காயல்பட்டினத்தில் தெருநாய்களால் பொதுமக்கள் சந்திக்கும் அவதிகளைக் கருத்திற்கொண்டு, நகராட்சியிடம் நிரந்தரத் தீர்வு கோரி, 18.10.2019. அன்று, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் நகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகும் நிரந்தரத் தீர்வு காண முறையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இம்மாதம் 24ஆம் நாளன்று காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திட அவ்வமைப்பின் சார்பில் காவல்துறை அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களினால் - பொதுமக்களுக்கு தொல்லைகள் அதிகரித்துள்ளன. தடுப்பூசி, கருத்தடை போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக காயல்பட்டினம் நகராட்சி பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறது.
இது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க - அக்டோபர் 18 அன்று வள்ளல் சீதக்காதி திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - நகராட்சி நிர்வாகத்துறைக்கு முறையாக சமர்ப்பிக்கப்பட்டது.
தீர்மானங்கள் வருமாறு:-
இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் - இதற்கான நிரந்தர தீர்வுகாண காயல்பட்டினம் நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தவிர - நகரின் பிரதான வீதிகளில் - பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் - கால்நடைகள் திரிகின்றன. இது குறித்து - மாவட்ட ஆட்சியர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டபிறகு, அவ்வாறு திரியும் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு, குலசையில் உள்ள முகாமில் அடைக்கப்படும் என்று காயல்பட்டினம் நகராட்சி சார்பாக செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால் - இன்று வரை, நகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காயல்பட்டினம் நகராட்சியின் அலட்சியப்போக்கினை கண்டித்து, எதிர்வரும் ஜனவரி 24 வெள்ளியன்று மாலை 4:30 க்கு - இறைவன் நாடினால் - *காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்திட திட்டமிடப்பட்டு, முறையாக காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|