு குழு / அமைப்பு (COMMITTEE/FORUM)
============================
நேர்மையான, திறமையான வேட்பாளர்களை அடையாளம் காண - ஒரு குழு / அமைப்பு (COMMITTEE/FORUM) அமைக்கலாம்.
அந்த குழுவில் - ஒத்தகருத்துள்ள, மேலே தெரிவிக்கப்பட்டுள்ள CMP மீது முழு நம்பிக்கை கொண்டுள்ள - அமைப்புகள், தனி நபர்கள் - இடம்பெறலாம்.
அந்த குழு - ஒவ்வொரு வார்டில் இருந்தும், விருப்ப மனு பெறலாம்.
பெறப்பட்ட விருப்ப மனுக்கள், குழுவினால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, ஒத்த கருத்து (CONSENSUS) அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படலாம்.
குழுவில் உள்ளவர்களில் - மெஜாரிட்டி, மைனாரிட்டி கருத்துக்கள் என்ற அடிப்படையில் இல்லாமல், ஒத்த கருத்து (CONSENSUS) என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டால் - வேட்பாளர் சிறப்பாக அமையவும், அனைவரின் முழு ஆதரவு பெறவும் வாய்ப்புகள் அதிகம்.
ஒத்தகருத்து எட்டாத அரிய சூழலில், பெறப்பட்ட விருப்ப மனுக்களில் - ஆட்சேபனை அதிகம் உள்ள நபர்களை நீக்கிவிட்டு, மீதமுள்ள வேட்பாளர்களை - கல்வி, அனுபவம் போன்ற தகுதிகள் அடிப்படையில் முடிவு செய்யலாம்.
================================
யாரை வேட்பாளராக தேர்வு செய்யலாம்? யாரை தேர்வு செய்வதை தவிர்க்கவேண்டும்?
================================
சட்ட ரீதியாக - 21 வயது நிரம்பி, அந்த உள்ளாட்சி அமைப்பில் வாக்காளராக இருக்கும் எவரையும் தேர்வு செய்யலாம்.
உறுப்பினர் வேட்பாளரை தேர்வு செய்யும்போது, தலைவருக்கு ஒரு தகுதி, துணைத்தலைவருக்கு ஒரு தகுதி, உறுப்பினர்களுக்கு ஒரு தகுதி என தனித்தனியாக பார்க்காமல் - தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு வேட்பாளரும் – தலைவர் பொறுப்புக்கு பொருத்தமானவர், துணைத்தலைவர் பொறுப்புக்கு பொருத்தமானவர், உறுப்பினர் பொறுப்புக்கு பொருத்தமானவர் - என்ற ஒரே அளவுகோல் படி - முடிந்த அளவு – தேர்வு செய்யப்படவேண்டும்
சமூக பணிகளில் ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்யலாம்.
சமூக பணிகளில் ஏற்கனவே முன் அனுபவம் உள்ளவர்களை தேர்வு செய்யலாம்.
நம் சக்திக்கு உட்பட்டு ஆய்வு செய்ததில் - இவர் லஞ்சம், ஊழலுக்கு துணை புரியாதவர், செய்யாதவர், நகராட்சி பணிகள் என்னென்ன என அறிந்து செயல்படக்கூடியவர், எந்த தனி நபர்/அமைப்பு/கட்சியுடைய, தவறான நெருக்கடிகளுக்கு அடிப்பணியாதவர் என்ற நம்பிக்கையும் வழங்கும் நபர்களை மட்டும் - நாம் வேட்பாளர்களாக தேர்வு செய்யலாம்.
அரசியல் கட்சிகளில் இருப்பவர்களை தேர்வில் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். அவர்களால் - கண்டிப்பாக, சுயமாக செயல்படுவது கடினம்.
ஏற்கனவே - நகராட்சி பொறுப்புகளில் இருந்து - லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டவர்களையும், அதற்கு ஆதரவாக / கண்டிக்காமல் செயல்பட்டவர்களையும் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்
மேலும் விருப்ப மனு சமர்ப்பித்தவர்களில் - ஊழல், லஞ்சத்திற்கு ஆதரவானவர், கண்டிக்காதவர், கண்டுக்கொள்ளாதவர் என அறியப்பட்டால், அது போன்றவர்களையும் தவிர்க்கவேண்டும்
============
அனைத்து வார்டுகளிலும் தேர்வு
============
காயல்பட்டினம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 9 பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1 வார்டு, SC சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊரின் மைய பகுதியில் சுமார் 11 வார்டும், அனைத்து சமுதாய மக்கள் கலந்திருக்கும் விதத்தில் - 3 வார்டும், முஸ்லீம் அல்லாத சமுதாயத்தினர் பெருவாரியாக இருக்கும் வார்டுகள் நான்கும் உள்ளன.
ஊழலற்ற, லஞ்சமற்ற, நேர்மையான - திறமையான நிர்வாகம் என்பது அனைத்து சமுதாய மக்களின் விருப்பம் என்பதால் - நம் தேர்வு 18 வார்டுகளிலும் இருப்பது - முக்கியமும், கட்டாயமும் ஆகும்.
======
பிரச்சாரம்
======
குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் (அமைப்புகள், சமூக ஆர்வலர்கள்) - முழுமையாக - 18 வேட்பாளர்களுக்கும் ஆதரவாக – களம் இறங்க வேண்டும்.
களத்தில் - இந்த குழுவின் திட்டங்கள் என்னென்ன என்பதை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். திட்டங்கள் அடிப்படையில் வாக்கு கேட்கவேண்டும். அப்படி இல்லாமல், இவர்கள் ஊரின் வேட்பாளர்கள், களத்தில் நிற்கும் பிறர் ஊருக்கு எதிரானவர்கள் என்ற தொனி இருக்கக்கூடாது.
ஜனநாயக நாட்டில் - யாரும் தேர்தலில் நிற்கலாம்.
=======
தேர்தலுக்கு பிறகு
=======
இறைவனின் உதவியுடன், இந்த குழுவின் பெருவாரியான வேட்பாளர்கள் - வெற்றிபெற்றால், இந்த குழு - வெற்றி வேட்பாளர்களுக்கு, தலைவர், துணைத்தலைவர், நகராட்சி குழு அங்கத்தினர் - தேர்வு செய்ய வழிகாட்டலாம். நிர்பந்தம் செய்யக்கூடாது
தேர்தலுக்கு பிறகு - குழுவின் வெற்றி வேட்பாளர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை, முற்கூட்டியே தீர்மானித்து - அதில் வேட்பாளர்கள் ஒப்புதலும் பெறலாம்.
வெற்றிபெறும் வேட்பாளர் - சட்டரீதியாக சுயமாக செயல்படவேண்டும் என்பதால், குழு / அமைப்புக்கு கட்டுப்படவேண்டும் என்ற உத்தரவாதங்களை தவிர்த்து, தார்மீக உத்தரவாதங்களை மட்டும் கோரவேண்டும்.
வெற்றி வேட்பாளர்கள் - தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர் ஆனபிறகு - அவர்கள் சிறப்பாக,சுயமாக, செயல்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கலாம்.
இந்த விபரங்கள் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகளிடம் 24-11-2019 அன்று நேரில் வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|