காயல்பட்டினம் நகராட்சியில் ஓடாத வாகனங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் செலவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்கப்படுவதாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு தகவல் வெளியட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் - காயல்பட்டினம் நகராட்சி - பேட்டரியில் இயங்கும் 25 திடக்கழிவு வாகனங்களை (BATTERY OPERATED VEHICLES) வாங்கிய செய்தியினை மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.
அதில் - வாங்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், 100 நபர்களுக்கும் மேல் துப்புரவு பணிகளுக்கு என நகராட்சியில் சம்பளம் வாங்கி வரும் நிலையில், அந்த 25 வாகனங்களும் இயக்கப்படாமல், உரம் தயாரிக்க என பல லட்சம் ரூபாய் செலவில் - காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில் கட்டப்பட்ட மையத்தில் (ONSITE COMPOST CENTRE), கிடப்பில் உள்ளது என்ற செய்தியும் வெளியிடப்பட்டது.
மேலும் - 25 வாகனங்களில் பல வாகனங்கள், பயன்படுத்தப்படாத காரணத்தால் - பல்வேறு கோளாறுகள் அவற்றில் ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விபரங்கள் - சம்பந்தப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதற்கிடையே - காயல்பட்டினம் நகராட்சியில், சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்போது சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் சாதனங்கள் (SOLAR PANELS) பொருத்தப்பட்டு வருகின்றன.
இது சம்பந்தமாக கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது. (உடனுக்குடன் தீர்மானங்களை நகராட்சி வெளியிடுவது கிடையாது என்ற காரணத்தால், அதன் விபரங்கள் தற்போது தான் வெளிவந்துள்ளன).
தீர்மானம் எண் 1874 * படி, 10 லட்சம் ரூபாய்க்கு, *நகராட்சி அலுவலகம் மின்சாரம் கட்டணத்தை குறைத்திட என காரணம் கூறப்பட்டு - சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகள் (SOLAR PANELS) பொருத்திட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு தீர்மானம்படி (#1875), 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பொன்னங்குறிச்சி குடிநீர் தலைமை நீரேற்றம் மையத்தில், இந்த சூரிய கருவி சாதனங்கள் (SOLAR PANELS) பொருத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு தீர்மானம்படி (#1876), 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 25 BATTERY வாகனங்களுக்கு CHARGE ஏற்ற (?), இந்த சூரிய கருவி சாதனங்கள் (SOLAR PANELS) பொருத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
9.8.2019 அன்று நிறைவேற்றப்பட்ட அந்த (#1876) தீர்மானம் வாசகம் வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளில் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்திட 25 எண்ணம் வாங்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், அதற்குரிய பாட்டரிகளுக்கு charge ஏற்றுவதற்குரிய மின் கட்டணத்தினை குறைத்திடும் நோக்கத்தில் சூரிய ஒளி, மின் தகடு () பொருத்துவதற்கு தயாரிக்கப்பட்ட உத்தேச மதிப்பீடு ரூபாய் 10 லட்சத்திற்கும் நகராட்சி வருவாய் நிதியில் செய்வதற்கும் மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.
தீர்மானம்: அனுமதிக்கப்பட்டது.
இந்த தீர்மானங்களில் - வாங்கப்படும் சூரிய ஒளி மின் தகடு - திறன் (CAPACITY) என்ன என்றும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் - எவ்வளவு மின்சாரம் செலவு குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த தீர்மானத்தினை, ஆகஸ்ட் 9, 2019 அன்று - ஜூலை மாதம் புதிதாக ஆணையராக பொறுப்பேற்ற நகராட்சி பொறியாளர் திருமதி புஷ்பலதா நிறைவேற்றியுள்ளார்.
இதில் கேள்வி என்னவென்றால், இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் போது - எதற்காக அந்த தீர்மானத்தை நிறைவேற்றுகிறோமோ, அந்த வாகனங்கள் செயல்பாட்டில் பல மாதங்களாக இல்லை என்ற விபரம் திருமதி புஷ்பலதாவிற்கு தெரியாதா?
பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை, எந்த அடிப்படையில் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் என தீர்மானம் நிறைவேற்றினார்?
அந்த வாகனங்கள் வாங்கப்பட்டு ஓர் ஆண்டாகியும் செயல்பாட்டிற்கு கொண்டு வராமல், தான் பொறுப்பிற்கு வந்து அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்காமல் - காயல்பட்டினம் மக்களின் பொது நிதி பணத்தில் - 10 லட்ச ரூபாயினை எந்த காரணத்திற்காக, ஆணையர் (பொ) திருமதி புஷ்பலதா செலவு செய்கிறார்?
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|