நிகழ் கல்வியாண்டில் – பள்ளி சாராமல் தனித்தேர்வர்களாக (Private) பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) அரசுப் பொதுத் தேர்வை நேரடியாக எழுத – காயல்பட்டினத்திலிருந்து ஏராளமான மாணவர்கள் நேற்று விண்ணப்பித்துள்ளனர். விபரம் வருமாறு:-
தூத்துக்குடி கல்வி மாவட்டம் – தூத்துக்குடி, திருச்செந்தூர் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கல்வி மாவட்டத்திலிருந்து 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வை நேரடியாக எழுதுவோர், சாத்தான்குளத்திலுள்ள புலமாடன் செட்டியார் அரசு மேனிலைப் பள்ளியில் தேர்வெழுத விண்ணப்பிக்கப் பணிக்கப்பட்டிருந்தனர்.
காயல்பட்டினம் கீழ சித்தன் தெருவில் இயங்கி வரும் எஸ்.எஃப். டியூஷன் சென்டர் ஒருங்கிணைப்பில் - திருக்குர்ஆனை மனனம் செய்வதற்காக பள்ளிக் கல்வியை இடைநிறுத்தம் செய்த மாணவர்களும், விடுபட்ட ஓரிரு பாடங்களைக் கொண்ட மாணவர்களும் என – 3 மாணவியர் உட்பட மொத்தம் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிகழாண்டு தேர்வெழுதுவதற்காக நேற்று (09.01.2020. வியாழக்கிழமை) காலையில் விண்ணப்பித்தனர்.
நிறைவில், நகரின் கல்வி & சமூக ஆர்வலர் சாளை நவாஸ் அவர்களைச் சந்தித்து – TNPSC உள்ளிட்ட அரசு வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான போட்டித் தேர்வுகளை எழுதுவதன் அவசியம் குறித்தும், அவ்வாறு எழுதி எளிதில் அரசு வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள் குறித்த விபரங்களை விளக்கியும் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்தார்.
|