காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் 2020ஆம் ஆண்டு - புத்தாண்டுக்குப் பிறகு மருத்துவர்கள் இல்லாத நிலை தொடராது என - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் முறையீட்டிற்கு மாவட்ட மருத்துவ அலுவலர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆறு மருத்துவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இருப்பினும் - அந்த மருத்துவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு DEPUTATION என்ற அடிப்படையில் அனுப்பப்படுவதால் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனை சேவைகள் பாதிக்கப்படுகிறது.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) - தொடர்ந்து முறையிட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சுகாதாரத்துறையின் இணை இயக்குனராக (JOINT DIRECTOR; HEALTH SERVICES) தற்போது பொறுப்பு வகிக்கும் டாக்டர் ஷ்யாமளா அவர்களை மெகா நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது - மருத்துவர்கள் வெளி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதால் எழும் பிரச்சனைகள் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
அதற்கு பதில் வழங்கிய இணை இயக்குனர், கண் மருத்துவர் டாக்டர் வில்ஃபர் - அறுவை சிகிச்சை பயிற்சிக்காக திருசெந்தூர் மருத்துவமனை சென்று வருவதாகவும், விரைவில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை திரும்புவார் என்றும் தெரிவித்தார்.
மேலும் டாக்டர் ஆல்ஃபர் - உயர்படிப்பு தேர்வு எழுத சென்றுள்ளதாகவும், அவரும் விரைவில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.
டாக்டர் அக்பர்ஷா MD அவர்கள் - அவசர தேவைக்காக வாரத்தில் இரு தினங்களுக்கு மட்டும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை செல்வதாக இணை இயக்குனர் தெரிவித்தார்.
அவரிடம் - சுகாதாரப்பிரிவு உட்பட இதர காலியிடங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இது குறித்து தாம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 சுகாதாரப்பணியாளர்கள் (SANITARY WORKERS) இடத்தில 4 நிரப்பப்பட்டாலும், இருவர் வெளி இடங்களுக்கு DEPUTATION அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
இது தவிர - மருத்துவமனை வேலையாட்கள் (HOSPITAL WORKERS) என 7 இடங்கள் அங்கீகரிக்கப்பட்டாலும், 5 இடங்கள் காலியாகவுள்ளன.
செவிலியர் (NURSES) பொறுப்பு ஓர் இடம் மட்டும் காலியாகவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் 14.
மகப்பேறு உதவியாளர்கள் (MATERNITY ASSISTANTS) 4 இடங்கள் நிரப்பப்பட்டாலும், மூன்று பேர் வெளி மருத்துவமனைக்கு DEPUTATION அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
X RAY கருவி உதவியாளர் இடம் நிரப்பபட்டாலும் - அவர் உடன்குடிக்கு DEPUTATION அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளனர். அவரின் பணியை இருட்டறை உதவியாளர் (DARK ROOM ASSISTANT) செய்து வருகிறார்.
ECG உதவியாளர் இடம் காலியாகவுள்ளது.
சமையல் வல்லுநர் (COOK) பொறுப்புக்கு இரு இடங்களில் ஒரு இடம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|